இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் J.வடிவேல் நடித்து இயக்கியிருக்கும் படம் ‘கள்ளப்படம்’. இத்திரைப்படம் வரும் மார்ச் 20-ம் தேதியன்று வெளியாக இருக்கிறது.
இதில் லட்சுமிப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத் தொகுப்பாளர் காஜின், இயக்குநர் வடிவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. டிரைலரின் ஆரம்பக் காட்சியில் ரஜினி, கமல் ஆகியோர் நடிக்கும் படத்தில் வேலை செய்வது போல் என்று கனவு காணும் நான்கு இளைஞர்களை காண்பிக்கிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் நான்கு இளைஞர்களின் கதை என்று ரசிகர்களின் மத்தியில் ஆவலை தூண்டுகிற வண்ணம் அமைந்துள்ளது இந்த டிரைலர்.
“கோடம்பாக்கத்தில் சினிமா கனவுடன் உலவும் பலருக்கு திரை ஜாம்பவான்களான ரஜினி, கமல் ஆகியோரின் படத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படிப்பட்ட நான்கு பேரின் கதைதான் இந்தக் ‘கள்ளப்படம்’.
சினிமா வெற்றி பெற்றவர்களை மட்டும்தான் கொண்டாடும். அந்த வெற்றியை அடையும் முன் அந்த நபர்கள் கடந்த வந்த பாதையை எவரும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு கலைஞனும் தன் எதிர்காலத்துக்கான கனவை ஒரு புள்ளியில் நிறுத்தியாக வேண்டியிருக்கிறது. அங்கிருந்து அவன் எதிர்கொள்ளும் விஷயங்களின் கோர்வையே இந்தக் ‘கள்ளப்படம்..” என்கிறார் இயக்குநர் J.வடிவேல்.









