full screen background image

மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் அபாயங்களைப் பற்றிப் பேசும் ‘கல்தா’ திரைப்படம்..! 

மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் அபாயங்களைப் பற்றிப் பேசும் ‘கல்தா’ திரைப்படம்..! 

‘தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா, தற்போது ‘கல்தா’ என்கிற தலைப்பில் தனது மூன்றாவது படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை ‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சிவா நிஷாந்த், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ புகழ் ஆன்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, ‘காக்கா முட்டை’ சசி, சுரேஷ் முத்து வீரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை மற்றும் ராஜசிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – கே.ஜெய் கிருஷ், ஒளிப்பதிவு – பி.வாசு, படத் தொகுப்பு – முத்து முனியசாமி, சண்டை இயக்கம் – கோட்டி, நடன இயக்கம் – சுரேஷ், கலை இயக்கம் – இன்ப ஆர்ட் பிரகாஷ், புகைப்படங்கள் – பா.லக்ஷ்மண், விளம்பர வடிவமைப்பு – பிளஸன்ஸ், பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, பாடகர்கள் – செந்தில் ராஜலட்சுமி, ‘கானா’ புகழ் இசைவாணி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, ‘டி ஒன்’, எழுத்து, இயக்கம் – எஸ்.ஹரி உத்ரா.

kaltha-movie-poster-1

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இரவு பிரசாத் 70 MM தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி உத்ரா, தயாரிப்பாளர் ரகுபதி, நாயகன் சிவ நிஷாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

hari uthra

இந்த நிகழ்வில் இயக்குநர் ஹரி உத்ரா பேசும்போது, “அரசியல் பழகு’ அப்படிங்கிறதுதான் இந்தப் படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த படமா இதை உருவாக்கியிருக்கோம். நிஜத்தில் இப்போ நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப் படம் உருவாகியிருக்கு. இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும்.

‘கல்தா’ என்னும் வார்த்தை வழக்கமாக நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு வார்த்தைதான். இதற்கு ஏமாற்றுதல் என்பது அர்த்தம். அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க. அதாவது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம்.

இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னை குறித்து பேசுகிறது. அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது.

இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்தப் படத்தை எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. இதில் அரசியல் கலந்து இருந்தாலும் ரொம்ப தைரியமா இந்தப் படத்தை தயாரிச்சிருக்கார் ரகுபதி சார். ஒரு தரமான கமர்ஷியல் படமாக இதை உருவாக்கியிருக்கோம்.

‘மேற்கு தொடர்ச்சி மலை’ நாயகன் ஆண்டனி என்னுடைய நெடுநாள் நண்பர். நான் கதை சொன்ன பிறகு ரொம்ப ஈடுபாட்டோட இதில் நடிச்சி கொடுத்திருக்கார். புதுமுக நாயகன் சிவ நிஷாந்த் ரொம்ப அருமையா நடிச்சிருக்கார். அப்பாக்களைப் பற்றி ஒரு அற்புதமான பாடலை வைரமுத்து எழுதியிருக்கார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்திட்டு இருக்கு. வரும் 2020 பிப்ரவரி மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

_MG_1467

தயாரிப்பாளர் ரகுபதி பேசும்போது, “இது எங்களுக்கு முதல் தயாரிப்பு. இயக்குநர் கதை சொன்னபோது ரொம்பவும் பிடித்திருந்தது. எனது மகன் இதில் நாயகனாக நடிச்சிருக்கார். படமும் நல்லா வந்திருக்கு. உங்கள்  எல்லோருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்…” என்றார்.

நாயகன் சிவ நிஷாந்த் கூறியதாவது.. “ஒரு கமர்ஷியல் படமா மட்டுமில்லாம ஒரு நல்ல தரமான படமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தில் நான் அறிமுகமாவது ரொம்ப மகிழ்ச்சி. எல்ல்லோரும் சேர்ந்து நல்ல படம் பண்ணியிருக்கோம். இதுவரை பார்த்தவங்க எல்லோரும் நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க. என்னோட நடிப்பு பத்தி மக்கள் என்ன சொல்வாங்கனு பயங்கர எதிர்பார்ப்போட இருக்கேன். படம் எல்லோருக்கும் பிடிக்கும்…” என்றார்.

Our Score