ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் ‘சியான்’ விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னை அடையாறு, லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது.
விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் சி.இ.ஓ. நாராயணன் பேசுகையில், “1982-ல் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணியிருக்கோம். ‘கடாரம் கொண்டான்’ எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி” என்றார்.
படத் தொகுப்பாளர் கே.எல்.ப்ரவீன் பேசும்போது, “சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இந்தப் படம் பேப்பரில் என்ன இருந்ததோ அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள்..” என்றார்.
மலையாள நடிகை லேனா பேசும்போது, “கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிறார். சியான் விக்ரம் அவர்களோட பணியாற்றியது லவ்லி அனுபவம்” என்றார்.
நடிகர் அபி பேசும்போது, “முதலில் கமல் சாருக்கு நன்றி. விக்ரம் சாரை பெரிய ஹீரோ என்பதால் சூட்டிங் போகும்போது ஒருமாதிரி நினைத்துப் போனேன். ஆனால் அவர் மிக உயர்ந்தவர். இயக்குநர் ராஜேஷ் சார் எத்தனை டேக் போனாலும் அதை ஏற்றுக் கொண்டு என்னை நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்..” என்றார்.
நடிகை அக்ஷ்ரா ஹாசன் பேசும்போது, “அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி” என்றார்.
இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “இது என்னுடைய 25-வது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும்போது எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்பெக்ஷன் ஆக்டர் அவர். அவர் படத்திற்கு ரீ ரிக்கார்டிங் பண்றது ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்காக இருந்தது. இயக்குநர் ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி..” என்றார்.
இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா பேசும்போது, “ராஜ்கமல் பிலிம்ஸில் இரண்டு படங்கள் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். ‘தூங்காவனம்’ படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது.
சியான் விக்ரம் சாரோட வொர்க் பண்ணும்போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். ‘அவருக்குக் கதை பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார்’ என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தைப் போலவே பார்த்துக் கொண்டார். நிறைய முறை அவர் எனக்கு சாப்பாடு ஊட்டிகூட விட்டிருக்கிறார். விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ, அப்படித்தான் செட்டிலும் இருப்பார். காலையில் 9 மணிக்கு சூட்டிங் என்றால் சரியாக வந்துவிடுவார்.
அதிக நேரம் சூட்டிங் நடந்தால் கமல் சார் திட்டுவார். ஒரு தயாரிப்பாளரா அவர் சந்தோசம்தான் படணும். ஆனால் அவர் அப்படியில்ல. இந்தப் படத்தை கமல் சார் எனக்காகவே தயாரித்தார். இந்தப் படத்தில் வேறு இசை அமைப்பாளரைப் போட்டிருந்தாலும் ஜிப்ரான் வந்து எனக்கு உதவி செய்திருப்பார். அக்ஷரா ஹாசன், அபி இருவரும் நடிக்க இருந்ததால் ஒரு வொர்க்ஷாப் வைக்கலாம் என்று நினைத்தோம். அது சிறப்பாகவே அமைந்தது.
இந்தப் படத்தில் அக்ஷரா ஏன் நடித்தார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால்தான் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதைவிட கமல் சார் என்னை அதிகம் நம்புகிறார். அந்த நம்பிக்கையை நான் வீணாக்கவில்லை என்றே நினைக்கிறேன்..” என்றார்.
தயாரிப்பாளர் ரவீந்தரன் பேசும்போது, “கமல் சாருக்குப் பெரிய நன்றி. ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனியோட சேர்ந்து படம் பண்றது எனக்குப் பெரிய பாக்கியமா இருக்கு. இந்தப் படத்தில் எல்லா அம்சமும் இருக்கிறது. அபி மற்றும் அக்ஷரா ஹாசனின் நடிப்பு ரொம்ப சிறப்பா இருக்கு. இந்தப்படத்தில் விக்ரம் சார் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். படத்தில் ஹாலிவுட் ஹீரோ போல நடித்திருக்கிறார் ” என்றார்.
நடிகர் விக்ரம் பேசும்போது, “நான் ஏற்காட்டில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அங்கே நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாவது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல் சார் படங்களைத்தான்.
அவரைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்கு ‘பதினாறு வயதிலே’ படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான நடிகர்களுக்கு இன்ஸ்பிரேசனாக இருப்பவர்.
படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப் படத்தில் நடித்த இன்னொரு நடிகர். அழகாக நடிக்கச் சொல்லித் தருவார்.
இந்தப் படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்கான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். அக்ஷரா ஹாசனும் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார்.
படத்தை ரீரிக்கார்டிங்கோட பார்க்கும்போது சூப்பராக இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையாக வொர்க் பண்ணி இருக்கார்.
எல்லாரும் நான் ‘துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன்’ என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் நான் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப் படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வந்து சேர்க்கும்..” என்றார் நம்பிக்கையுடன்..!
நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “நான் ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டோம். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக் கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவக்கினோம்.
முதலில் இந்தக் கம்பெனிக்கு ‘ராஜ்கமல்’ என்றுதான் பெயர் வைத்தோம். ஆனால், அனந்துதான் ‘இண்டர்நேஷனல்’ என்பதைச் சேர்த்தார். என்னுடைய முயற்சிகள் எல்லாமே, எனக்குப் பின்னாலும் தொடர வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
மற்ற நடிகர்களை நடிக்க விட்டு அழகுப் பார்ப்பதில்தான் ஒரு நடிகனின் சிறப்பு இருக்கிறது. ‘திருவிளையாடல்’ படத்தில் நடிகர் சிவாஜி நாகேஷை நடிக்கவிட்டு ரசித்துக் கொண்டிருப்பார்.
‘சேது’ இன்னும் பல காலத்திற்கே முன்பே வந்திருக்க வேண்டும். விக்ரம் சியான் விக்ரமாக மாற இவ்வளவு காலம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட்டிருக்கேன். ‘கடாரம் கொண்டான்’ படத்தை நான் பார்த்தேன். விக்ரம், கலைஞன் ஆவதற்கு முன்பாகவே நான் அவரது ரசிகன். படத்தை மிகவும் என்சாய் பண்ணிப் பார்த்தேன். இனி ‘சியான் விக்ரமை’ ‘கே.கே விக்ரம்’ என்று அழைப்பார்கள்.
ஒரு படத்திற்கு எல்லாமே அமையாது. ஆனால், ராஜ்கமலின் ‘கடாரம் கொண்டான்’ படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். வியாபார ரீதியாக படத்திற்கு என்ன லாபம் வருமோ அது வரும்.
நான் படப்பிடிப்பு நடக்கும்போது எந்தப் பதட்டமும் இல்லாமல் இருந்தேன். அதற்கான காரணம் இயக்குநர் ராஜேஷ்தான்.
நிச்சயமாக இந்தப் படம் தமிழ்ச் சினிமாவை இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும். ரசிகர்கள் நல்ல படத்தை கொண்டாட வேண்டும். கொண்டாடுவார்கள்.
ராஜ்கமல் நிறுவனம் தற்போது புத்துணர்ச்சியாக இருப்பதற்கு இந்தக் ‘கடாரம் கொண்டான்’ படமும் ஒரு காரணம். ஜுலை 19-ம் தேதி சந்தோசமான நாள். அன்றுதான் எங்களது ‘கடாரம் கொண்டான்’ வெளியாகிறது.
‘இந்தப் படம் இங்கிலிஷ் படம் போல இருக்கும்’ என்று விக்ரம் கூறினார். அப்படி சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும். நிஜமாகவே இது ஆங்கிலப் படம் போலத்தான் உருவாகியுள்ளது.
இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது…” என்றார்.




















