‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்

‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ‘சுபாஷ்’ என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றொரு நடிகை அகான்ஸா பூரி வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக டூயல் ரோலில் நடித்துள்ளார். மேலும், ராம்கி, யோகி பாபு, சாரா, சாயாசிங், சாயாஜி ஷிண்டே மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதை, இயக்கம் – சுந்தர்.சி., திரைக்கதை – சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி., இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, ஒளிப்பதிவு – டட்லீ, படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், வசனம் – பத்ரி, கலை இயக்கம் – துரைராஜ், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – பிருந்தா, தினேஷ், பாடல்கள் – பா.விஜய், ‘ஹிப் ஹாப்’ தமிழா, தயாரிப்பு மேற்பார்வை – P.பால கோபி, தயாரிப்பு – ஆர்.ரவீந்திரன். நேரம் : 2 மணி 38 நிமிடங்கள்.

‘மத கஜ ராஜா’ மற்றும் ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குநர் சுந்தர்.சி.யும், நடிகர் விஷாலும் மூன்றாவது முறையாக இந்த ‘ஆக்‌ஷன்’ திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

‘ஆக்சன்’ என்ற பெயருக்கேற்றபடி படம் முழுவதுமே ‘ஆக்சனாக’த்தான் இருக்கிறது.

‘சுபாஷ்’ என்னும் விஷால், ராணுவத்தில் கர்னலாக இருக்கிறார். இவருடன் இவரை ஒன் சைடாக லவ்வும் தமன்னாவும் கர்னலாக இருக்கிறார்.

விஷாலின் அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். இவருடைய மகனும் விஷாலின் அண்ணனுமான ராம்கி, பழ.கருப்பையாவின் கட்சியில் முக்கிய தலைவர். அடுத்த முதல்வராகப் போகிறார்.

விஷாலின் சகோதரியின் கணவர் சாரா. ராம்கியின் மனைவி சாயாசிங். சாயாசிங்கின் தங்கை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த ஐஸ்வர்யாவை லவ்விக் கொண்டிருக்கிறார் விஷால்.

இந்த நேரத்தில் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் தான் பதவி விலகிக் கொண்டு, தனது மகனான ராம்கியை முதல் அமைச்சராக நினைக்கிறார் பழ.கருப்பையா.

இவர்களுடன் மத்தியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சி கூட்டணியில் சேர்கிறது. இந்தக் கட்சியின் தலைவர்தான் அடுத்த பிரதமர் என்று பேசப்படுகிறது.

இரு கட்சிகளும் இணைந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வருங்கால பிரதமரும் வருகிறார். வந்த இடத்தில் அதே மேடையில் குண்டு வெடிக்கிறது. இந்தக் குண்டு வெடிப்பில் அந்தப் பெரிய தலைவர் கொல்லப்படுகிறார். கூடவே சில பொதுமக்களும், விஷாலின் காதலியான ஐஸ்வர்யா லட்சுமியும் இறந்து போகிறார்கள்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ராம்கி மட்டும் தப்பிவிடுகிறார். ஆனால் இவர்தான் இந்தக் குண்டு வெடிப்புக்கு மூல காரணம் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். இந்தச் சூழலில் திடீரென்று ராம்கியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த அலங்கோலங்களுக்கு யார் காரணம் என்று கண்டறிய நினைக்கிறார் விஷால். இந்தக் கொலைகளின் பின்னணியில் பெரும் சதி இருப்பதை அறிந்து அதைக் கண்டுபிடிக்க நாடுவிட்டு நாடு பறந்து போய் ‘ஆக்சன்’ செய்து சதிகாரர்களைக் கண்டறிகிறார் விஷால். அது எப்படி என்பதுதான் இந்தப் படத்தின் பரபர திரைக்கதை.

ஊட்டி, சென்னை, லண்டன், துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல நாடுகளைச் சுற்றியலைந்து ‘ஆக்சன்’ செய்ய வைத்திருக்கிறார் தயாரிப்பாளர். அவருடைய தைரியத்திற்கும், தாராள மனதிற்கும் முதற்கண் நமது பாராட்டுக்கள்.

விஷால் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது சண்டை காட்சிகளைப் பார்த்தாலே புரிகிறது. தெரிகிறது. அன்பறிவ் இரட்டை இயக்குநர்களின் அமைப்பில் பல சண்டை காட்சிகள் கண்ணைச் சுழட்டுகின்றன. துருக்கி மலைப் பிரதேசத்தில் நடக்கும் சண்டையும், அகான்ஷா பூரியுடன், விஷால் இடும் சண்டைக் காட்சியும் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது.

இடையிடையே ஐஸ்வர்யா லட்சுமியுடனும், தமன்னாவுடனும் டூயட் பாடுகிறார் விஷால். ஐஸ்வர்யா லட்சுமிக்கு வெட்கம் கூடவே பிறந்ததுபோலும். அப்படி வெட்கப்படுகிறார். அதற்காக பதக்கம் வாங்கும் நேரத்திலும் முத்தம் கொடுத்தால்தான் மேடைக்கு போவேன் என்றெல்லாம் சொல்லி கிளுகிளுப்பை ஏற்படுத்துவது அநியாயம் ஸாரே..!

விஷால் அளவுக்கு இல்லையென்றாலும் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு தமன்னாவையும் வேலை வாங்கியிருக்கிறார்கள். சண்டை காட்சிகளிலும் கீழே விழுந்து அடிபடும் அளவுக்கு உழைத்திருக்கிறார் தமன்னா. அவரை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விஷாலின் மச்சானான சாரா சிரிக்க வைக்க முயன்று தோற்றுப் போயுள்ளார். ஆனால் யோகிபாபு கொஞ்சம் நகைக்க வைத்திருக்கிறார். அவருடைய அக்மார்க் ஸ்டைலில், ”உன் ஹைட்டுக்கு ரெண்டே ஸ்டெப்புல இந்தியாவுக்கு போயிரலாமே..?“, ”கருப்பான பசங்களுக்குத்தான் செம பீஸா மாட்டும் போல இருக்கு…“, ”ஒனக்கு ஒருத்தி கிடைக்கலன்னு பிரச்சினை… எனக்கு ஒருத்திகூட கிடைக்கலையேன்னு பிரச்சினை“, ”ஒரு ஹேக்கர இப்படி ஜோக்கர் ஆக்கிட்டிங்களேடா…”, “இந்த நக்கல் பேச்சுக்குத்தான்டா எந்த தமிழனுக்கும் நான் உதவறது இல்ல…”, “உங்களுக்கு சிவப்பா இருக்கற பொண்ணுங்களைவிட கறுப்பா / மாநிறமா இருக்கற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும். சரியா..?”, “கரெக்ட் பண்றவனுங்க பூரா இந்த பார்முலாவைத்தானடா யூஸ் பண்றீங்க..?” என்பது போன்ற பல வசனங்களில் யோகிபாபு லேசாக புன்முறுவல் பூக்க வைத்திருக்கிறார்.

அகான்ஷா பூரி, கொலைகாரி கேரக்டரில் கிடைத்த கேப்பில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இவர் விஷாலுடன் போடும் சண்டை காட்சி சூப்பர்ப்.

பழ.கருப்பையா நல்ல முதல்வராக.. நல்ல தகப்பனாக நடித்திருக்கிறார். டெண்டர் கொடுத்ததற்காக மறைமுகமாக கமிஷன் கொடுக்க முன் வருபவரிடம் “திருடறதுக்கு பயப்படறவன் பிச்சை எடுப்பான்… பிச்சை எடுக்க கூச்சப்படறவன் திருடுவான். இந்த இரண்டையும் செய்ய கூச்சப்படாதவன்தான் லஞ்சம் வாங்குவான்..” என்று சொல்லி மறுப்பது சிறந்த தலைவனுக்கான உதாரணம். ‘சர்க்காரில்’ செய்த பாவத்தை இதில் கரைத்திருக்கிறார் போலும்..!

அண்ணியாக சாயாசிங், உயர் ராணுவ அதிகாரியாக ஷாயாஜி ஷிண்டே, வில்லனாக தாவூத் இப்ராஹிமை ஞாபகப்படுத்தும் கேரக்டரில் கபீர் சிங்.. இஸ்தான்புல்லின் வங்கி மேலாளர் என்று பலரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு பாராட்டுக்குரியவர் படத்தின் வசனகர்த்தாவான பத்ரி.

“அவன் வந்தா ஆப்சன் இல்ல… ஒன்லி ஆக்சன்தான்…”, ”அவ என் பல்ல பாக்கல, ஸ்கில்லா பாத்துட்டா..“, ”ஓட்டுப் போட்ட கறையே ஒரு வாரத்துல போயிரும்… முத்தம் கொடுத்த கறை மட்டும் மூணு மாசமா போகமால் இருக்குமா?”, ”நெருப்ப அப்பறமா அணைக்கலாம்னு விட்றக் கூடாதுப்பா. அது நம்மளை எரிச்சிரும்..“. ”ஓடுறவனுக்கு பல வழிகள் இருக்கு… ஆனால் தொரத்துறவனுக்கு ஒரு வழிதான் இருக்கு…”, “என்கிட்ட வில் பவர் தவிர எந்த பவரும் இல்ல…”, “நான் 1000 பேரை எதிர்த்து நின்னு இருக்கேன்… ஆனா ஒரே ஒரு ஆளைக்கூட எதிர்பார்த்து நின்னதில்லை…” என்று பல இடங்களில் தனது முத்திரைப் பதிக்கும் வசனங்களைக் கொட்டியிருக்கிறார் வசனகர்த்தா பத்ரி.

படம் பல நாடுகளைக் கடந்து சென்றாலும் ஒளிப்பதிவு ஒன்று போலவே இருக்கிறது. தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமாரைவிட்டுவிட்டு இந்த முறை பாலிவுட் ஒளிப்பதிவாளரான டட்லியுடன் இணைந்திருக்கிறார் சுந்தர்.சி.

பாடல்கள் காட்சி மட்டுமில்லாமல் படம் முழுவதும் சேஸிங் செய்யும் காட்சிகள் அத்தனையிலும் கேமிராமேனின் அற்புதமான உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. துருக்கியில் போலீஸாரிடமிருந்து விஷால் தப்பித்து ஓடும் காட்சியை அவ்வளவு வேகமாகவும், அழகாகவும் படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

இத்தனை சிக்கல் வாய்ந்த படத்தை கச்சிதமாக நறுக்கித் தந்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த். இன்னும் கொஞ்சம் காட்சிகளைக்கூட கட் செய்திருக்கலாம். ‘ஹிப் ஹாப்’ தமிழாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் அப்படியே..!

‘ஆக்சன்’ என்ற பெயருக்கேற்ப படத்தில் சண்டைக்குத்தான் முக்கியத்துவம் என்று சொல்லிவிட்டதால் நடிப்பையெல்லாம் பின்னோக்கி நகர்த்திவிட்டார் இயக்குநர். கம்ப்யூட்டர், வங்கிகள், ஹேக்கிங் முறைகள், சேஸிங் என்று அனைத்திலும் வேகவேகமாக காட்சிகளை நகர்த்தியிருப்பதால், நேரம் போவதே தெரியவில்லை. கிளைமாக்ஸ் டிவிஸ்ட் சற்றும் எதிர்பாராதது.

நரேந்திர மோடி ஸ்டைலில் ஒரு தலைவர்.. தாவூத் இப்ராஹிம் போல ஒரு வில்லன்.. நீரவ் மோடி ஸ்டைலில் ஒருவன் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு நாட்டை விட்டு ஓடுவது.. அவனைப் பிடித்து அவன் ஸ்டைலியே அவனது பணத்தை நமது நாட்டுக்கு டிரான்ஸ்பர் செய்வது.. அமெரிக்காவே வலை வீசித் தேடி வரும் குற்றவாளியை.. பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும் மும்பை வெடிகுண்டு குற்றவாளியை நைச்சியமாக டில்லிக்குக் கடத்தி வரும் தந்திரம்.. என்று படம் கிரைம் கதையைப் போல வேகமாக ஓடி முடிந்திருக்கிறது.

எத்தனை லாஜிக் இடறல்கள் கண் முன்னே தெரிந்தாலும்,  அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தைப் பார்த்து என்ஜாய் செய்துவிட்டு போக வேண்டியதுதான் என்று சொல்ல வைத்திருக்கிறது இத்திரைப்படம்..!

நோ லாஜிக்.. நோ மேஜிக்.. பட் ஒன்லி ஆக்சன்..!

Our Score