நடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..!

நடிகை கவுதமியால் கமல்ஹாசனுக்கு நேர்ந்த சங்கடம்..!

நடிகர் கமல்ஹாசனின் கட்சியான ‘மக்கள் நீதி மைய’த்தின் தலைமை அலுவலகமான எல்டாம்ஸ் ரோடு வீட்டின் வாசலில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோட்டீஸை இன்று காலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டினார்கள்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்போ என்று வதந்திகளும், செய்திகளும் வைரஸைவிடவும் அதி வேகத்தில் பரவியது.

kamal-korana-3

அதே நேரம் கமல்ஹாசன் ஈ.சி.ஆர். சாலையில் இருக்கும் தனது இல்லத்தில் கடந்த சில நாட்களாக தனது இரண்டாவது மகளான அக்சராஹாசனுடன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கடந்த 10 தினங்களுக்கு முன்பாகத்தான் துபாயில் இருந்து இந்தியா திரும்பினார். அவர் தற்போது மும்பையில் தனது தாயார் சரிகாவுடன் தனித்திருக்கிறார். அவரும் கொரோனா பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக மகாராஷ்டிரா அரசின் எச்சரிக்கையின்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

kamal-korano-1

இந்த நிலையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் எதற்காக.. யாருக்காக.. என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தன. பரபரப்புகள் ஓடி ஓய்வதற்குள்ளாக மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் ஓடி வந்து தாங்கள் ஒட்டிய அதே ஸ்டிக்கரை தாங்களே கிழித்தார்கள். இதுவும் ஒரு செய்தியாக பரபரப்பாகியுள்ளது.

kamal-korana-5

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சற்று நேரத்திற்கு முன்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்,

“அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே.

எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக் கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்பு என்னதான் பிரச்சினை என்று சென்னை மாநகராட்சியின் தரப்பில் விசாரித்தபோது வந்த செய்தி வேறு மாதிரியாக இருந்தது.

நடிகை கவுதமியும் கடந்த பிப்ரவரி 7-ம் தேதியன்று துபாயில் இருந்து தமிழகம் திரும்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த அனைவரையும் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தும்படி தமிழக அரசு நேற்றைக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி ஆவணங்களை பரிசோதித்ததில் நடிகை கவுதமி துபாய் சென்று திரும்பியது ஆவணங்களில் தெரிய வந்தது.

kamal-korana-6

ஆனால் நடிகை கவுதமியின் பாஸ்போர்ட்டில் அவருடைய வீட்டு முகவரியாக இன்னமும் கமல்ஹாசனின் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை முகவரியே இருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் அங்கே வந்து நோட்டீஸை ஒட்டிவிட்டார்களாம்.

பின்பு உண்மை நிலையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் கமலின் எல்டாம்ஸ் சாலை அலுவலகத்திற்கு தாங்கள் ஒட்டிய அதே நோட்டீஸை கிழித்தெறிந்துவிட்டுச் சென்றார்கள்.

“நடந்த குழப்பத்திற்கு உண்மையான காரணம் இதுதான்…” என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.

கமல்-கவுதமி பிரிவு பற்றி அறியாத தமிழர்களே இருக்க முடியாது. அதிலும் அரசு அதிகாரிகளாக ஓரவளவு படித்தவர்களாக இருப்பவர்களுக்கு நிச்சயமாக இது அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனாலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இந்த வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டோரின் பட்டியல் வந்தபோதே அதைப் படித்துப் பார்த்தவர்கள் அது நடிகை கவுதமிதான் என்றும், ஒட்டப் போகும் வீடு கமலின் அலுவலகம் என்பதும் நன்றாகத் தெரிந்திருக்கும்.

kamal-korana-3

ஏனெனில் ‘கவுதமி’ என்ற பெயரில் கமலின் அலுவலகத்தில் வேறு யார் இருந்திருக்க முடியும்.. அவர்தான் அங்கே இல்லையே என்று மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியிருக்கலாம். ஏனெனில் நோட்டீஸ் ஒட்ட வந்தவர்கள் அதே மாநகராட்சி மண்டலத்தில் பணி புரிந்த ஊழியர்கள்தான். அவர்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாததல்ல..

இருந்தும் கமல் மீது தற்போதைய ஆட்சியாளர்கள் அரசியல் ரீதியாக கோபத்தில் இருப்பதால் இதையும் ஒரு சாக்காக வைத்து அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் விஷயம் அறிந்த பெரிய இடத்தில் இருந்து நோட்டீஸை ஒட்டும்படி சொல்லியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பின்பு தகவல் வெளியாகி பரபரப்பானவுடன் தாங்கள் நினைத்ததை சாதித்த சந்தோஷத்தில், மறுபடியும் அதே ஊழியர்களை அனுப்பி அந்த நோட்டீஸை கிழிக்கவும் செய்திருக்கிறது மேலிடம்.

ஏற்கெனவே ஈ.வி.பி. அரங்கத்தில் ‘இந்தியன்-2’ ஷூட்டிங்கின்போது நடந்த விபத்து பற்றிய விசாரணையிலேயே குற்றவாளியை போலவே கமலிடம் கேள்விகளைக் கேட்டதும், அந்த விபத்து பற்றி அந்த இடத்திற்கு வந்து நடித்துக் காட்டும்படி கேட்டதிலுமே.. இந்த ஆட்சியாளர்கள் நடிகர் கமல்ஹாசனை எந்த அளவுக்கு விரோதியாகப் பார்க்கிறார்கள் என்பது தெரிந்தது. இப்போது மறுபடியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தவுடன் இதுபோல் அவமானப்படுத்துகிறார்கள் என்று ‘மக்கள் நீதி மைய’த்தின் தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள்..!

அதெல்லாம் சரி.. அதான்.. ஒட்டும்.. வேணாம்.. உறவும் வேணாம் என்று கமலைவிட்டுப் பிரிந்து சென்றாரே கவுதமி… இந்த மூன்றாண்டுகளாக பாஸ்போர்ட்டில் தனது முகவரியை ஏன் மாற்றாமல் விட்டிருக்கிறார்..? அதை அவர் செய்திருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காதே..? ஏன் கவுதமி அதைச் செய்யவில்லை..?

கவுதமிதான் விளக்கம் அளிக்க வேண்டும்..!

Our Score