படம் வெளியாகி சர்ச்சையாகும்வரையில் காத்திருக்காமல் தாங்களே முன் வந்து இது, இதனை நினைத்துத்தான் எழுதப்பட்டிருக்கிறது.. படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்பேயே சொல்லிவிட்டால் ரிலீஸ் சமயத்தில் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாமே என்று ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணா’வாக மாறியிருக்கிறார் பிரபல பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து.
ஸ்ரீசாய் சர்வேஷ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. இயக்குநர் கண்மணி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு இசையமைத்திருக்கிறார்.
படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியிருக்கின்றன. இதில் கவிஞர் கபிலன் வைரமுத்து இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். அதில் படத்தின் விளம்பரப் பாடலாக ‘பயமுறுத்தும் பழங்கதைகள் புடிச்சிருக்கு நோக்கு; பகுத்தறிவு புகட்டுகிற நோக்கமில்லை நேக்கு’ என்று தொடங்கும் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.
இந்தப் பாடலின் இடையில், ‘வேப்ப மரம் சாஞ்சாலும், வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை’ என்ற வரியை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
தற்போது டெல்லி மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் வெளக்கமாருதான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் அக்கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியிருக்கின்றன.
இந்த நிலையில் ‘வெளக்கமாரு ஜெயிச்சாலும் பேய்கள் ஜாக்கிரதை’ என்று கபிலன் இப்படி எழுதியிருப்பது அரசியல் நையாண்டியாகவே பார்க்கப்படும் அபாயம் உள்ளது.
அதனால் படம் வெளியாகும் முன்பேயே இது குறித்து கபிலன் வைரமுத்து அளித்திருக்கும் இந்த வரிகள் பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில், “பேய்களை வெளக்கமாரு கொண்டு ஓட்டினாலும் அவை மறுபடியும் வரலாம் என்று படத்திற்கு பயன்படும் ஃபேண்டஸி அர்த்தத்தில்தான் நான் இதனை எழுதியிருக்கிறேன். இதையொரு சாதாரண பாடலாக எடுத்துக் கொள்வதும், அரசியலாக கருதுவதும் அவரவர் பார்வையைப் பொருத்தது…” என்று பதிலளித்திருக்கிறார்.