விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்‘கள்ளபார்ட்.’
இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். ரெஜினா கேஸண்ட்ரா நாயகியாக நடிக்கவுள்ளார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
வசனம் – ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா, இசை – நிவாஸ் கே.பிரசன்னா, கலை – மாயபாண்டி, படத் தெரகுப்பு – இளையராஜா, சண்டை இயக்கம் – மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை -வி.ராமச்சந்திரன், தயாரிப்பு- எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன்.
‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இத்திரைப்படம் இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியது. இந்த விழாவில் பா.ரங்கநாதன்.எம்.எல்.ஏ., தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், இயக்குநர்கள் விஜய் சந்தர், ஜெயபிரகாஷ், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த படத்திற்காக ஏவி.எம் ஸ்டுடியோவில் பல லட்சம் செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்திலும் தொடர்ந்து சென்னையிலும் முப்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.