விஷ்ணு மூவி மேக்கர்ஸ் சார்பில் காசிவிஸ்வநாதன், யோகராஜ் இருவரும் இனைந்து தயாரித்துள்ள படம் ‘கள்ளத்தோணி’.
இதில் எடின், யோகராஜ், தீபிகா, ராம், பாஸ்கர் என முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர். இசை – தேவா, ஒளிப்பதிவு – தினேஷ், எழுத்து, படத்தொகுப்பு, இயக்கம் – சதாம்.
படம் பற்றி இயக்குநர் சதாம் பேசும்போது, “தர்மா என்ற தொழில் அதிபரிடமிருந்து பெருமளவு கருப்புப் பணத்தை கண்டுபிடித்து கைப்பற்றுகிறார் வருமான வரித் துறை அதிகாரி. இந்தக் கோபத்தில் அந்த அதிகாரியை கொள்ள கூலிப் படையை நியமிக்கிறார் தர்மா. கூலிப் படையும், அதிகாரியை கொலை செய்கிறது.
அந்தக் கொலைக்கு பேசிய தொகையை தன் உதவியாளர் மூலமாக கூலிப் படை தலைவனுக்கு கொடுத்தனுப்புகிறார் தர்மா. ஆனால் தர்மாவின் உதவியாளர் பணத்தாசையால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறார். சொன்னபடி பணம் கைக்கு வந்து சேராததால் கூலிப் படை தலைவன் தர்மா மீது கோபம் கொள்கிறான்.
தர்மாவிடம் கூலிப்படைக்கு வேறு பணம் கொடுக்க இயலாத சூழ்நிலை. நிலைமையைப் புரிந்து கொள்ளாத கூலிப் படையினர் இப்போது தர்மாவை விரட்டுகின்றனர். இவர்களிடமிருந்து தர்மா எப்படி தப்பித்தார் என்பதை திரில்லராக, அதேநேரம் யதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறேன்.
படப்பிடிப்பு முழுவதும் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்றது. படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. அவையும் யதார்த்தமாகவே இருக்கும்..” என்றார்.











