full screen background image

“பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு தராதது சரியானதுதான்” – ஒப்புக் கொண்ட கமல்ஹாசன்..!

“பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு தராதது சரியானதுதான்” – ஒப்புக் கொண்ட கமல்ஹாசன்..!

நேற்று மாலை நடைபெற்ற ‘பாபநாசம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் கமல்ஹாசனிடம் கேள்விகள் பறந்தன. அதற்கு தனக்கே உரித்தானவிதத்தில் சுவையாக பதிலளித்தார் கமல்.

அவற்றில் இருந்து சில பகுதிகள் :

நீங்கள் மலையாள ரீ-மேக்கில் நடித்தது பற்றி..?

“சினிமாவுக்கு மொழி கிடையாது. அப்படி இருந்தால் எம்.ஜி.ஆர். நமக்கு கிடைத்து இருக்கமாட்டார். திறமைதான் சினிமாவுக்கு முக்கியம். தமிழன், மலையாளி என்பதெல்லாம் விலாசம்தான். அது திறமை ஆகாது. நான் பரமக்குடியில் பிறந்து இருந்தாலும், பாதி மலையாளிதான். கேரளாவில் கேட்டால் என்னை முழு மலையாளி என்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு எனக்கு அங்கே வரவேற்பு உள்ளது.”

படத்தில் சுயம்புலிங்கம் வீட்டில் காமராஜர், ஆதித்தனார் படங்களை வைத்திருந்தார்களே.. அது திட்டமிட்டு எடுத்ததா?

“ஆமாம். நிச்சயமாக அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்டதுதான். என்னுடைய ‘தேவர் மகன்’ படத்தில்கூட பெரியார், முத்துராமலிங்க தேவர் படங்களை மாட்டி வைத்து இருப்பேன். அது கதையின் ஒரு பகுதியாக, அடையாளமாக வரும். அது போலத்தான் இதுவும்.”

உலக நாயகன் என்று உங்களுடைய ரசிகர்கள் உங்களை அழைக்கிறார்கள். நீங்கள் இந்தப் படத்தில் போலீஸிடம் அடி வாங்குவது போல் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?

“என்னை நான் குழந்தையாக பார்த்து இருக்கிறேன். எனது பெயர் நடிகன். கமல் என்று அழைக்கும்போது, வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. பட்டங்கள் நூல் கட்டாமல் பறப்பது. ரசிகர்களால் அன்போடு கொடுக்கப்பட்டது. தாய்மார்கள் என்னை சந்திக்கும்போது, அன்போடு நெற்றியில் விபூதி வைக்கின்றனர். அவர்களிடம், பகுத்தறிவு பேசிக்கொண்டு இருக்க முடியாது. ‘உலக நாயகன்’ என்ற பட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நல்ல நடிகன் என்று பேசப்படுவதே போதுமானது. இந்தப் படத்தில் நான் ஒரு கேரக்டர் செய்திருக்கிறேன். அது சுயம்புலிங்கம். அவனுக்கு என்ன நேர்கிறதோ அது அவனது பாத்திரப் படைப்பு. இதில் தவறில்லை.”

‘திரிஷ்யம்’ படத்தில் மீனா நடித்தார். ‘பாபநாசம்’ படத்தில் கவுதமி நடித்துள்ளார். இவர்களில் யார் சிறப்பாக நடித்து உள்ளார்?

“கவுதமி சிறப்பாக நடித்து உள்ளார் என்றால் மீனா முகத்தை திருப்பி வைத்துக் கொள்வார். கவுதமியை தினமும் பார்க்கிறேன். இவரை சமாதானப்படுத்திவிடலாம். வரும் காலங்களில் மீனாவுடன், நான் நடிக்க நேரும்போது சிக்கல் வரும். எனவே இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.”

‘பாபநாசம்’ படம் இணையதளத்தில் வெளியாகி விட்டதே?

“திண்டுக்கல் பூட்டு செய்யும்போதே, சாவியையும் கண்டுபிடித்து விடுவார்கள். ‘பாபநாசம்’ படத்தை இணையதளத்தில் வெளியிட்டும் நாசம் செய்துள்ளனர். அதை ‘டவுன்லோடு’ செய்தும் பார்க்கிறார்கள். இங்கே எத்தனை பேர் பார்க்காமல் இருந்திருக்கிறார்கள் என்றுகூட கேட்கலாம். ஆனால் நான் கேட்க மாட்டேன்.”

குடும்பப் படமான ‘பாபநாசம்’ படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு தரவில்லையே?

“வரிவிலக்கு தராமல் இருப்பதற்கான காரணங்களை அவர்கள் இணைய தளத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதை கொடுக்காமல்விட்டதுகூட ஒருவிதத்தில் சரிதான். அதனை நானும் ஒப்புக் கொள்கிறேன்.”

– இதை ஒத்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும் அண்ணாச்சி… சுயம்புலிங்கம் அண்ணாச்சி நீரு யோக்கியவான்தான்..!

Our Score