full screen background image

‘கள்ள நோட்டு’ படத்தில் அசத்தல் வில்லியாக நடித்திருக்கும் காமெடி நடிகை சுமதி..!

‘கள்ள நோட்டு’ படத்தில் அசத்தல் வில்லியாக நடித்திருக்கும் காமெடி நடிகை சுமதி..!

“பணம் ஆறாம் அறிவு போன்றது; அது இல்லாமல் மற்ற ஐந்து அறிவுகளையும் நீங்கள் பயன்படுத்த முடியாது..” என்றார் பெர்னாட்ஷா.

“பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம்; ஆனால், வறுமை நம்மிடம் இருந்து பறித்த சிலவற்றைப் பணத்தால் திருப்பித் தர முடியாது..” என்றார் சார்லி சாப்ளின்.

“பணம் இருந்தால் உபசரிப்பு; இல்லை என்றால் அவமதிப்பு. இதுதான் இன்றைய நாட்டு நடப்பு”!

இப்படிப் பணத்தைப் பற்றிய ஏராளமான பொன்மொழிகள், பழமொழிகள் உண்டு. ஆனால் பணம் பற்றிப் பேசும் அனைவர் மனதிலும் ரூபாய் நோட்டைப் போலவே கள்ள நோட்டைப் பற்றிய ஒரு கறுப்பு நிழலும் வந்து போகும்.

திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம் போலவே கள்ள நோட்டு பற்றிய ஒரு சாகச உணர்வு பலர் மனதிலும் அலையடிக்கும். அப்படிக் கள்ள நோட்டு பற்றிய ஒரு கதையை மையமாக வைத்து இப்போது ‘கள்ள நோட்டு ‘என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தை எம்.ஜி.ரா. ஃபிலிம் பேக்டரி சார்பில் எம்.ஜி.ராஜேந்திரன் தயாரித்துள்ளார்.

இந்தக் ‘கள்ள நோட்டு‘ படத்தின் நாயகனாக எம்.ஜி.ராயன், நாயகியாக மது, வில்லன்களாக குமார், மிப்புசாமி, வில்லியாக சுமதி, நாயகனின் நண்பனாக நா.ரஞ்சித்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் N.ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தினை எம்.ஜி.ராயன் எழுதி, இயக்கியுள்ளார். ஏ.சம்பத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். முத்து கொடப்பா படத் தொகுப்பு செய்துள்ளார்.

வறுமையால் துரத்தப்பட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள் இருவருமே கள்ள நோட்டு என்ற கறுப்புச் சகதிக்குள் சிக்கிக் கொள்வதுண்டு. அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பதுண்டு. அப்படிச் சிக்கிக் கொண்ட ஒருவனின் கதைதான் இந்த ‘கள்ள நோட்டு’ திரைப்படம்.

இந்தக் ‘கள்ள நோட்டு’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

விழாவில் திரைப்படத்தினை இயக்கி உள்ள இயக்குநர் எம்.ஜி.ராயன் பேசும்போது, “கள்ள நோட்டு’ பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. இது நிச்சயமாக வித்தியாசமான கதைக் களம் என்று நம்புகிறேன். இதில் ‘கள்ள நோட்டு’ என்பதைவிட “நல்ல நோட்டுதான் கள்ள நோட்டு” என்கிற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன என்பதைப் படம் பாருங்கள். புரியும்.

இதில் நாங்கள் அரசியல் எதுவும் பேசவில்லை, ஆனால் நாட்டு நடப்பைக் காட்டி இருக்கிறோம். சர்ச்சைகள் எதுவும் எழுப்பவில்லை, ஆனால் உண்மையைக் கூறியிருக்கிறோம்..” என்றார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்துள்ள நடிகை சுமதி பேசும்போது, ‘நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், எனக்கு மறக்க முடியாத படமென்றால் அது இந்த ‘கள்ள நோட்டு’ திரைப்படம்தான். ஏனெனில், இந்தப் படத்தில் ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவத்தோடு என் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் நான் ‘கருங்காலி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது ஒரு கொடூரமான கதாப்பாத்திரம். நடித்து, முடித்து விட்டுப் பார்த்தபோது எனக்கே பயமாக இருந்தது. படத்தில் நான் சுருட்டு பிடித்து நடித்துள்ளேன். அதற்காக நான் சிகரெட் பிடித்துப் பழகினேன். அப்போது புகை மூக்கில் ஏறி ரொம்பவும் சிரமப்பட்டேன். ஆனால் அந்தக் கதாபாத்திரத்திற்காக அதை செய்துள்ளேன்.

இயக்குநர் தனக்குத் திருப்தியாகும் வரையில் காட்சிகளை மீண்டும், மீண்டும் படமாக்கினார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இந்தப் படத்தை செதுக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வசனங்கள் நிச்சயமாகப் பேசப்படும்.  படத்தை திரையரங்கு சென்று அனைவரும் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்..” என்றார்.

விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Our Score