full screen background image

“என்னை அரசியலுக்கு வராதீர்கள் என்கிறார்கள் எனது ரசிகர்கள்..” – கமல்ஹாசன் பெருமிதம்..!

“என்னை அரசியலுக்கு வராதீர்கள் என்கிறார்கள் எனது ரசிகர்கள்..” – கமல்ஹாசன் பெருமிதம்..!

நடிகர் கமல்ஹாசன் தனது 60-வது பிறந்த நாளையொட்டி தனது ரசிகர்களை நேற்று சந்தித்தார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா கலையரங்கில் நேற்று மாலை கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தினரின் சார்பில் கமல்ஹாசனின் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Kamal Haasan Narpani Iyakkam-24

பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு தையல் எந்திரம், மிக்சி, மின் விசிறி, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களை வழங்கினார் கமல்ஹாசன்.

Kamal Haasan Narpani Iyakkam-14

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது, “இது போன்ற விழாவை கடந்த முப்பதாண்டுகளாக நாம் நடத்தி வருகிறோம். ஏழைகளுக்கு பல உதவிகள் வழங்கி வருகிறோம். ரத்ததானம் செய்திருக்கிறோம். இதை பார்த்து இவர் எதை நோக்கி செல்கிறார் என்ற சந்தேக பார்வை நம்மை தொடர்ந்துதான் வருகிறது. ஆனால் நம் அதற்கு இடம் கொடுக்காமல் நற்பணியை மட்டும் செய்து வருகிறோம்.

மற்றவர்களை பார்த்து நாம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நம்மை பார்த்து அவர்கள் ரத்ததானம், கண்தானம் போன்றவற்றை செய்ய கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். என் துறையை சேர்ந்தவர்கள்கூட தங்களது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றியிருக்கிறார்கள். நிச்சயம் இது நமக்கு பெருமைதான்.

இது போன்று நல உதவிகள் செய்து வரும் நமக்கு ஓய்வு வந்து விட்டது என்று கருதக் கூடாது, இதுதான் நமக்கு ஆரம்பம். உங்களிடம் நான், அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன் உதவி செய்யுங்கள் என்று கூறியிருந்தால் அதையும் தெரியாமல் செய்து இருப்பீர்கள். ஆனால் இன்று கேட்டால், ‘ஏன் அண்ணே.. நாம அரசியலுக்கு வரணுமா..?’ என்று கேட்கும் தெளிவு உங்களுக்கு இருக்கிறது. ‘தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள்’ என்று எனக்கு புத்தி சொல்லும் தோழராக வந்து நீங்கள் இருக்கிறீர்கள். இது எனக்கு பெருமை.

நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். நற்பணி மன்றமாக மட்டும்தான் இந்த இயக்கம் இயங்க வேண்டும். எனக்கு பிறகும் இயங்க வேண்டும். உங்களுக்கு பின்னாலும் இயங்க வேண்டும். அதை நீங்கள் மனதில் வைத்து கொள்ளுங்கள்.

நான் சம்பாதித்ததை சினிமாவிலே போட்டு, கடைசியில் தானம் செய்ய ஏதாவது இருக்கிறது என்றால் எதுவும் இருக்காது. இந்த உதவிகள் அனைத்தும் நம் வியர்வையில் நனைந்தவை. இதற்கு நான் கொடுத்தது குறைவு. நீங்கள் கொடுத்ததுதான் அதிகம். நலத்திட்ட உதவிகளுக்கு என் கலை பயன்படுகிறது என்றால், அதுதான் எனக்கு சந்தோஷம்.

நான் எப்போதும் பெரியவன் என்று நினைத்தது கிடையாது. நல்ல கலைஞன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. மிக நல்ல கலைஞனாக மாற்றியது, உங்கள் நற்பணிதான். இப்படியொரு நடிகர் இருந்தார்… தனது ரசிகர்களை நற்பணிக்கு ஈடுபடுத்தினார் என்றால், அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம்.

‘பெற்றால்தான் பிள்ளையா’ இயக்கம் மூலம் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு நான் தகப்பன். அந்த குழந்தைகள் இன்றைக்கு வக்கீலுக்கு, டாக்டருக்கு படிப்பேன் என்கிறார்கள். இதைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆகவே நமக்கு கடமை நிறைய இருக்கிறது.. எனவே இன்னும் கடந்து செல்ல வேண்டிய பாதை இருக்கிறது.

டாக்டர்கள்.. வக்கீல்கள் பலரும் நம் இயக்கத்தில் இருக்கிறார்கள். இலவச இருதய சிகிச்சை செய்த டாக்டர் ரகுபதி இங்கே இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நம்முடன் இருக்கிறார். இந்த உதவிகள் கிடைக்காமல் போயிருந்தால் அந்த குழந்தைகள் இல்லாமலே போயிருப்பார்கள். இங்கே இந்த பேச்சை கேட்கும் அந்த குழந்தைக்கு, இந்த பேச்சு புரியாமல் இருக்கலாம், எதிர்காலத்தில் புரியும். நம்முடைய சேவை எண்ணம் தொற்று நோயைவிட வேகமாக பரவ வேண்டும்.

நமக்கு பூசாரிகள் கிடையாது. தேவைப்பட்டால் அதை தொட்டு பார்த்துவிட முடியும். ஆனால் நமக்கு சேவைதான் முக்கியம். இன்றைக்கு பிரதமர் என் பெயரை சொல்லுகிறார் என்றால், அதற்கு காரணம் நீங்கள். என் பெயர் சொல்லப்படும்போது எல்லாம், நம்மைத்தான் சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால்தான் நமது வேலை தொடரும். நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. செய்ய வேண்டிய வேலை அதிகமாக இருக்கிறது.

மெய்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் அறிந்தவர்கள் நாம். நமக்கு வரும் விமர்சனங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். நிறைய பணிகள் உங்களுக்கு காத்திருக்கிறது. இப்போதைக்கு நான் பாதிதான் சொல்லியிருக்கிறேன். மீதியை உங்கள் நற்பணி சொல்லும். என் பிறந்த நாளை பயன் உள்ள நாளாக மாற்றிய உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்..” என்றார் கமல்ஹாசன்.

Our Score