மகிழ் புரொடக்சன்ஸ் என்னும் பட நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தக்சன் விஜய் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘கபளிஹரம்’.
செல்வன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்குக் கார்த்திக் கிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகனும், இயக்குநருமான தக்சன் விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநரும், நாயகனுமான தக்சன் விஜய் பேசுகையில், “கபளிஹரம்’ என்பது திருட்டு, கவர்தல் என்று அர்த்தமாகும். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற உண்மையான ஒரு திருட்டுச் சம்பவத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் இது.
வேறு மாநிலத்திலிருந்து திருடர்கள் தமிழகத்திற்கு வந்து, திருடிவிட்டுச் செல்கிறார்கள். அதனைத் தமிழக போலீசார் திறமையுடன் துப்பறிந்து அவர்களைக் கைது செய்து, தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதனைத் தழுவிதான் இந்தக் ‘கபளிஹரம்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகர் மைம் கோபி போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் யோகிராம் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இம்மாத இறுதிக்குள் இந்த திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறோம்…” என்றார்.









