‘கபாலி’யை திருட்டுத்தனமாக வெளியிட்டால் இணையத்தளம் முடக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

‘கபாலி’யை திருட்டுத்தனமாக வெளியிட்டால் இணையத்தளம் முடக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தைக் காப்பாற்ற 169 இணையதளங்களை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கபாலி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

kalaipuli_s_thanu

அந்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படத்தை பெரும் தொகை செலவு செய்து தயாரித்துள்ளேன். இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

அண்மை காலங்களில் ஒரு புதிய திரைப்படம் திரைக்கு வந்த அடுத்த சில நிமிடங்களில், அந்த திரைப்படம் திருட்டுத்தனமாக வலைத்தளங்களில் (வெப்சைட்டுகளில்) வெளியாகி விடுகின்றன. இதனால், பெரும் தொகை செலவு செய்து திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. மேலும்,

இந்த வலைத்தளங்களில் வெளியாகும் திரைப்படத்தை பலர் பதிவிறக்கம் செய்து, திருட்டு சி.டி.யாக வெளியிடுகின்றனர். இந்த திருட்டு சி.டியில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமும், ஆம்னி பஸ்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன.

பொதுவாக இதுபோல திருட்டு சி.டி.க்களை வெளியிடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தங்களால் முடிந்த அளவு நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால், தீவிரமான, கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

இந்தியாவை பொறுத்தவரை, மத்திய அரசின் அங்கீகாரத்தை பெற்று பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேசன், டாட்டா கம்யூனிகேசன் இன்டர்நெட் சர்வீசஸ் உட்பட 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த சேவை வழங்கும் நிறுவனங்களில் சேவைகளின் மொத்த வருமானத்தில் 70 சதவீதம், சட்ட விரோதமாக புதிய திரைப்படங்கள், இசை மற்றும் ஆபாச படங்களை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்வதால் கிடைக்கின்றன. ஆனால், இதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.

இந்த இணையதளம் சேவை வழங்கும் நிறுவனங்கள், என்னை போன்ற திரைப்பட தயாரிப்பாளர்களின் கடின உழைப்பு மற்றும் முதலீட்டை எளிய முறையில் அபகரித்துக் கொள்கின்றன.

ஏதாவது சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் குறித்து புகார்கள் வந்தால், அந்த வீடியோவை உடனடியாக ‘யுடியூப்’ நிறுவனம் அகற்றிவிடுகிறது. அண்மையில்கூட, ‘இந்தியாவின் மகள்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, யுடியூப்பில் இருந்து அந்த படம் நீக்கப்பட்டது.

ஹிர்த்திக் ரோஷன் நடித்த ‘பேங் பேங்’ என்ற இந்தி திரைப்படத்தை வலைதளங்களில் வெளியிட 79 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

அதேபோல விரைவில் வெளியாக உள்ள ‘கபாலி’ திரைப்படத்தை வலைத்தளங்களில் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்ய 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

அதையும் மீறி வலைத்தளங்களில் ‘கபாலி’ படம் வெளியானால், சம்பந்தப்பட்ட வலைத்தளங்களை முடக்குவதற்கும், இணையதள சேவை நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை முதன்மை செயலாளர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்..” என்று கேட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், மாநில அரசு சார்பில் கூடுதல் அரசு பிளடர் முத்துகுமார், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விஜயநாராயணன், பி.குருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

மனுதாரர் வக்கீல் :- இந்த கோர்ட்டுக்கு வருவதற்கு முன்பு அண்மையில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தை ஒரு வலைத்தளத்தில் இருந்து பதவிறக்கம் செய்தோம். 10 நிமிடத்தில் பதிவிறக்கம் ஆனது. இதற்கு இணையதள சேவை வழங்கும் நிறுவனம் ரூ.20-யை என்னுடைய செல்போன் கணக்கில் இருந்து எடுத்துள்ளது.

அதாவது, ரூ.20-க்கு புதிய திரைப்படத்தை எளிதாக பதிவிறக்கம் செய்து, பார்க்கும் நிலை உள்ளது. இந்த தொகை, படத்தை வெளியிடும் வலைத்தளத்துக்கு செல்வதில்லை. இணையதளம் சேவை வழங்கும் நிறுவனத்துக்குதான் செல்கிறது. இவ்வாறு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை இணையதள சேவை வழங்கும் நிறுவனம் சம்பாதிக்கிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசு முன் வருவதில்லை.

நீதிபதி:- தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், திரைப்படத் துறைக்கு ஆதரவாகத்தானே இருக்கின்றன?

மனுதாரர் வக்கீல்:- போலீசார் தீவிரமான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை.

நீதிபதி:- இந்த வழக்கின் இடைக்கால உத்தரவை நாளை (இன்று) பிறப்பிக்கிறேன்.

இவ்வாறு நேற்று வாதம் நடந்தது.

இன்று நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கபாலி திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டால் அந்த இணையத்தளங்களை முடக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதி தன்னுடைய இடைக்கால தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

Our Score