மோடி எஃபெக்டினால் தள்ளிப் போனது ‘கடவுள் இருக்கான் குமாரு’ பட ரிலீஸ்..!

மோடி எஃபெக்டினால் தள்ளிப் போனது ‘கடவுள் இருக்கான் குமாரு’ பட ரிலீஸ்..!

‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ‘படத்துக்கு தடை ஏதுமில்லை’ என்று நீதிமன்றம் தெரிவித்தாலும் படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட இருந்த நிலையில், படத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்தப் படத்தை  தமிழ்நாட்டில் வெளியிடும் சேலத்தைச் சேர்ந்த 7-ஜி நிறுவனத்தின் உரிமையாளரான சிவா என்கிற விநியோகஸ்தர் தர வேண்டிய பாக்கிக்காக, இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மெரீனா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிங்காரவேலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தரேஸ்வர், "விநியோகஸ்தர் சேலம் சிவா 35 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்திவிட்டு வழக்கைத் தொடர்ந்து நடத்தலாம்..." என்று இடைக்காலத் தீர்ப்பளித்தார்.

மேலும், "இந்த வழக்கு படத்தின் தயாரிப்பாளர் டி.சிவாவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது..." என்றும், "கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிடத் தடை ஏதுமில்லை..." என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலைமையில் படம் நாளை வெளியாகவிருந்த சூழலில், "500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது..." என்கிற மத்திய அரசின் திடீர் உத்தரவினால், சினிமா தியேட்டர்களின் வசூலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

அதிகப்பட்சமாக சினிமா தியேட்டர்களில்தான் 500 ரூபாய் நோட்டுக்கள் புழங்கி வந்தன. ஆனால் இப்போது இதற்கு தடை போடப்பட்டிருப்பதால் தியேட்டர்களுக்கு மக்கள் வராமல், காட்சிகள் ரத்து செய்யப்படும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. இன்று மாலை கிட்டத்தட்ட 150 அரங்குகள் காட்சிகளை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் புதிய படங்களை திரையிட யோசிக்கிறார்கள்.

நாளையும் வங்கி விடுமுறை. சனிக்கிழமைதான் வங்கிகள் திறக்கப்படும் என்பதால் அதன் பின்பே பொதுமக்களுக்கு பணம் கைக்குக் கிடைக்கும். அதுவும் ஒரு நாளைக்கு 10000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாத சூழலும் இருப்பதால் தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் வருபவர்களின் கூட்டம் குறைய வாய்ப்பிருப்பதை தியேட்டர் அதிபர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

இப்படியொரு சூழலில் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தை வெளியிட முடியுமா என ஆலோசிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கலந்து ஆலோசித்ததில் 'இந்த ரூபாய் நோட்டுப் பிரச்சினை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படத்தை வெளியிடலாம்' என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா கூறுகையில், "எல்லோரும் ஒரு மனதாக எடுத்த முடிவின்படி வரும் நவம்பர் 17-ம் தேதி தமிழகம் மற்றும் உலகெங்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' படம் வெளியாகும். அதற்குள் மக்களும் இந்த ரூபாய் நோட்டு நெருக்கடியிலிருந்து மீண்டு, படம் பார்க்கும் மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.." என்றார்.

இதன்படி நரேந்திர மோடி எஃபெக்ட்டினால் 'கடவுள் இருக்கான் குமாரு' படம் ஒரு வாரம் தள்ளிப் போயிருக்கிறது..!