“ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி, நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம் வரும் நவம்பர் 18, வெள்ளிக்கிழமையன்று வெளியாகும்…” என்று அதன் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சென்ற வாரமே ரிலீஸாக வேண்டியிருந்த இந்தப் படம், மோடியின் கரன்சி எபெக்ட்டினால் பாதிக்கப்பட்டு இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் எம்.ராஜேஷ், “கடவுள் இருக்கான் குமாரு’ படம் வருகிற நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இப்படம் ஒரு வாரம் தள்ளிப் போய் ரிலீஸ் ஆவதற்குக் காரணம் 18-ம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சனைதான். எல்லோரும் எங்களிடம் படத்தை தள்ளி வைத்து வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர். அதனால்தான் ஒத்தி வைத்தோம்.
‘கடவுள் இருக்கான் குமாரு’ மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும்வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தப் படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாவது இதுவே முதல்முறை…” என்றார்.