வஞ்சகர் உலகம் – சினிமா விமர்சனம்

வஞ்சகர் உலகம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை தயாரிப்பாளர் மஞ்சுளா பீதா தயாரித்துள்ளார். புதுமுகம் சிபி கதாநாயகனாகவும், அனிஷா அம்ப்ரோஸ் மற்றும்  சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

மற்றும் குரு சோமசுந்தரம், விசாகன், அழகம் பெருமாள், ஜான் விஜய், ஹரிஸ் பெரடி, ரவீந்தர், வாசு விக்ரம், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, ‘சிசர்’ மனோகர், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராட்ரிகோ, இசை – சாம் C.S., படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – A.ராஜேஷ், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் ஷாம், உடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, உடைகள், எம்.முகமது சுபீர், ஒப்பனை – சி.ஹெச்.வேணு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஒலி கலப்பு – டி.உதயகுமார், ஸ்டில்ஸ் – முத்துவேல், தயாரிப்பு வடிவமைப்பு – கபிலன், தயாரிப்பு ஆலோசனை – ஜே.கே.பிரசன்னா, தயாரிப்பு நிர்வாகம் – கே.மணிவர்மா, இணை இயக்கம் – ரமேஷ் மரபு, வசனம் – வி.விநாயக், தயாரிப்பு – பி.வி.மஞ்சுளா, கதை, திரைக்கதை, இயக்கம் – மனோஜ் பீதா.

இயக்குநர் மனோஜ் பீதா, இயக்குநர் S.P.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில் வெளிவந்திருந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. இந்த ‘வஞ்சகர் உலகமும்’ அது போன்ற திரில்லிங் உணர்வை கொடுத்திருக்கிறது.

வடசென்னையில் போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான துரைராஜ் என்பவரைப் பிடிக்க முயல்கிறது காவல்துறை. ஆனால் அவர் யார்.. அவர் எப்படியிருப்பார்.. அவருடைய புகைப்படம்கூட போலீஸுக்கு இதுவரையிலும் கிடைக்காமல் இருக்கிறது.

இந்த நேரத்தில் ஒரு பத்திரிகை நிருபர்களான விசாகன் வணங்காமுடியும், அவரது சக பத்திரிகையாளரான அனிஷா அம்புரோஷும் துரைராஜுக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஜான் விஜய்யை கடலுக்குள் போய் பேட்டியெடுக்கிறார்கள். இதனை வைத்து போலீஸ் ஜான் விஜய்யை கைது செய்து சிறையில் அடைக்கிறது.

இந்த நேரத்தில் அதே பத்திரிகையில் கணிணிப் பிரிவில் பணியாற்றும் சிபியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் சாந்தினி என்னும் மைதிலி கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். சந்தேகத்தின்பேரில் போலீஸ் சிபியை பிடித்து வந்து ஸ்டேஷனில் வைத்து விசாரிக்கிறது.

சிபியின் மீது அக்கறை கொண்ட விசாகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் வந்து சிபியை மீட்கிறான். இருந்தாலும் சாந்தினியை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரிக்கத் துவங்குகிறார்கள் விசாகனும், அனிஷும்.

இந்த விசாரணையின்போது கொலை செய்யப்பட்ட சாந்தினியின் கணவரான ஜெயப்பிரகாஷூக்கு ஆதரவாக போதை மருந்து கடத்தல் டானான துரைராஜின் இடது, வலது கரமாகத் திகழ்ந்த சம்பத் வந்து நிற்க.. அனைவருக்கும் குழப்பம் கூடுகிறது.

ஏனெனில் இதே சம்பத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பாக போலீஸ் என்கவுண்ட்டரில் கொலை செய்துவிட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகியிருந்தன. போலீஸாரும் அதனை உண்மை என்றே நம்பியிருந்தார்கள். சம்பத்தை சுட்ட போலீஸ் அதிகாரியான அழகம்பெருமாள் இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அந்தத் தாக்குதலின்போது தன்னுடைய காலில் அடிபட்டு இப்போதும் நொண்டியபடியேதான் நடந்து வருகிறார்.

இதையெல்லாம் கணக்குப் போட்டு்ப் பார்க்கும் விசாகன் அண்ட் கோ., இந்த வழக்கில் சம்பத் உள்ளே வருவதால் உண்மையான குற்றவாளி யாராக இருக்கும் என்ற ஐயப்பாட்டில் தன்னுடைய பத்திரிகை சார்பாகவும் இந்த வழக்கில் துப்பறிய முனைகிறார்கள்.

இன்னொரு பக்கம் லோக்கல் இன்ஸ்பெக்டருக்கு சிபியின் மீதான சந்தேகம் குறையவே இல்லை. போதாக்குறைக்கு சாந்தினியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மூலக்கூறுகள் சிபியுடன் ஒத்துப் போவதை அறிந்ததும் சிபிதான் கொலைகாரன் என்று திடமாக நம்புகிறார் இன்ஸ்பெக்டர் வாசு விக்ரம்.

இதற்கிடையில் ஜெயப்பிரகாஷ் மீதும் சந்தேகம்வரும் அளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கத் துவங்க.. இதை வைத்து சம்பத்தைப் பிடித்து சம்பத் மூலமாக துரைராஜையும் பிடித்துவிடலாம் என்று போலீஸ் உயரதிகாரிகளும், பத்திரிகை முதலாளியும் நினைக்கிறார்கள்.

இதற்காக இவர்கள் ஒரு பக்கம் முனைப்புடன் துப்பறியத் துவங்க.. மறுபக்கம் இன்ஸ்பெக்டர் சிபியை கைது செய்து சிறையில் அடைக்க முயல்கிறார். சிபியோ தான் இந்தக் கொலையைச் செய்யவில்லை என்று உறுதியாய் சொல்கிறார். இன்னொரு பக்கம் விசாகன் சம்பத் என்னும் குரு சோமசுந்தரத்துடன் நெருங்கிப் பழகி துரைராஜை கண்டறிய முனைகிறார்.

சாந்தினியை உண்மையில் கொலை செய்தது யார்.. சம்பத்துக்கும், ஜெயப்பிரகாஷுக்கும் இடையிலான உறவு என்ன.. ஜெயப்பிரகாஷ் சம்பத்தை பார்த்து பயப்படுவது ஏன்.. துரைராஜை கண்டுபிடித்தார்களா.. சிபி தப்பித்தாரா.. என்கிற எல்லா கேள்விகளுக்கும் விடை தருவது போல கிளைமாக்ஸை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள் படக் குழுவினர்.

ஒட்டு மொத்த படத்தையும் எட்டுப் பிரிவுகளாகப் பிரித்து, அந்த எட்டுக் கதைகளுக்கும் தலா கால் மணி நேரத்தை ஒதுக்கி அவையனைத்தையும் அடுத்தடுத்த காட்சிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார் இயக்குநர். அத்தனை கச்சிதமாக இருக்கிறது திரைக்கதை.

மிகச் சிறந்த இயக்கத்தை இயக்குநர் கொடுத்திருப்பதால் அனைத்து கேரக்டர்களும் மிக நன்றாகவே நடித்துள்ளார்கள். எந்த நேரமும் சிகரெட்டும் கையுமாய் இருக்கும் ஹீரோ சிபியின் நடிப்பில் புதுமுகம் என்றே தெரியவில்லை. இவருக்கும் அனிஷுக்கும் இடையிலான சண்டையை வெகுவாக ரசிக்க முடிகிறது.

சாந்தினியை லுக் விடும் காட்சிகளிலேயே தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் சிபியும், சிபியை அடிக்கடி பார்க்கும் சூழலில் மெல்ல, மெல்ல அவரை பார்க்க ஏங்கும் சாந்தினியின் மைண்ட் செட்டையும் இயக்குநர் மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தன்னை கைது செய்து சிறையில் வைத்தால் தனது வாழ்க்கையே காணாமல் போய்விடும் என்று சொல்லி அனைவரையும் பகைத்துக் கொள்ளும் காட்சியில் சிபி என்ற இளைஞரே காணாமல் போய் சண்முகமே கண்ணில் தெரிகிறார்.

கடைசிவரையிலும் அந்த இரவில் தனக்கு நடந்தது என்ன என்பதே தெரியாமல் அவர் இருப்பதும், அந்தக் காட்சிகள் மெல்ல, மெல்ல அவருக்குள் நினைவுக்கு வருவதும், சுவையான திரைக்கதைக் காட்சிகள்.

சாந்தினி தான் ஆசைப்பட்ட வாழ்க்கை தனக்குக் கிடைக்காத நிலையிலும் கிடைத்த வாழ்க்கையிலும் சந்தோஷமாக வாழ முடியாத நிலையிலும் இருக்கும் ஒரு பெண்ணாய் நடித்திருக்கிறார். அடிக்கடி விதம்விதமான ஆடைகள், சேலைகளில் பவனி வரும் சாந்தினியின் அழகு கவர்கிறது. மிளிர்கிறது. அவருடைய சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களே அவருடைய குணாதிசயத்தைக் காட்டுகிறது.

பெயர் என்ன என்று தெரியாத ஆளுடன், பார்த்தவுடன் படுக்கையில் விழும் அவரது கேரக்டர் தவறானது என்றாலும் கதைக்கு அதுதான் மிகப் பெரிய பலமாக இருக்கிறது. ஜெயப்பிரகாஷூக்கும், அவருக்குமான உறவுகளை வசனத்தின் மூலமாக சொல்லியிருப்பதால் அந்தக் கோபமும், விரக்தியும் சேர்ந்து இப்படி சாந்தினியை சோரம் போக வைக்கிறது என்பதாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் பிரதான நாயகன் சந்தேகமே இல்லாமல் குரு சோமசுந்தரம்தான். சம்பத் என்னும் முன்னாள் போதை பொருள் கடத்தல் கும்பலின் தளபதியான குரு இப்போது அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதை பல வசனங்களில் அழுத்தமாகச் சொல்கிறார். டயலாக் டெலிவரியிலேயே நடிப்பைக் காட்டியிருக்கிறார் குரு.

அறிமுகக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தான் இருக்கும் பிரேமில் அடுத்தவருக்கு ஒரு சிறிய வாய்ப்பைக்கூட வழங்காமல் தன்னுடைய சிறப்பான நடிப்பால் கவர்ந்திழுத்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.

காரில் பயணித்தபடியே கதை சொல்லும்விதமும், சரக்கு அடித்தபடியே விசாகனிடம் தன் கதையைச் சொல்லும்விதத்திலும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார் குரு. கிளைமாக்ஸில் அழகம்பெருமாளிடம் துரைராஜ் பற்றி பேசும் காட்சி அருமை. அந்த வசனங்களும், காட்சியமைப்புகளும் உறுதுணையாய் இருக்க தன் நடிப்பில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் குரு சோமசுந்தரம்.

போதைப் பொருளை பாக்கெட் போடும் இடத்தில் தான் நடத்தும் படுகொலைகள் பற்றிப் பேசும் ஒரு பெண்மணி, “இதெல்லாம் இங்க வேண்டாமே. வேற இடத்துல வைச்சுக்குங்களேன். காதுல சவுண்ட்டா விழுகுது…” என்று சொல்லும்போது அதை சட்டென்று கேட்டுக் கொண்டு “ஓகே” சொல்லும் குருவின் அந்த அழகே தனி நடிப்பு..!

குருவுக்கும், ஜெயப்பிரகாஷுக்குமான ‘நட்பு’, ‘உவ்வே’ ரகம் என்றாலும், அதைக் கடைசிவரையிலும் சொல்லாமல் சஸ்பென்ஸாகவே வைத்திருந்து உடைத்ததில்தான் இயக்குநரின் திறமை வெளிப்படுகிறது.

பத்திரிகை நிருபராக விசாகனும், அவரது தோழியாக அனிஷ் அம்புரோஷும் நடித்துள்ளனர். ஒரு பக்கம் நண்பன் சிபி, இன்னொரு பக்கம் தோழி அனிஷ் என்று இருவர் பக்கமும் மாட்டிக் கொண்டு சமாளிக்கும் திறனும், சிபியை போலீஸிடமிருந்து காப்பாற்ற துடியாய் துடிக்கும் நண்பனின் நடிப்பையும், துரைராஜ் பற்றி எப்படியாவது செய்தியை மீட்க நினைத்து ஜான் விஜய்யிடம் சமாளித்து பேசியே தகவல்கள் கறக்கும் பத்திரிகையாளரின் சாமர்த்தியத்தையும் நடிப்பில் வெகுவாகக் காட்டியிருக்கிறார் விசாகன்.

ப்ரெஷ்ஷான முகமாக நடித்திருக்கும் அனிஷ் அம்ப்ரோஸும் தன் பங்குக்கு ஒரு பத்திரிகையாளராக நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இவருக்கும் சிபிக்குமான மோதலுக்குக் காரணத்தை தெரிவிக்காவிட்டாலும் அந்த மோதல்கூட சுவையாகத்தான் இருக்கிறது. சண்முகம் என்கிற பெயரை ஷாம் என்றே சுறுக்கி அழைக்கும் விசாகனை கடைசிவரையிலும் கண்டிக்கும் அனிஷாவை, இறுதியில் சிபியே காப்பாற்றுவது டச்சிங்கான திரைக்கதை.

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக அழகம்பெருமாளும், எப்படியாவது சிபியை தூக்கி உள்ளே வைத்துவிட நினைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டராக வாசு விக்ரமும், அவருக்குத் துணையாக ஜால்ரா போடுவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் ஏட்டு மூர்த்தியும் குறைவில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

லென்ஸ் படத்தில் அருமையாக நடித்திருந்த ஜெயப்பிரகாஷ்தான் இந்தப் படத்தில் சாந்தினியின் கணவராக நடித்திருக்கிறார். பயம், தயக்கம், நண்பன் மீதான பாசம்.. மனைவி மீதான காதல் இப்படி பலவற்றையும் கலந்து தன் முக பாவனையிலேயே காட்டியிருக்கிறார் ஜெயப்பிரகாஷ். பாராட்டுக்கள்.

முன்பேயே சொன்னதுபோல இயக்குரின் அருமையான இயக்கத் திறமையினால் மட்டுமே இந்தப் படம் கடைசிவரையிலும் பார்க்க முடிகிறது என்பது உண்மையோ உண்மை.

அதே சமயம் திரைக்கதையில் பல நெருடல்களும் இல்லாமல் இல்லை.

ஓரினச் சேர்க்கை என்பது இயல்பாகவே ஈர்ப்புத் தன்மை கொண்டதாக, சிறிய வயதில் இருந்தே உடன் இருந்த நோயைப் போல் இருக்க வேண்டும். அது வலுக்கட்டாயமாக வருவது போலவோ, வேறு வழியில்லாமல் கையாண்டது போலவோ, யார் மீதான கோபத்திலோ வருவது போலவே இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதில் குரு சோமசுந்தரத்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் காட்டியிருப்பது அவரை அனைவருமே கிண்டல் செய்து ஒதுக்கி வைப்பதினால் அவர் அப்படி ஆகிறார் என்பதே.. இது தவறான வாதம் இயக்குநரே..!

இந்தப் படத்திற்கு இந்த விஷயமே தேவையில்லாதது. குருவும், ஜெயப்பிரகாஷும் நண்பர்கள் என்றே படத்தின் கதையைக் கொண்டு போயிருக்கலாம். எதற்கு இவ்வளவு பெரிய அதிர்ச்சி தகவல்..?

எதிர் வீட்டுப் பெண்ணான சாந்தினியை பார்த்தவுடன் லவ்வாகிறார் சிபி. சாந்தினி திருமணமானவரா.. இல்லையா என்பதைக்கூட தெரிந்து கொள்ளாத நிலையில் சாந்தினியின் அழைப்பை நிராகரிக்காமல் அவருடன் உறவு கொள்கிறார்.

பின்புதான் சாந்தினி திருமணமானவர் என்பது அவருக்குத் தெரிகிறது. இப்போது சிபி கத்துகிறார். “என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை..?” என்று கோபப்படுகிறார். தான் சாந்தினியை காதலிப்பதாகச் சொல்கிறார். “திருமணமானவள் என்று தெரிந்திருந்தால் பக்கத்தில்கூட வந்திருக்க மாட்டேன்…” என்கிறார் சிபி.

இதுவரையிலும் சரிதான். ஆனால் ஒரு முறைகூட பேசியிருக்காத பெண், தான் மனதுக்குள் காதலிக்கும் பெண்ணை.. பார்த்தவுடன். அழைத்தவுடன் படுக்கையில் வீழ்த்துவதும், வீழ்வது மட்டும் சரியா..? இதில் இருப்பது ப்ரீ செக்ஸா அல்லது உண்மையான காதலா..? இதற்கு இயக்குநர் பதில் சொல்லாமல் சிபி தரப்பின் கருத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.

அதேபோல் சாந்தினியின் அழைப்பும் ஏற்க முடியாதது. ஒரு பந்தத்தில் இருக்கும்போது அதைத் தாண்டிய உறவுகளை நாடுவது பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பது அவருக்குத் தெரியாதா..? அது நாகரீகமானதுதானா..? நல்லதுதானா..? தவறில்லையா..? என்றெல்லாம் அவர் யோசித்திருக்க வேண்டாமா..? இயக்குநரின் கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி சாந்தினியின் கோபம் கணவர் மீதுதான் என்றாலும் அதை இப்படியா வெளிப்படுத்துவது..?

மத்திய, மாநில அரசுகள் கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுத் தேடி வரும் நிலையில் போதை பொருளை பெண்களை வைத்து பாக்கெட்டில் போடும் தொழில் செய்வதை எப்படி நம்புவது..? கொஞ்சமாவது நம்பும்படி இருக்க வேண்டாமா இயக்குநரே..?

படத்தில் ஏதோ போலீஸ் ஸ்டேஷனில் அனைவரையும் அமர வைத்து பேசியே விசாரித்து அனுப்பி விடுவது போல காட்டியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. போலீஸ் ஸ்டேஷன்கள் பற்றிய தமிழகத்து மக்களின் ரசனையை முற்றிலும் பொய்யாக்கியிருக்கிறது இத்திரைப்படம். இதில் நம்பகத்தன்மையில்லை என்பதுதான் உண்மை.

சம்பத் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து ஜெயப்பிரகாஷை அழைத்துச் சென்றதை அறிந்ததும் போலீஸ் அலெர்ட்டாகி சம்பத்தை உள்ளே தூக்கி வைத்து ‘லாடம்’ கட்டியிருந்தால் துரைராஜை மிக எளிதாகக் கண்டறிந்திருக்கலாம். இதுக்கு எதற்கு பத்திரிகையாளர்களுடன் கூட்டணி வைத்து தேடியலைய வேண்டும்..? இந்தத் திரைக்கதையை சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள்கூட ஏற்க மாட்டார்.

முதல் காட்சியில் ஜான் விஜய்யை கடலுக்குள் போய் பேட்டியெடுத்து வெளியிட்டு அவரைக் கைது செய்ய உதவும் விசாகன் டீமை கண்டிக்கும் போலீஸ் உயரதிகாரியான ஹரீஷ் பெராடி, அடுத்து சம்பத் தொடர்பான கேஸ்களை விசாரிக்க இவர்களுக்கு அனுமதி கொடுப்பதும், சம்பத் சம்பந்தப்பட்ட பைல்களை பார்க்கும்படி சொல்வதும் எல்லையற்ற லாஜிக் மீறலாக அல்லவா இருக்கிறது..!

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோதான்  இப்படத்தின் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு, நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். அப்படியொரு ஒளிப்பதிவை படத்தில் காண்பித்திருக்கிறார். காட்சிக்குக் காட்சி ஒளிப்பதிவு மாறுபட்டு இருக்கிறது. கலர் டோன் இருக்கிறதா இல்லையா என்றும், கலர் கரெக்சன் செய்திருக்கிறார்களா இல்லையா என்பதையும் யோசிக்க வைத்திருக்கிறது படத்தின் ஒளிப்பதிவு.

படத்தின் இறுதிவரையிலும் ஒரு மந்தமான வெளிச்சத்தில், போதுமான ஒளியில்தான் படமாக்கலே நடந்திருக்கிறது. சாந்தினியின் வீட்டுக்குள் நடக்கும் அந்த சம்போகத்தைப் படமாக்கியிருக்கும்விதம் அருமை. அதேபோல் சம்பத்தின் போதைப் பொருளை பாக்கெட் போடும் இடத்தில் நடைபெறும் சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கும்விதமும் அழகாக இருக்கிறது.

கலை இயக்கம் செய்திருக்கும் ராஜேஷின் பணிக்கு ஒரு பாராட்டு. எந்தக் காட்சியிலும் கண்ணை உறுத்தாக எதுவும் இல்லை. அதே சமயம் காட்சிக்கு முரணான சங்கதிகளும் பிரேமில் பதிவாகவில்லை.

இதேபோல் சண்டை பயிற்சியாளரான ஸ்டன்னர் ஷாமுக்கு ஒரு ஷொட்டு. அதிகப்படியான காட்சிகள் இல்லை என்றாலும் இருக்கின்ற துப்பாக்கிச் சூடு காட்சிகளையெல்லாம் நம்பும்படியாக அமைத்திருக்கிறார்.

படத் தொகுப்பாளர் ஆண்டனியின் படத் தொகுப்பு இந்தப் படத்தை இத்தனை நீளமாக ஆக்கியிருந்தாலும் எந்தவிதத் தொய்வும் இன்றி கடைசிவரையிலும் யார்தான் அந்தக் கொலையாளி என்பதைக் கண்டறியும்விதமாகவும், ஆர்வப்படும்விதமாகவும் செய்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்..!

சி.எஸ்.சாமின் பின்னணி இசை அமர்க்களம். காட்சிகளின் தன்மைக்கேற்ப இசையைமைத்திருக்கிறார். சிபி சாந்தினியை பாலோ செய்யும் காட்சிகளிலும், முதல்முறையாக இவர்கள் இருவரும் இணையும் காட்சியிலும் பின்னணி இசைதான் காட்சியமைப்பை தூண்டிவிடுகிறது. இதேபோல் சம்பத் வரும் காட்சிகளிலெல்லாம் அவருக்கான டயலாக் டெலிவரிக்கு இடம் கொடுத்துவிட்டு பின்பு ஒலிக்கவிட்டிருக்கிறார் தனது இசையை..! சாமின் இசை இத்திரைப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பலம்..!

தமிழ்ச் சினிமாவுக்கு மனோஜ் பீதா என்னும் சிறந்த இயக்குநர் ஒருவர் இத்திரைப்படத்தின் மூலமாகக் கிடைத்திருக்கிறார். இந்த சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் இது போன்ற திரைப்படங்களின் ஆர்வலர்களுக்கானது. திரை மொழியை அறிந்து கொள்ளத் துடிக்கும் புதியவர்களுக்கானது.. உதவி இயக்குநர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய படமும்கூட..!

அனைவரும் அவசியம் பாருங்கள்..!

Our Score