‘நம்ம ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’, ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜ புஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது.
ராஜ புஷ்பா பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜேஷ்வரி மணிவாசகம் ‘களவாணி மாப்பிள்ளை’ என்ற படத்தை தற்போது தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தை மறைந்த இயக்குநர் மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் எழுதி, இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சரவணன், அபிமன்யு, இசை – என்.ஆர்.ரகுநந்தன், பாடல்கள் -மோகன்ராஜன், ஏக்நாத், கலை – மாயா பாண்டி, படத் தொகுப்பு – பொன் கதிரேசன், நடனம் – தினேஷ், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை – சிவச்சந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட், இணை தயாரிப்பு – திருமூர்த்தி, தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம், எழுத்து, இயக்கம் – காந்தி மணிவாசகம்.
படம் பற்றி இயக்குநர் காந்தி மணிவாசகம் பேசுகையில், “என் அப்பா மணிவாசகம், எப்போதும் தன் படங்களில் ஒரு பார்முலாவை வைத்திருப்பார்.. மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடிகளை வைத்திருப்பார். அதனால்தான் அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியலாக வெற்றி பெற்றது.
அதைத்தான் இந்தப் படத்தில் நானும் பின்பற்றியிருக்கிறேன். நகைச்சுவை கலந்த ஒரு குடும்பக் கதையை என்னுடைய முதல் படத்திற்காக தேர்வு செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் மோதல் கதைகள்தான் சினிமாவில் வந்திருக்கின்றன. ஜெயித்திருக்கின்றன.
மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல்தான் வரும். ஆனால், அமோகமாக வெற்றி பெறும். அதன் அடிப்படையில்தான் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாயகன் தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்டபோது முதலில் தயங்கினார். பின்பு முழுக் கதையையும் கேட்ட உடன் ஓ.கே. சொன்னார். அந்தளவுக்கு மாமியார்-மருமகன் பிரச்சனையை நகைச்சுவையாக கையாண்டிருக்கிறோம். ஒரு ஜாலியான முற்றிலும் பொழுதுபோக்கு படமாக இந்த ‘களவாணி மாப்பிள்ளை’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. படம் இம்மாதம் வெளியாகவுள்ளது..” என்றார் இயக்குநர் காந்தி மணிவாசகம்.










