full screen background image

“களஞ்சியம் உண்மையாகவே என்னை அடித்தார்” – நடிகை பிரியங்காவின் வேதனை பேட்டி..!

“களஞ்சியம் உண்மையாகவே என்னை அடித்தார்” – நடிகை பிரியங்காவின் வேதனை பேட்டி..!

‘கோடை மழை’ படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் மு.களஞ்சியம் நிஜமாகவே அப்படத்தின் நாயகி பிரியங்காவை அடித்ததாகவும், அந்த அதிர்ச்சியில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டதாகவும் சென்ற வாரம் செய்தி வெளியாகியிருந்தது. இது குறித்து நமது தளத்திலும் இது போன்ற ஒரு செய்தியை வெளியிடுவது நியாயமா என்று எழுதியிருந்தோம். 

இப்போது அந்தச் சம்பவத்தில் உண்மையாக நடந்தது என்ன என்று ‘குமுதம்’ பத்திரிகைக்கு நடிகை பிரியங்கா பேட்டியளித்திருக்கிறார். அது இங்கே :

“கடந்த 17-ம் தேதி சங்கரன்கோவிலில் ஷூட்டிங்னு 16-ம் தேதி இரவுதான் சொன்னாங்க. சொன்னது மட்டுமல்லாம உடனடியாக பேருந்தில் கிளம்பி வரவும் சொன்னார்கள். ‘கார் கொடுத்தால் விரைவாக வந்துடுவேன்’ என்றேன். அதற்கு அவர்கள் ‘நீங்களே எடுத்துட்டு வந்துடுங்க… நாங்க டோல்கேட் காசும், டீசல் பணமும் தர்றோம்’னு உறுதி அளிச்சாங்க. திடீருனு கூப்பிட்ட்தால் அவசர அவசரமாக கிளம்பியும் காலை 8 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு போய்ச் சேர முடிந்தது.

ஆனால் அதற்குள் சூட்டிங் ஆரம்பிச்சிருந்தாங்க. நான் லேட்டா போனதுக்கு காரணம் முழுக்க அவர்கள்தான் எனறாலும், இயக்குனர் கதிரவன் என்னை எல்லோர் முன்னிலையிலும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதையும் பொறுத்துக் கொண்டு நடித்தேன்.

சூட்டிங் ஸ்பாட்டுக்கு போன பிறகுதான் இயக்குனர் களஞ்சியம் எனக்கு அண்ணனாக நடிக்க இருப்பதாக சொன்னாங்க. அன்றைய தினம் என்ன ஷாட் எடுக்க போறோம்னு எதுவும் எங்கிட்ட சொல்லவே இல்ல. ஆரம்பத்தில் என்கிட்ட சொன்ன கதையில இது மாதிரி என் அண்ணன் என் கன்னத்துல அடிக்கிற சீனே கிடையாது.

சீன் ஒத்திகை பார்த்தபோது திடீர்னு களஞ்சியம் என் கன்னத்துல அடித்தார். ‘கன்னத்துல அடிக்கிறதா என்கிட்ட யாருமே சொல்லையே?’ன்னு கேட்டேன். சீன் யதார்த்தமா இருக்கணுங்றதுக்காக முன் கூட்டியே சொல்வில்லை என்றார்கள். சரி என்று பொறுத்துக் கொண்டேன்.

அடுத்த ஷாட். கேமரா அவரை நோக்கி வைச்சாங்க. நான் சும்மா சப்போர்ட்டுக்கு மட்டும் நிக்கணும். ஆனா அவர் அப்ப அவ்ளோ போர்ஸா அடிப்பாருன்னு நான் எதிர்பார்க்கலை. கன்னத்துக்கிட்ட அவர் கை வந்ததுதான் ஞாபகம் இருக்கு. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். எங்க அப்பா என்னை ரூமுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் என்னை சுத்தமா யாருமே கண்டுக்கலை.

அடிபட்டு மயக்கமான ஒரு பொண்ணுக்கு மருத்துவ வசதிகூட வேண்டாம்.. அட்லீஸ்ட் டிபன், காபி வேணுமான்னுகூட யாரும் கேக்கலை. மயக்கத்துல என்னை கூட்டிட்டு வந்தப்பகூட போன் பண்ணி இன்னும் ஒரு சீன் பாக்கியிருக்கு.. நடிச்சுக் கொடுக்க முடியுமான்னு கேட்டாங்க.

சென்னை திரும்ப காரும் அரேஞ்ச் பண்ணலை. கேட்டதுக்கு ரொம்ப சீரிஸய்ன்னா நான் ஆம்புலன்ஸ் அரேன்ஞ்ச் பண்றேன். இல்லைன்னா 108-க்கு கூப்பிடுங்கன்னு எகத்தாளமா பேசினாங்க. சரின்னு விட்டுட்டு வந்துட்டோம்.

ஆனா மறுநாள் பேப்பர்ல என்னமோ நான் வலிப்பு வந்து மயக்கம் போட்டு விழுந்ததா சொல்லியிருந்தாங்க. இப்படீல்லாம் பொய் சொன்னா நாளைக்கு என்னோட எதிர்காலம் என்னாகும்..?

சீன் ரியலா வரணும்கறதுக்காக அடிச்சேன்னு சொன்னாலும் இதுநாள்வரைக்கும் அப்படி பண்ணலையே..? கார் கேட்டேன்ற கோபத்தை மனசு வைச்சுட்டு இப்ப என் கேரியரையும் கெடுக்கப் பார்க்குறாங்க..” என்று குமுறித் தள்ளியிருக்கிறார்.

பிரியங்காவின் அப்பாவோ, “தமிழ்ச் சினிமால ஹீரோயினா இருந்தா எல்லாத்தையும் தாங்கிக்கணுமா என்ன..? இதே ஒரு ஹீரோவை அடிச்சா அவங்க சும்மா இருப்பாங்களா..? கொஞ்சம்கூட மனிதாபிமானமே இல்லாம நடந்துக்கிட்டாங்க அவங்க… ஹீரோயினா நடிக்க வர்றது குத்தமா..? எனக்கு என் பொண்ணு உயிரோட இருந்தா போதும்.. அவளுக்கு சினிமாவே வேண்டாம்..” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

கன்னத்தில் அடித்த இயக்குநர் மு.களஞ்சியம் இது குறித்து பேசுகையில், “எங்க அம்மா மேல ஆணையா நான் வேணும்னு அடிக்கலை.. இது யதார்த்தமா நடந்தது.. 7, 8 வருஷமா நான் சினிமால இருக்கேன். அந்தப் பொண்ணு சொல்ற மாதிரி ஒண்ணு நடந்திருந்தா அது சினிமாவுக்கே நான் செய்ற துரோகமாகத்தான் இருக்கும். அது எமோஷனாலான சீன். கன்னத்தைத் திருப்பிக்க வேண்டிய இடத்துல அந்தப் பொண்ணு திருப்பாம விட்டிருச்சு.. அவ்வளவுதான்.. இதை பெரிசு பண்ணாதீங்க..” என்கிறார்.

கேரியர் பாதிக்குமே என்பதற்காகத்தான் இது போன்ற பிரச்சினைகளை நடிகைகள் பெரிதுபடுத்தாமல் சமரசமாகிப் போகிறார்கள். அதனால்தான் குற்றம் செய்தவர்களும் “இது சாதாரணமான விஷயம்.. சின்ன விஷயம்.. பெரிசு பண்ணாதீங்க”ன்னு அலட்சியமா சொல்லிட்டு கடந்து போயிடறாங்க..!

இதில் யாரைக் குற்றம் சொல்வது..?

Our Score