full screen background image

வசனகர்த்தாவாக மாறும் கபிலன் வைரமுத்து..!

வசனகர்த்தாவாக மாறும் கபிலன் வைரமுத்து..!

கவிப்பேரரசு வைரமுத்துவின் வீட்டிலிருந்து மூன்றாவது வசனகர்த்தாவும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார்.

வைரமுத்துவின் இளைய மகனும், எழுத்தாளரும், பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துதான் அந்த மூன்றாவது வசனகர்த்தா.

கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தி்ல் மறைந்த இயக்குநர் அமீர்ஜானின் நட்பு உட்பட 5 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவரது முதல் மகன் மதன் கார்க்கி சமீபத்தில் வெளிவந்திருக்கும் வை ராஜா வை படத்திற்கு வசனம் எழுதியிருககிறார். இப்போது இவரது இரண்டாவது மகனான கபிலன் வைரமுத்துவும்  வசனம் எழுதவிருக்கிறார்.

இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் ‘மீன்’. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.

இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு புதுவிதமான ‘ஃபர்ஸ்ட் லுக்’கோடு இம்மாத இறுதியில் படத்தின் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் வெளியான கபிலன் வைரமுத்துவின் ‘மெய்நிகரி’ நாவலைப் படித்திருக்கிறார் இயக்குநர் ஹரிபாஸ்கர். அது பிடித்துப் போகவே கபிலன் வைரமுத்துவை தன் படத்திற்கு வசனம் எழுதக் கேட்டிருக்கிறார். கதை தொடர்பான விவாதத்திற்கு பின் கபிலன் வைரமுத்து ஒப்புக் கொண்டார்.

‘உதயம் NH-4’ முதல் ‘அனேகன்’ படத்தின் தலைப்புப் பாடல்வரை பல்வேறு படங்களுக்கு பாடல்களை எழுதிய கபிலன் வைரமுத்து தற்போது ‘பேய்கள் ஜாக்கிரதை’, ‘களம்’, ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் இயக்குநர் கலாபிரபு இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘இந்திரஜித்’ படத்தின் அனைத்துப் பாடல்களையும் கபிலன் வைரமுத்துதான் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Our Score