full screen background image

கல்கி 2898 ஏடி – சினிமா விமர்சனம்

கல்கி 2898 ஏடி – சினிமா விமர்சனம்

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ஸ்வப்னா தத், பிரியங்கா தத் இணைந்து தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே மற்றும் திஷா படானியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் ஷோபனா, பசுபதி, ராஜேந்திர பிரசாத், பிரம்மானந்தம், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், அன்னா பென், ராஜமெளலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – நாக் அஷ்வின், ஒளிப்பதிவுஜோர்டி ஸ்டோஜ்க்வாக், இசைசந்தோஷ் நாராயணன், பாடல்கள்சித்தார்த் கரிமா, படத்தொகுப்புகோடகிரி வெங்கடேஷ்வரராவ்.

இத்திரைப்படம் மகாபாரதக் கதையை மையமாக வைத்து உருவாகியிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் 2019-ம் ஆண்டு ஹாலிவுட்டின் ஜாம்பவான் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பில், ராபர்ட் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளியான Alita Battle Angel’ என்ற ஆங்கிலப் படத்தின் திரைக்கதை அமைப்போடு பெருமளவில் ஒத்துப் போகிறது.

மகாபாராத போரில் இருந்துதான் இந்தப் படத்தின் கதை துவங்குகிறது. குருஷேத்திரப் போரின் கடைசி நாட்களில் துரியோதனன் வீழ்த்தப்படுகிறான். அப்போது துரியோதனனின் நெருங்கிய நண்பனான அஸ்வத்தாமன் இதனால் கோபம் கொண்டு தன்னிடமிருக்கும் பிரம்மாஸ்திரத்தை ஏவி பாண்டவர்களின் சேனையையும், பாண்டவர்களின் பிள்ளைகளையும், குதிரை, யானை போன்ற கூட்டத்தையும்  அழிக்கிறான்.

பாண்டவர்களின் மனைவிமார்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளையும் அந்த பிரம்மாஸ்திரம் அழிக்க வருகிறது. அப்போது அர்ஜூன்னின் மகனான போரில் மாண்டு போயிருந்த அபிமன்யூவின் மனைவியான உத்தரையின் சிசுவையும் அது கொல்கிறது. ஆனால், கிருஷ்ணர் அந்தக் குழந்தைக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றுகிறார்.

பாண்டவர்களின் வம்சத்தையே அழிக்க நினைத்த அஸ்வத்தவாமன் மீது கோபம் கொண்ட கிருஷ்ணர் அஸ்வத்தவாமனுக்கு சாபம் கொடுக்கிறார்.உனக்கு மரணமேயில்லை. நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு, காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும், மானுடனாகவும் தவிப்பாயாக” என்று சாபம் கொடுக்கிறார். மேலும் இந்த சாபம் நீங்க வேண்டும் என்றால் நீ பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். தான் கலியுக’த்தில் கல்கி அவதாரமெடுக்கும்போது ன்னை மிகப் பெரிய ஆபத்தில் இருந்து நீதான் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்..” என்கிறார் கிருஷ்ணன்.

அஸ்வத்தவாமன் அதற்குப் பிறகு மகாபாரதக் கதையில் இருந்தே மறைந்து போகிறார். அந்த அஸ்வத்தாமன் கலியுக’த்தில் கல்கி’யாகப் பிறக்கவிருக்கும் கிருஷ்ணரைக் காப்பாற்றுகிறாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தக் கல்கி 2898’ என்ற 2 பாகங்கள் கொண்ட படத்தின் கதை..!

இந்த முதல் பாகத்தில் பகவான் கிருஷ்ணரின் கல்கி அவதாரம் யார் மூலமாக, யாருடைய வயிற்றிலிருந்து பிறக்கப் போகிறது என்பதை மட்டும் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கல்கி பகவான் பிறந்துவிடுவாரா..? அஸ்வத்தாமன் பகவானைக் காப்பாற்றிவிடுவாரா..? மாட்டாரா..? என்பது இரண்டாம் பாகத்தில் வரவிருக்கிறதாம்.

மகாபாரதக் கதை நடந்த திரேதா யுகத்தின் காலக்கட்டம் 6000 வருடங்களுக்கு முன்பு என்பதால் அதைக் கணக்கிட்டு கல்கி அவதாரம் எடுக்கும் கலியுகத்தின் காலக்கட்டமான கி.பி.2898-ம் ஆண்டு இந்தப் படத்தின் சம்பவங்கள் நிகழ்வதாக கதையைப் புனைந்திருக்கிறார்கள்.

இந்த கி.பி 2898-யில் உலகத்திலேயே இந்தியாவில் இருக்கும் காசி மாநகரம்தான் உயிர் பிழைத்திருக்கிறதாம். இந்த நகரத்தில் மட்டும்தான் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இரண்டாம்தர குடிமக்களாக..!

இந்தக் காசி மாநகரம் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கங்கைகூட வற்றிவிட்டதாம். எந்தவிதத் தொழிலும் இல்லாமல் அல்லல்படும் மக்களுக்கு இருக்கும் ஒரேயொரு தொழில் அடிதடி, வெட்டுக் குத்து, கொலைதானாம். இப்போது காசியில் பயன்பாட்டில் இருப்பது பண நோட்டுக்கள் அல்ல. யூனிட்’ என்றழைக்கப்படும் நாணயங்கள்தான்..!

அதே நேரம் இந்தக் காசியைக் கட்டுப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் சுப்ரீம் என்று அவருடைய அடிமைகளால் அழைக்கப்படும்யாஷ்கின்என்ற கமல்ஹாசன். இவர் இருக்குமிடம் பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும் காம்ப்ளக்ஸ் என்ற பகுதி.

இந்தக் காம்ப்ளக்ஸ் பகுதி ஒரு அழகான பிரமிட் மாதிரியான முக்கோண வடிவத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளே சொர்க்க பூமியாகத் திகழும் இந்தக் காம்ப்ளக்ஸூக்குள் வருவதற்கு கட்டுப்பாடு உண்டு.

அது என்னவெனில் காசியிலிருந்து யார் ஒரு லட்சம் யூனிட்டுக்களை சம்பாதித்துக் கொண்டு வருகிறார்களோ, அவர்களே இந்த சொர்க்க பூமியான காம்ப்ளக்ஸூக்குள் நுழைய முடியும்.

அந்தக் காசியிலிருக்கும் அடிதடி கூட்டத்தில் ஒருவர்தான் நமது ஹீரோ பைரவா என்ற பிரபாஸ். பணம் கொடுத்தால் சொல்லும் வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் ஒரு வாடகை ரவுடி. தன்னிடம் இருக்கும் புஜ்ஜி என்ற வாகனத்தை வைத்துதான் இந்த ரவுடி வேலையையும் செய்து வருகிறார் பிரபாஸ்.

இருந்தாலும் தான் இப்போது தங்கியிருக்கும் வீட்டிற்கே வாடகை கொடுக்க முடியாமல் வீட்டு ஓனர் பிரம்மானந்தத்தை தவிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் பிரபாஸ். இப்போது இவருக்கு இருக்கும் ஒரே கவலை.. இன்னமும் 5,000 யூனிட் பணம் கிடைத்துவிட்டால் தன்னிடம் 1 லட்சம் யூனிட்டுக்கள் மொத்தமாக சேர்ந்துவிடும். பின்பு, இதனை வைத்து காம்ப்ளஸூக்குள் சென்று விடலாம் என்பதுதான்.

அதே காசியில் ஒரு கோவிலின் குகைப் பகுதிக்குள் அமைதியாக தனக்கான காலத்தை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார் அஸ்வத்தாமன் என்ற அமிதாப்பச்சன். இதேபோல் காம்ப்ளக்ஸையும், காசியையும் கட்டி ஆண்டு கொண்டிருக்கும் யாஷ்கின் என்ற கமலும் 2000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய உடல் நலிவடையாமல் தடுப்பதற்காக கர்ப்பிணிகளின் வயிற்றில் உருவாகி சிசுக்களுக்கு உணவாகக் கிடைக்கும் சீரத்தை எடுத்துத் தன் உடலில் செலுத்தி தனக்குத்தானே பலம் சேர்க்க நினைக்கிறார் கமல்.

இதற்காக காசியில் இருந்து அப்பாவிப் பெண்களை மட்டும் காம்ப்ளக்ஸின் உள்ளே கடத்திக் கொண்டுபோய் அவர்களை செயற்கை முறையில் கர்ப்பமாக்கி, 150 நாட்கள் கர்ப்ப காலத்திற்குப் பிறகு வர்களது கர்ப்ப்ப் பையில் உருவாகும் அந்த சீரத்தை எடுத்து னது உடலில் செலுத்தி உடல் வலுவைப் பெற்று வருகிறார் கமல்.

அந்த வகையில் இப்போது ‘சுமதி என்ற தீபிகா படுகோனேவும் கமலுக்காக கர்ப்பிணியாகியிருக்கிறார். பல பெண்களுக்கு 150 நாட்களுக்காக கரு கலைந்துபோக, தீபிகாவுக்கு மட்டும் கரு வளர்ந்துவிடுகிறது.

இதனால் தீபிகாவிடமிருந்து அந்த சீரத்தை எடுக்க கமலின் ஆட்கள் முனையும்போது உடன் இருந்த பெண்ணின் உதவியுடன் தீபிகா தப்பித்துவிடுகிறார். தீபிகாதான் கல்கி அவதாரத்தைத் தாங்கும் தாய் என்பதை தனது மாய சக்தியால் உணரும் அஸ்வாத்தாமன்என்ற அமிதாப்பச்சன் தீபிகாவைக் காப்பாற்ற முனைந்து அவரைப் பின் தொடர்கிறார்.

கமலின் ஆட்களும் மாறி, மாறி தீபிகாவைக் கைப்பற்றத் துடித்து தீபிகாவை விரட்டுகின்றனர். இந்தச் செய்தி பிரபாஸையும் எட்ட அவரும் தனது புஜ்ஜியுடன் வந்து சண்டையிடுகிறார். ஆனால், தெய்வ பலம் பொருந்திய அமிதாப்பச்சனுடன், மோத முடியாமல் தோல்வியடைகிறார் பிரபாஸ்.

அதற்குள்ளாக தீபிகாவைக் கூட்டிச் சென்ற பசுபதி டீம் அமிதாப்பச்சனுடன் இணைந்து, அவரை காசியின் இன்னொரு பகுதியான ஷம்பாலாவுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கே தலைவியாக இருக்கும் ஷோபனாவிடம், தீபிகா ஒப்படைக்கப்படுகிறார்.

இருந்தாலும் பிரபாஸ் தனது புஜ்ஜி காரை ஹைடெக்காக மாற்றிக் கொண்டு மீண்டும் தீபிகாவைத் தேடி ஷம்பாலாவுக்கே வந்துவிடுகிறார். அதே நேரம் கமலின் ராணுவமும் அங்கே வந்த சண்டையிட முக்கோணத் தாக்குதலில் முற்றுகையிடப்படுகிறது ஷம்பாலா..!

கடைசியில் என்ன நடக்கிறது..? தீபிகாவை யார் கைப்பற்றியது..? கமலின் ராணுவம் என்னவானது..? ஷோபனாவின் ஆட்கள் தீபிகாவை விட்டுவிட்டார்களா..? பிரபாஸ் தீபிகாவை சிறை பிடித்து பரிசுத் தொகையை வென்றாரா..? ‘அஸ்வாத்தாமன் என்ற அமிதாப்பச்சன் என்னதான் செய்தார் என்பதுதான் இந்த கல்கி 2898 ஏடி படத்தின் முதல் பாகத்தின் சுவையான திரைக்கதை.

படத்தின் நாயகன் பிரபாஸ்தான் என்றாலும், ‘அஸ்வத்தாமனாக’ நடித்திருக்கும் அமிதாப்பச்சன்தான் தியேட்டர் ஆடியன்ஸ் அத்தனை பேருக்கும் பிடித்தமானவராக இருக்கிறார்.

அவருடைய தோற்றம், நடை, உடை, பாவனை.. இந்த வயதிலும் சண்டையிடும் வேகம்.. தீபிகா மீது அவர் காட்டும் அன்பு.. தீபிகாவைப் பார்த்தக் கணத்தில் அவர் திகைத்து நிற்கும் அந்தக் காட்சியில், அவருடைய முகம் காட்டும் நடிப்பு இப்போதும் நம் மனக்கண்ணில் வந்து, வந்து போகிறது.

ஷம்பாலாவில் நடக்கும் சண்டையில் பல்வேறுவிதமான அஸ்திரங்களையும், மாயாஜாலங்களையும் பிரபாஸ் வீசியும், அதை எதிர்கொண்டு பதிலடி கொடுக்கும் நடிப்பில் அமிதாப்பச்சன் தாத்தாவே படத்தின் நாயகனாகிவிட்டார்.

இந்தப் படத்தில் அதி அசுர மொக்கைக் காட்சி எதுவென்றால் அது பிரபாஸின் அறிமுகக் காட்சிதான். 2898-லிலும் நம்ம ஹீரோக்கள் இப்படித்தான் இன்ட்ரோ கொடுத்து பேசுவார்கள் என்பது கேலிக்கூத்து. அந்தக் காட்சியின் நீளத்தையாவது குறைத்து நம்மைக் காப்பாற்றியிருக்கலாம். திஷா பட்டானியுடன் ஒரேயொரு டூயட் காட்சியிலும் ஒப்பேற்றியிருக்கிறார் பிரபாஸ்.

மூன்றாவதாக கலக்கியிருப்பவர் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன்தான். வயதான தோற்றத்தில் சில நொடிகள் கூர்ந்து கவனித்தால்தான் அது கமல் என்பது தெரிய வருகிறது. கடைசியில் ஒரு சொட்டு சீரத்தால் உடல் பலமாகி இளைஞன் கமலாக நமக்குத் தோன்றும் காட்சியில் அழகோ அழகு. அடுத்தப் பாகத்தில் இவருக்கும் அமிதாப், பிரபாஸூக்கும் இடையில் நடக்கும் மோதலைப் பார்க்க இப்போதே ஆர்வமாக இருக்கிறது.

கமலின் முதல் தளபதி, மற்றும் அடுத்தத் தளபதியாக நடித்தவர்களின் வில்லத்தனமான நடிப்பு நம்மைப் பெரிதும் கவர்கிறது. மேலும் அன்னா பென்னின் காதல் 5 நிமிடத்தில் கரைந்து போகும் காட்சியில் மனம் கனக்கிறது. ஷோபனாவின் உறுதியான நடிப்பும், ராஜேந்திர பிரசாத்தின் போர் முழுக்க நடிப்பும், பசுபதியின் வீரத்தனமும் திரைக்கதைக்குள் நாம் ஆழ்ந்து போவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

ஒரு சில காட்சிகளில் வந்து போயிருக்கும் துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜமெளலி ஆகியோர் கவன ஈர்ப்பு மட்டுமே செய்திருக்கிறார்கள். அதிலும் ராஜமெளலியை வைத்து கிண்டல் செய்திருப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் இயக்குநரே..!

ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம் என்றே சொல்லலாம். காட்சிக்குக் காட்சி வித்தியாசமான உலகத்தை, பொருட்களை, மனிதர்களை காட்டுவதால் அதற்கேற்றவாறு கேமிராவும் பயணித்திருக்கிறது.

ஆக்சன் காட்சிகளில் அனைத்து அஸ்திரங்களும் பறக்கும்போது கேமிராவும் உடன் பறந்து நம்முடைய கண்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டே திரையில் ஓடுவதைப் போல தெரிகிறது. ஒரு நொடிகூட கண்ணை திரையைவிட்டு எடுக்கவிடாமல் செய்திருக்கிறார்கள் கிராபிக்ஸ் டிசைனர்களும், ஒளிப்பதிவாளரும்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் ஓகே ரகம்தான் என்றாலும் பின்னணி இசைதான் அழகோ அழகு. அதேபோல் ஒலிப்பதிவையும் கச்சிதமாக ஒரு பிசிறுகூட தட்டாத அளவுக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் பாராட்டுக்கள்.

சிஜி அதிகமாக இருந்தாலும் காட்சிகளும் அதிகப்படியாக எடுக்கப்பட்டு படத் தொகுப்பாளரின் மேஜையில்தான் இது அட்டகாசமான, மேஜிக்கான திரைப்படமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக நிச்சயமாக படத் தொகுப்பாளர் விருதினைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் துவக்கத்தில் சில நிமிடங்கள் வரும் குருஷேத்திர போர்க் காட்சிகள் பிரம்மாண்டத்துடன் நம் கண்ணைக் கவர்ந்திழுக்கின்றன. மேலும் கலை இயக்குநரின் கை வண்ணத்தில் அந்தக் காசியின் உட்புறத் தோற்றம், காம்ப்ளக்ஸின் வடிவமைப்பு, உட்புற வடிவமைப்பு, ஷம்பாலா நகரம், கார்களின் அணிவகுப்பு, அட்வான்ஸ்டு எக்யூப்மெண்ட்களை வைத்து மின்னல் வேகத்தில் உருவாகும் ஆயுதக் கேந்திரங்கள், போர்க்களக் கருவிகள், கமலின் தளபதிகள் வலம் வரும் பறக்கும் தட்டுக்கள் என்று சகலத்திலும் சிஜியின் கைவண்ணம் இருந்தாலும், கலை இயக்குநரின் வடிவமைப்பை நாம் மெச்சியே ஆக வேண்டும். இவருக்கும் ஒரு விருது காத்திருக்கிறது.

பொதுவாக இந்தக் கல்கியின் உலகத்தைப் புரிந்து கொள்ள துவக்கத்தில் நமக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது. ஆனாலும் போகப் போக கதைக்குள் நம்மை இழுத்துவிட்டதால், எளிதாக அந்தப் பறக்கும் கார்களிலேயே நாமும் பயணம் செய்ய முடிகிறது.

பல ஹாலிவுட் படங்களில் நாம் பார்த்த சண்டை காட்சிகள், காமிக்ஸ் காட்சிகளெல்லாம் இந்தப் படத்திலும் இடம் பெற்றுள்ளன.

ஸ்டார் வார்ஸ்’, ‘மார்வெல் சீரீஸ்’ படங்கள், ‘மேட்மேக்ஸ்’, ‘கேம் ஆஃப் தி திரோன்’, ‘லார்டு ஆஃப் தி ரிங்ஸ்’, ‘ஆதி புருஷ்’, ‘பாகுபலி’, ‘அமரசித்ரா’ கதைகள், ‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று நம்மை ஆச்சரியப்படுத்திய அத்தனை பிரம்மாண்டமான சாதனை திரைப்படங்களின் கிராபிக்ஸ் சாயலும் இந்தப் படத்தில் கையாளப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனாலும் இது போன்ற கதைகளை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களில் இது நிச்சயமாகத் தவிர்க்க முடியாததுதான்..!

இருந்தாலும் இது நமது தமிழ்ப் படம் என்பதால் அந்தக் கிராபிக்ஸ் காட்சிகளைக் கூடுதல் கவனத்தோடும், சந்தோஷத்தோடும் ரசிக்க முடிந்திருக்கிறது.

இப்படியொரு பிரம்மாண்டமான கிராபிக்ஸ் வித்தைகளோடு வேறெந்த இந்தியத் திரைப்படமும் இதுவரையிலும் வந்ததில்லை என்பதால் நிச்சயமாக இந்தப் படம் கொண்டாட வேண்டிய திரைப்படம்தான்.

திரையரங்குகளில் இதனைப் பார்த்து இதன் உண்மையான, புதுமையான அனுபவத்தை உணருங்கள். திரைப்படங்கள் மீதான உங்களது பார்வை நிச்சயமாக உயரும். சினிமாக்களை பார்க்க விரும்பாதவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயமாக இனிமேல் சினிமாக்களை பார்க்க விருப்பப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கல்கி 2898 ஏடி இந்திய சினிமாவின் புது அவதாரம்..!  

RATING : 4.5 / 5 

Our Score