‘கபாலி’ படத்திற்காக கூடுதல் கட்டணம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

‘கபாலி’ படத்திற்காக கூடுதல் கட்டணம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

சமீபத்தில் வெளியான ‘கபாலி’ பட வெளியீட்டின்போது ஒவ்வொரு தியேட்டர்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிடவும் பல மடங்கு விலை உயர்வில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

முதல் 3 நாள் டிக்கெட்டுகள் 1000, 2000, 3000 என்று அதிக விலைக்கு விற்கப்பட்டது. பல மல்டிபிளெக்ஸ் தியேட்டர்களில் லம்ப்பாக டிக்கெட்டுகள் ஐ.டி. நிறுவனங்களுக்கு அநியாய விலைக்கு விற்கப்பட்டன.

சில இடங்களில் படத்துடன் தொடர்புடையவர்களே டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இது பற்றி தமிழக அரசுக்கு புகார் செய்தும் அரசு அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காரணம், ‘கபாலி’ படத்தை தமிழகமெங்கும் தியேட்டர்களில் வெளியிட்டது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலாவின்  குடும்ப நிறுவனமான ‘ஜாஸ் சினிமாஸ்’தான். ஆட்சி, அதிகாரத்துடன் சம்பந்தமுடையவர்கள் என்பதால் அரசு அதிகாரிகள் எந்தவொரு ஆக்ஷனும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இந்த நேரத்தில் முகமூடி அணியாத கொள்ளையர்களாக பலரும் களம் புகுந்து ரசிகர்களிடத்தில் அதிக விலைக்கு டிக்கெட்டுக்களை விற்று கொள்ளை லாபம் பார்த்தனர்.

இது அநியாய கொள்ளை குறித்து சென்னையை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தை பார்க்க சென்னை பிருந்தா தியேட்டருக்கு கடந்த ஜூலை மாதம் 20–ம் தேதி சென்றபோது, ஒரு டிக்கெட் ரூ.300 என்ற வீதத்தில் தியேட்டர் நிர்வாகமே விற்றது. ஆனால், அரசு நிர்ணயம் செய்த கட்டணம் ரூ.50 தான்.

இதுபோல் ‘கபாலி’ படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட 4 முதல் 5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளனர். இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ரூ.250 கோடிக்கு மேல் தியேட்டர் உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், “அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து கலெக்டர்களுக்கும் ஆன்–லைன் மூலம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை…” என்றார்.

இதையடுத்து நீதிபதி, “கபாலி’ படம் வெளியாவதற்கு முன்பே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டிருந்தேன். அந்த உத்தரவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..?” என்று அரசு வக்கீலிடம் கேட்டார். அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அரசு வக்கீல் பதிலளித்தார்.

இதற்கு நீதிபதி, “அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது எல்லாம் சிறிய தியேட்டர்கள் மீதுதான். அதிகாரிகள் பெரிய தியேட்டர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? சினிமாக்காரர்களுக்கு மட்டும் என்ன தனிச் சட்டமா..? பெரிய நடிகர்கள் நடித்த படம் என்றால் அனைத்து விதிகளும் மீறப்பட்டுவிடும்.

அதிகாலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் தியேட்டர்களில் திரைபடம் வெளியானது. இதற்கு எப்படி அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள்..? பெரிய நடிகர்களின் படத்துக்கு இலவசமாக டிக்கெட்டுகள் கிடைப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து விடுகின்றனரா..?

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களது கருத்துகளை கேட்டு, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவேண்டும். ரூ.120 டிக்கெட்டை ரூ.500, ரூ.700, ரூ.1,000 என்று விற்பனை செய்வது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லையா..?

எனவே, அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர் நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை அக்டோபர் 21–ந் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்…” என்று உத்தரவிட்டார்.

கொள்ளையடித்த காசை கொள்ளையர்கள் எல்லோரும் பத்திரப்படுத்திவிட்டார்கள். இனிமேல் கேட்டு என்ன..? கேட்காமல் இருந்தாலென்ன..? நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகச் சொல்லி வழக்கை முடிக்கப் போகிறார்கள்.. அவ்வளவுதானே..?! நாங்க பார்க்காத கோர்ட்டா..? கேஸா..?

Our Score