full screen background image

‘கல்தா’ – சினிமா விமர்சனம் 

‘கல்தா’ – சினிமா விமர்சனம் 

இந்தப் படத்தை ‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சிவா நிஷாந்த், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, ‘காக்கா முட்டை’ சசி, சுரேஷ் முத்து வீரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை மற்றும் ராஜசிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – கே.ஜெய் கிருஷ், ஒளிப்பதிவு – பி.வாசு, படத் தொகுப்பு – முத்து முனியசாமி, சண்டை இயக்கம் – கோட்டி, நடன இயக்கம் – சுரேஷ், கலை இயக்கம் – இன்ப ஆர்ட் பிரகாஷ், புகைப்படங்கள் – பா.லக்ஷ்மண், விளம்பர வடிவமைப்பு – பிளஸன்ஸ், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, இசை – ‘தேனிசைத் தென்றல்’ தேவா, பாடகர்கள் – செந்தில் ராஜலட்சுமி, ‘கானா’ புகழ் இசைவாணி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, ‘டி ஒன்’, எழுத்து, இயக்கம் – எஸ்.ஹரி உத்ரா.

‘தெரு நாய்கள்’, ‘ படித்தவுடன் கிழித்து விடவும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா எழுதி, இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும்,

‘கல்தா’ என்னும் வார்த்தை வழக்கமாக நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு வார்த்தைதான். இதற்கு ‘ஏமாற்றுதல்’ என்பது அர்த்தம். அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக மக்களுக்கு ‘கல்தா’ கொடுத்திட்டு இருக்காங்க. அதாவது ‘மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்’ என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்களாம்.

இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னையைக் குறித்து பேசுகிறது. அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது.

இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

தமிழக-கேரளா எல்லையில் இருக்கும் ஒரு ஊர் ‘தன்னிலங்காடு’. இந்தக் கிராமத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் படையெடுத்து வரும் கேரளாவைச் சேர்ந்த லாரிகள்.. மருத்துவக் கழிவுகள் மற்றும் அழுகிப் போன உணவுப் பொருட்களை கொட்டிவிட்டுப் போகின்றன. இதனால் இந்தக் கிராமத்தின் சுகாதாரமே கெட்டுப் போய் கிடக்கிறது.

இதனை எதிர்த்து அந்த ஊர் மக்கள் பல முறை போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அந்த ஊரின் கவுன்சிலர் லஞ்சப் பணத்தை வாங்கிக் கொண்டு இதனை அனுமதிக்கிறார். கவுன்சிலரின் கண்ணசைவில் காவல்துறையும் செயல்பட்டு எதிர்க் கேள்வி கேட்காமல் இருக்கிறது.

இதனால் அந்தக் கிராமத்து மக்களுக்கு இனம் புரியாத நோய் ஏற்பட்டு பலரும் இறந்து போகிறார்கள். இதை எதிர்த்து ஊரில் வசிக்கும் ஆண்டனியும், சிவா நிஷாந்தும் போராடுகிறார்கள். ஆனால் போலீஸை வைத்து போராட்டத்தை ஒடுக்குகிறார் கவுன்சிலர்.

ஒரு கட்டத்தில் ஆண்டனியின் மனைவியே நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். இதனையடுத்து இந்தச் சோகத்தைத் தாங்க முடியாமல் ஆண்டனி முழு நேர குடிகாரனாகிறார். அப்படியொரு சூழலில் ஊருக்குள் கழிவுகளை ஏற்றி வரும் லாரியை தடுக்கப் போகிறார் ஆண்டனி. அப்போது அங்கே வரும் கவுன்சிலர் ஆண்டனியை படுகொலை செய்கிறார்.

இதற்கடுத்து ஊரில் இருக்கும் பலரும் ஊரைக் காலி செய்யத் துவங்குகின்றனர். இதைத் தடுக்க சிவா நிஷாந்தும், அவரது அப்பா கஜராஜும் போராடுகிறார்கள். திடீரென்று கஜராஜூம் நோய்வாய்ப்பட்டு இறந்துபோக சிவா நிஷாந்த் கொதித்துப் போகிறார்.

எதையாவது பெரிதாகச் செய்தால்தான் இந்த மருத்துவக் கழிவுகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க முடியும் என்று நினைக்கிறார். அவர் என்ன செய்தார்..? முடிவு என்ன ஆனது..? என்பதெல்லாம் இதற்கடுத்த திரைக்கதைகள்.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சிவா நிஷாந்த் அறிமுக நாயகன் என்கிற உணர்வே வராத அளவுக்கு நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் நடனத்திலும் தேறியிருக்கிறார். இவருக்கான முழு நடிப்புக்கான ஸ்கோப் இந்தப் படத்தில் இல்லாததால் அதிகமாகச் சொல்ல முடியவில்லை.  

ஆண்டனி அந்த மண்ணின் மைந்தனாக.. கோபம் கொண்ட போராளியாக தனது எதிர்ப்பை, கோபத்தை நடிப்பில் பதிவு செய்திருக்கிறார். மனைவி மீது கொண்ட பாசமும், ஊர் மீது கொள்ளும் பாசமும் ஒன்றாக மோதிக் கொள்ளும் காட்சிகளிலும் அந்த இரட்டைத் தலை மனப்பான்மையைக்கூட சரிவர வெளிக்காட்டியிருக்கிறார்.

மனைவியின் மரணத்தால் குடிகாரனாகி அந்த நிலைமையில் லாரியை எதிர்த்து தடுத்து நிறுத்தி பேசுமிடத்திலும், அவருடைய மரணத்திலும் ஒரு பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார் ஆண்டனி. பாராட்டுக்கள்.

நாயகிகளில் ஐரா லட்டு மாதிரியிருக்கிறார். கல்லூரி காட்சிகள் அதிகமில்லை என்பதால் இவருக்கான கூடுதல் ஈர்ப்பு இதில் எதுவுமில்லை. ஆண்டனியின் மனைவியாக நடித்திருக்கும் திவ்யா, உள்ளூர் முகமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். யதார்த்தமான வசனங்களில் அவரது நடிப்பு அந்த விஷயத்தையே ஆழமாக நமக்குள் விதைக்கிறது. சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

கஜராஜ் வர, வர சிறந்த குணச்சித்திர நடிகராகிக் கொண்டே போகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டரின் காலைப் பிடித்து கதறி பிரச்சினையை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வருவது செயற்கையாக இருந்தாலும், அதனை நியாயப்படுத்தி அவர் பேசும் காட்சிகள் நிஜமாகவே தோன்றுகின்றன. இதேபோல் மகன் குடித்துவிட்டு வரும்போது அவர் பேசும் பேச்சும், நடிப்பும் பலே..

கவுன்சிலராக நடித்தவரும், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தவரும் தங்களது கதாபாத்திரத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள். வில்லனாக திடீர் பரிணாமம் எடுத்திருக்கும் அப்புக் குட்டி கவனிக்க வைத்திருக்கிறார் என்றாலும், அவருடைய திடீர் ஞானதோயம் சிரிப்பை வரவழைக்கிறது.

முதலில் ஆண்டனியை கொல்ல ஆட்களை அனுப்பும்போதெல்லாம் இதெல்லாம் தெரியவில்லையா..? திடீரென்று அப்புக்குட்டி நல்லவராவது நகைப்புக்குரிய திரைக்கதை…

ஒரு மிடில் கிளாஸ் படத்திற்கே உரித்தான ஒளிப்பதிவினை குறைந்த செலவில் தந்திருக்கிறார் பி.வாசு. சண்டைக் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. படத் தொகுப்பாளர் என்.முத்து முனியசாமியின் கத்திரி திறமையில் சண்டைக் காட்சிகள் மட்டும் பிரமாதமாக.. ரியல் சண்டையாகத் தெரிகிறது. ஆனால் வேகமில்லாமல் இருப்பதுபோல் தோன்றுகிறது.

ஜெய் கிரிஷின் இசையில் ‘அப்பா‘ பாடல் ரசிக்க வைக்கிறது. அதே சமயம் காதைக் கிழிக்கும் பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். பல நேரங்களில் அதுவே மகா எரிச்சலாகிவிட்டது.

தமிழகத்தில் தேனி, கோவை, நெல்லை மாவட்ட ஓரங்களில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளும், மாமிசக் கழிவுகளும் கொட்டப்பட்டு நமது மாநிலத்தின் சுகாதாரத்தை சீர்குலைத்து வருகின்றன.

சென்ற வருடம் இது தொடர்பாக மாநிலம் முழவதும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்த பின்புதான் அந்தக் கொடுமைகள் கொஞ்சம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வு கருத்துக்களோ அல்லது எதிர்ப்புகளோ திரைத்துறையில் வலுவாக ஒலிக்காத நிலையில், முதல் முறையாக அதையே கருவாக கொண்டு, அதில் கமர்ஷியலையும் சரிவிகிதத்தில் கலந்து இப்படத்தை இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா இயக்கியிருக்கிறார். 

முதற்பாதியில் நேர் பாதையில் சென்ற திரைப்படம் இரண்டாம் பாதியில் சட்டென்று வேறு பாணிக்குத் தாவியதால் சிறிய குழப்பம் ஏற்பட்டது. அதிலும் மிக முக்கியமான இடத்தில் ‘கல்தா’ பாடலை வைத்தது மன்னிக்க முடியாத குற்றம்.

அப்போதுவரையிலும் நம் மனதில் இருந்த அந்த சமூக விரோதிகள் மீதான எதிர்ப்ப்புணர்வு சட்டென கொண்டாட்ட உணர்வுக்கு எப்படி மாறும்..? இயக்குநர் கடைசி கட்ட படத் தொகுப்பின்போதாவது கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

இருந்தாலும், தான் சொல்ல வந்த விஷயத்தை இயக்குநர் ஹரி உத்ரா.. அழுத்தமாகவும், தைரியமாகவும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்தக் ‘கல்தா’ திரைப்படம் ஒரு சமூக விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும் திரைப்படம் என்கிற முறையில் இந்த வருடத்திய திரைப்படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

Our Score