full screen background image

அறிமுக பெண் இயக்குநர் சந்திரா இயக்கும் ‘கள்ளன்’ திரைப்படம்

அறிமுக பெண் இயக்குநர் சந்திரா இயக்கும் ‘கள்ளன்’ திரைப்படம்

விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே தமிழ்ச் சினிமாவில் பெண் படைப்பாளிகள் இயக்குநர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

திரையுலகில் ஆண், பெண் பேதமில்லை என்று சொன்னாலும் கோடம்பாக்கத்தில் ஒரு பெண் இயக்குநர் தலையெடுப்பது என்பது இன்னமும் ஆச்சரியமான விஷயமாகத்தான் இருக்கிறது.

இணை, துணை இயக்குநர்களாக பெண்களை பணிக்கமர்த்தி அவர்களுக்கு சினிமா கலையைச் சொல்லிக் கொடுக்கவே நம்முடைய ஆண் இயக்குநர்கள் பலரும் தயங்குகிறார்கள். கடின உழைப்பு என்பதையும் தாண்டி தமிழ்ச் சினிமாவில் தற்போது அதிகம் தலைவிரித்தாடும் ஆண் சார்ந்த விஷயங்களை பெண்களால் சுலபமாக கையாள முடியாது என்பதால் அவர்களுக்கு இயக்குதல் துறையில் வாய்ப்பு கிடைப்பதில்லை..

அதிசயமாக சில குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் மட்டுமே தங்களது துணை இயக்குநர்கள் டீமில் சில பெண்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அமீர், மிஷ்கின் போன்றவர்களும் இதில் அடக்கம்.

இயக்குநர் அமீரிடம் ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, மற்றும் இயக்குநர் ராமிடம் ‘கற்றது தமிழ்’ படத்திலும் இணை இயக்குநராகப் பணியாற்றிய சந்திரா, இப்போது தமிழ்த் திரையுலகில் புதிய பெண் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் தமிழ் இலக்கியத் துறையில் மிகவும் பரிச்சயமானவர். எழுத்தாளர்… பிரபலமான கவிஞரும்கூட..!

chandra thangaraj

இவர் இயக்கவிருக்கும் முதல் படம் ‘கள்ளன்’. இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டைன்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிக்கப் போவது இயக்குநர் கரு.பழனியப்பன். ஏற்கெனவே ‘மந்திரப் புன்னகை’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் கரு.பழனியப்பன் நடிக்கும் இரண்டாவது படம் இது.

Kallan

இந்தக் ‘கள்ளன்’ படத்திற்காக இயக்குநர் சந்திரா தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களம் ‘இவர் ஒரு வித்தியாசமான இயக்குநர்’ என்கிற பார்வையை இப்போதே பெற்றுக் கொடுத்திருக்கிறது.

நம் முன்னோர்களின் காலக்கட்டத்தில் விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பு வாழ்ந்த வேட்டை சமூகத்தினர் இன்றைக்கு நம்மிடையே இல்லை..! அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் கதைதான் இந்த ‘கள்ளன்’ திரைப்படம்.

இந்தப் படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், கே இசையமைக்கிறார். கவிஞர் நா.முத்துக்குமார் பாடல்களை எழுத படத்தின் ஒவ்வொரு துறைக்கும் தகுதியான திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து படத்திற்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சந்திரா.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தேனி, கம்பம், தென் கேரளப் பகுதிகளில் 55 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கவிருக்கிறது.

வாங்க தாயி.. தமிழ்ச் சினிமாவை பெருமைப்படுத்தும்படியாக உங்களுடைய படைப்புகள் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்..! 

Our Score