Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் S.S.முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கடுக்கா’.
இந்தப் படத்தில் விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் : S.S.முருகராசு, இசையமைப்பாளர்: கெவின் டெகோஸ்டா, ஒளிப்பதிவாளர்: சதீஸ் குமார் துரைக்கண்ணு, எடிட்டர் : M.ஜான்சன் நோயல், தயாரிப்பு வடிவமைப்பாளர் : விஜய் அந்துவான், நடன அமைப்பாளர்: அபேப் R.K இணை இயக்குநர்: R.ஐய்யனார், ரமேஷ் பாஷா இணை இயக்குநர்: சரண் K.ஆறுமுகம் உதவி இயக்குநர்கள் : ஆறுமுகம், பிரதாப் சிங். DI: கலர் வேவ்ஸ், கலரிஸ்ட் : ராகவன், VFX: Issls ஸ்டுடியோ, உதவி ஒளிப்பதிவாளர் : ஆல்வின், கிஷோர், உதவி இயக்கம் : லோகேஷ்ராஜா, சாம்ராஜா, விளம்பர வடிவமைப்பாளர் : கோலிவுட் ஸ்டுடியோஸ், விநியோகம் : G.தனஞ்செயன், பத்திரிக்கை தொடர்பு – கேப்டன் M.Pஆனந்த்.
அம்மாவின் உழைப்பில் வீட்டில் உட்கார்ந்து கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 25 வயது இளைஞனான ஹீரோ விஜய், வேலைக்கு செல்ல வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற எண்ணமே இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
தினமும் காலையில் நீட்டாக டிரஸ் பண்ணி கொண்டு பஸ் ஸ்டாப்புக்கு வரும் விஜய் பேருந்துகளில் செல்லும் இளம் பெண்களை பார்த்து சைட் அடிக்கும் ஒரே தொழிலையே செய்து கொண்டிருக்கிறார்.
அப்படியும் எவ்வளவு முயற்சி செய்தும் எந்த பெண்ணும் விஜய் கௌரிச ஏறெடுத்து பார்க்கவில்லை ஆனால் அதையும் அவர் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு தண்டச்சோறாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில்தான் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடி வருகிறார் நாயகி ஸ்வேஹா. அவரைப் பார்த்த உடனேயே காதலில் விழுந்து விடும் விஜய் ஷ்மேஹாவை தன் வலையில் விழ வைக்க பல்வேறு தந்திரங்களை செய்து காட்டுகிறார்.
ஒரு கட்டத்தில் இவருடைய நச்சரிப்பு தாங்காமல் சுமேஹா விஜய் கௌரியை காதலிப்பதாக சொல்லிவிடுகிறார். அதே நேரம் தன்னைச் சுற்றி சுற்றி வரும் விஜய் கெளரிஷின் நெருங்கிய நண்பனான ஆதார்ஷையும் காதலிப்பதாகச் சொல்கிறார் ஸ்மேஹா.
ஒரு நிலையில் நண்பர்கள் இருவருக்கும் ஷ்மேகா யாரை காதலிக்கிறார் என்கின்ற ஒரு பேச்சு எழுந்து சண்டை ஏற்படுகிறது. இருவருமே ஸ்மேஹாவிடம் உண்மையில் யாரை நீ காதலிக்கிறாய் என்று கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்கின்றனர்.
இப்போது இதற்கு ஷ்மேகாவிடம் இருந்து வந்த பதில் என்ன.. அவர் யாரை உண்மையாக காதலிக்கிறார்… எதற்காக இப்படி டிராமா போடுகிறார்… என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
‘கடுக்கா’ என்ற சொல்லுக்கு ‘பொய்’ என்று அர்த்தமுண்டு. “நமக்கு கடுக்கான் கொடுத்துட்டான்” என்று தமிழில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. ‘கடுக்கான்’ என்று சொன்னால் நம்மை ஏமாற்றி விட்டான் அல்லது பொய் சொல்லி விட்டான் அல்லது நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டான் என்ற எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.
அந்த அர்த்தத்தின்படி தன்னை காதலிப்பதாக சொல்லும் இரண்டு பேருக்குமே கடுக்கா கொடுக்கும் ஷ்மேகா எதற்காக அதைச் செய்தார்.. ஏன் செய்தார்.. என்பதற்கான பதிலை படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் சொல்லப்படுவதால் நம் அதுவரையில் “என்னடா இது போக்குத்தனமா இருக்கு..?” என்று நமக்குள் நாமே கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.
நாயகனாக நடித்திருக்கும் விஜய் கௌரிஸ் ரொம்ப எளிமையான மனிதராக இருக்கிறார். பக்கத்து வீட்டு பையன் போல, கிராமத்து இளைஞனுக்கு உரிய அதே நேட்டிவிட்டி தன்மையோடு நடித்திருக்கிறார். அவருடைய சின்ன சின்ன ஆக்சன்கூட அதிகம் சினிமாவை பார்க்காத ஒரு இளைஞன் என்ன சொல்வானோ அப்படித்தான் இவரும் செய்திருக்கிறார்.
அவருடைய நண்பராக நடித்திருக்கும் ஆதர்சம் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் ஒரு கட்டத்தில் அவர் ஆவேசம் கொண்டு, கோபத்தில் கொந்தளிக்கும்போதெல்லாம் நமக்கு நல்ல நகைச்சுவை கிடைத்திருக்கிறது.
நாயகி ஷ்மேகா அழகிதான். அவருடைய சிரிப்பு எவ்வளவு வசீகரமாக இருக்கிறது. இதுதான் அவருக்கு முதல் திரைப்படம் என்பதாலும் அழுகை சீன்கள் மட்டுமே இல்லாமல் மீதி அனைத்துவிதமான குணசித்திரங்களையும் தன்னுடைய முகத்திலேயே காட்டி இருக்கிறார் ஷ்மேகா.
அதில் கிளைமாக்ஸ் காட்சியில் பேருந்தில் பயணிக்கும்போது பக்கத்தில் இருப்பவன் தன்னை தடவுவதை உணர்ந்தவுடன் ஒரு சிரிப்பு சிரிக்கிறார் பாருங்கள்! அதுதான் இந்த படத்தின் கதை. அடுத்து இந்த நபர் என்ன ஆவார்… என்னவாகப் போகிறார் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் வைக்கும் வகையில் இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை முடித்திருக்கிறார் இயக்குநர்.
சினிமா விமர்சகர்களுக்கு வேண்டுமானால் இந்த பேருந்து காட்சி புரியும். ஆனால் மற்றவர்களுக்கு நிச்சயமாக இது புரியாது. அதனால் இறுதிக் காட்சியை ஒரு வசனத்தின் மூலமாக சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லாமல்விட்டதனால் தமிழகத்தின் கிராமத்தில், உள்ளார்ந்த நகரங்களில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் புரியாத ஒரு புதிர் ஆகிவிட்டது.
படத்தின் ஒளிப்பதிவாளரான சதீஷ்குமார் துரைக்கண்ணு தன்னுடைய கேமராவை வைத்து கிராமத்து வீடுகள், டீக்கடை, பேருந்து நிலையம், தெருக்கள் என்று அனைத்தையும் காட்சிப்படுத்தியவிதம் அழகை கூட்டி இருக்கிறது.
அதேபோல் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருமே சுமாரான அழகு கொண்டவர்களாகவும் இருப்பதால் கேமரா அவர்களை அழகுபடுத்தி காட்டியிருக்கிறது.
கெவின் டி கோஸ்ட்டின் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைத்திருக்கிறது. மற்றபடி நாமும் சேர்ந்து உடன் பாட வைக்கும் அளவுக்கு பாடல்கள் இல்லை. ஆனால் பின்னணி இசையில் குறையில்லாமல் போட்டுக் கொடுத்திருக்கிறார்.
படத் தொகுப்பாளர் எம்.ஜான்சன் காட்சிகளை சுருக்கமாக வெட்டி கத்தரித்து கொடுத்து இருக்கிறார். இதனாலையே பல இடங்களில் லேசான நகைச்சுவையும், சில இடங்களில் பலத்த சிரிப்புமாக நம்மால் படத்தை பார்க்க முடிந்திருக்கிறது.
படத்தின் மிகப் பெரிய பலமே படத்தில் பேசப்படும் கொங்கு தமிழ்தான். அதிலும் நாயகியின் அப்பா பேசும் வசனங்களெல்லாம் சிரிப்போ சிரிப்பு. நகைச்சுவைக்கு கொங்கு தமிழ்தான் சிறப்பு என்பது இந்தப் படத்திலும் உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.முருகஅரசு இப்போதைய இளைஞர்களின் எதார்த்தமான வாழ்வியலை நகைச்சுவையாக சொல்ல வந்து அதில் பாதியை கரைசேற்றி இருக்கிறார். நாயகியின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக வடிவமைத்தவர். வசனத்தில் சொல்ல வேண்டிய இடத்தில் மௌனம் ஆக்கிவிட்டதால் படத்தின் தன்மை இறுதியில் புரியாமல் போயிருக்கிறது.
ஆனாலும் ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்களை காதலிக்கும் நாயகி.. ஏன் அதை அவர் செய்கிறார்? பெண்களுக்கு படிப்பு முக்கியமா? திருமணம் முக்கியமா? என்கின்ற ஒரு பட்டிமன்றத்துக்குள்ளையே நம்மை தள்ளிவிட்டு இருக்கிறார் இயக்குநர்.
இந்தக் கருத்தை ஹீரோயின் முன்பாகவே சொல்லி இருக்கலாம் ஆனால் சொல்லியிருந்தால் அதற்கடுத்து கதையை நகர்த்துவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும். அதனால்தான் படத்தில் கிளைமாக்ஸில்தான் ஏன் இப்படி டிராமா போட்டேன் என்பதை ஹீரோயின் சொல்கிறார்.
ஆனால் உண்மையில் இதை முன்பே சொல்லிவிட்டு அப்படியும் தம்மை துரத்தி வரும் நாயகர்களுக்கு அறிவுரை சொல்வதுபோல படத்தை மாற்றி திரைக்கதை எழுதியிருந்தால்கூட இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடித்திருக்கும்.
இந்தக் ‘கடுக்கா’ நிச்சயமாக படம் பார்க்கும் யாருக்கும் கடுக்கான் கொடுக்கவில்லை!!
RATING : 4 / 5.









