குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக உயர்வார்கள். அந்த வகையில் தமிழ்த் திரைப்படத் துறையில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நடிகை மனிஷா ஜித்துக்கும் அப்படியே பொருந்தும்.
இவர் தனது அடுத்த படமான ‘கடல போட பொண்ணு வேணும்’ படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாகக் காத்திருக்கிறார்.
இந்தப் படத்தை ஆர்.ஜி. மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராபின்சன் தயாரித்துள்ளார்.
படத்தில் நாயகனாக அசார் நடிக்கிறார். நாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, செந்தில், மன்சூர் அலிகான், ‘லொல்லுசபா’ மனோகர் மற்றும் சுவாமிநாதன், ‘ஃபைட்டர்’ தீனா, ‘பிக்பாஸ்’ காஜல் போன்ற பல நகைச்சுவை நடிகர்கள் சேர்ந்து நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் இனியன். ஜுபின் இசையமைக்கிறார். சந்துரு படத் தொகுப்பு செய்துள்ளார். பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். சங்கர் மஹாதேவன் மற்றும் வைக்கம் விஜயலக்ஷ்மி இருவரும் பாடல்களைப் பாடியுள்ளனர். தீனா மற்றும் ராதிகா இருவரும் நடன இயக்கம் செய்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நாயகி மனிஷா ஜித் கூறும்போது, “எனது முதல் படம் ‘கம்பீரம்’. அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே கிட்டத்தட்ட 40 படங்களில் நடித்திருக்கிறேன்.
சஞ்சீவ் நாயகனாக நடித்த ‘நண்பர்கள் கவனத்திற்கு’ படத்தில்தான் முதன்முறையாக நாயகியாக நடித்தேன், அதனைத் தொடர்ந்து ‘கமரக்கட்டு’ படத்தில் நடித்தேன், நான் நடித்திருக்கும் அடுத்த படமான ‘ஆண்டாள்’ விரைவில் வெளியாக இருக்கிறது.
எனது தற்போதைய படமான ‘கடல போட பொண்ணு வேணும்’ பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள திரைப்படம் இது.
இந்தப் படக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். நாயகன் அசார் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குனர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார்.
எங்களைப் போன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார்.
இந்தப் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். படக் குழுவினர் என்னை அவர்களது குடும்ப உறுப்பினர் போலவே நடத்தினார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்…” என்றார்.











