“திரையுலகத்தில் அனைத்துத் தயாரிப்பாளர்களும் தங்களுடைய படங்களின் வெற்றியை மட்டுமே யோசிக்கிறார்கள். மற்றவர்களின் படங்கள் தோற்றாலும் கவலையில்லை என்னும் மனநிலையில்தான் இருக்கிறார்கள்” என்கிற பொதுவான ஒரு குற்றச்சாட்டினை இன்றைக்கு உடைத்திருக்கிறார் தமிழ்த் திரையுலகத்தின் மூத்தத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர்.பி.செளத்ரி.
‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ என்னும் நிறுவனத்தின் மூலமாக இதுவரையிலும் 90 திரைப்படங்களைத் தயாரித்து இதன் மூலமாக எண்ணற்ற கலைஞர்களையும், 50-க்கும் மேற்பட்ட அறிமுக இயக்குநர்களையும் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.
இவர் தற்போது தனது 90-வது திரைப்படமாகத் தயாரித்திருக்கும் திரைப்படம்தான் ‘களத்தில் சந்திப்போம்’. இந்தப் படத்தில் நடிகர்கள் ஜீவாவும் அருள்நிதியும் இணைந்து நடித்திருக்கிறா்கள்.
இந்தப் படம் வரும் ஜனவரி 28-ம் தேதியன்று திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அதே நாளில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் தயாரித்திருக்கும் ‘கபடதாரி’ படமும் வருவதாக முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்தது.
இதற்காக தனஞ்செயன் மிகப் பெரிய அளவில் விளம்பரங்களை தொடர்ச்சியாக செய்து வந்து கொண்டிருந்தார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு அடுத்த வாரமும் எந்தப் படமும் வெளியாகாமல் அதற்கடுத்த வாரம் தனித்து போட்டியிடும் ‘கபடதாரி’க்கு இதனால் தியேட்டர்கள் அதிகம் கிடைத்து வந்தன.

இந்த நிலைமையில் களம் புகுந்த ‘களத்தில் சந்திப்போம்’ படத்தினால் ‘கபடதாரி’ படத்திற்கு நிறைய சிரமங்கள் ஏற்பட்டன. தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் முளைத்தன.
இந்தத் திடீர் பிரச்சினையால் தயாரிப்பாளர் தனஞ்செயன் சிறிது கலக்கமுற்று தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடமே இது குறித்துப் பேசியிருக்கிறார்.
தன்னுடைய ‘கபடதாரி’ படத்தின் நிலைமை குறித்தும், தியேட்டர்கள் புக் செய்வதில் ஏற்படும் சிரமங்கள் குறித்தும், இத்தனை நாட்களாக தான் பல லட்சம் செலவு செய்து விளம்பரப்படுத்தி வருவதையும் செளத்ரியிடம் எடுத்துச் சொல்லி, “என் படத்துக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க ஸார்.. போதும்.. நீங்க அடுத்த வாரம் வாங்களேன். அன்றைக்கும் வேறு எந்தப் பெரிய படமும் வர்ற மாதிரி தெரியலை. நீங்களும் பிழைக்கலாம்.. நானும் பிழைச்சுக்குவேன்…” என்று கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்ட தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி மிகப் பெருந்தன்மையாக இதற்கு ஒத்துக் கொள்ள.. இப்போது ஜனவரி 28-ம் தேதி வெளியாக வேண்டிய ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் ஒரு வாரம் கழித்து அடுத்த வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 5-ம் தேதியன்று வெளியாகிறது.
இப்படி தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இருந்தால் தமிழ்ச் சினிமா நிச்சயமாக மென்மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை..!