பத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்

பத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்

முதலில்… தமிழ்த் திரையுலகத்தில் 60 ஆண்டுகளைக் கடந்திருக்கும் சாதனைப் பயணத்திற்காக அண்ணன் கமல்ஹாசனுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்ணன் கமல்ஹாசனுக்கு இப்போது பணத் தேவை இருக்கலாம். யதார்த்தம்தான். கட்சி நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு நிறைய செலவுகள் இருக்கிறது. மறுக்கவில்லை.

தன்னை வைத்து ஒரு விழாவை நடத்தி நிதி திரட்டுகிறார். தவறில்லை.

அதனை ஒரு தனியார் சேனல் குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறது. தவறில்லை. பணம் அண்ணனுக்குக் கிடைத்தால் அவருக்கு நல்லதுதான்.

நிகழ்ச்சிக்கு யார், யாரை அழைப்பது என்பது அண்ணனின் முடிவுதான். மாற்றுக் கருத்தே இல்லை.

இதில் பத்திரிகையாளர்கள் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில் இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கான விழா அல்ல. திரையுலக வாழ்க்கையைப் பாராட்டுவதற்கான விழா.

இந்த விழாவை தனியார் டிவி குத்தகைக்கு எடுத்துவிட்டதால் வேறு டிவிக்களை சேர்ந்த பத்திரிகையாளர்களை அலுவல் நிமித்தம் அழைக்க முடியாது என்பதும் ஏற்கக் கூடியதுதான். நியாயமானதுதான்.

ஆனால், தினச் செய்திகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்துவிட்டு மற்றைய இணையத் தளச் செய்தியாளர்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

செய்திகளை மட்டும் அனைத்துத் தரப்பு பத்திரிகையாளர்களுக்கும் அனுப்பி பிரசுரிக்கும்படி கேட்கிறார்கள். செய்தியை பிரசுரிக்கிறோம். பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு வருகிறது. அடித்துப் பிடித்து வருகிறோம். அதையும் பதிவிடுகிறோம். இன்னும் சொல்லப் போனால் தினச் செய்திகளைவிடவும் மிக அதிகமான செய்திகளைப் பதிவிடுவது இணையத் தளங்கள்தான்.

அவரைப் பற்றியும், தமிழ்த் திரையுலகில் அவர் செய்திருக்கும் சாதனைகளைப் பற்றியும் இணையத்தளச் செய்தியாளர்கள் தங்களது செய்தித் தளங்களில் எழுதிக் குவித்து வைத்திருப்பவைதான் வருங்கால சமூகத்தினரிடம் அவரைப் பற்றி புரப்புரை செய்யப் போகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இது அவருக்கும் நன்கு தெரியும். 

ஆனால், ஒரு பெரிய நிகழ்ச்சி என்றால் தினச் செய்தி பத்திரிகையாளர்கள் மட்டுமே போதும்.. மற்றவர்கள் வேண்டாம் என்று நினைக்கும் எண்ணம் அண்ணன் கமல்ஹாசனுக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை.

நேற்றைய தினம் இணையத்தள பத்திரிகையாளர்கள் அனைவரும் இலவு காத்த கிளியாக விழாவுக்கு அழைப்பு வரும் என்று கடைசிவரையிலும் காத்திருந்து ஏமாந்து போனார்கள்.

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமாக வைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை பாகப் பிரிவினை செய்யும் கலாச்சாரத்திற்குள், அண்ணன் கமல்ஹாசனும் வந்துவிட்டார் என்பது துயரச் செய்தி..!

ஏற்கெனவே இதே தமிழ்த் திரையுலகத்தில் நிறைய பேர் ஏதோ ஒப்புக்கு அழைப்பதாகச் சொல்லி செய்திகளை மட்டும் அனுப்பி ‘போனால் போகுதென்று உங்களை பத்திரிகையாளர்களாக அங்கீகரிக்கிறோம்’ என்று உள்ளுக்குள் மமதையில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வரிசையில் எங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அவமானம், நேற்றைய கமலின் 60-ம் ஆண்டு விழாவுக்கு எங்களுக்கு வராத அழைப்பு..!

நல்லது..

சில நல்ல கலைஞர்களும் அரசியலுக்கு போனால் அரசியல்வியாதியாகிவிடுவார்கள் என்று பார்த்திருக்கிறோம். இப்போது அண்ணன் கமல்ஹாசனின் முறை.. அவரும் அரசியல்வியாதியாகிவிட்டார் என்பதை இதன் மூலமாக உணர்கிறோம்.

வாழ்த்துகள் அண்ணே..

நீங்கள் அரசியலில் மென்மேலும் உயர வாழ்த்துகிறோம்..!

Our Score