ஜே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்துள்ள திரைப்படம் ‘காயல்’.
இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக், ‘ரேடியோ சிட்டி’ பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள நடிகையான அனுமோள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத் தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
பிரபலமான தமிழ் எழுத்தாளரும், கவிஞருமான தமயந்தி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
கடலும், கடல் சார்ந்த நீர்நிலைப் பரப்புகளையும் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டு சொல்லும் வார்த்தைதான் ‘காயல்’.
சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் இந்தக் ‘காயல்’ திரைப்படம் காதலும், பயணமும் கலந்த ஒரு திரை வடிவமாகும்.
ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியையே இத்திரைப்படத்தின் ஆணி வேராக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தமயந்தி.
பாண்டிச்சேரியில் ஏ.எஸ்.பி.யாக இருக்கிறார் ஐசக். அவருடைய மனைவி அனுமோல். இவர்களது மகள் காயத்ரி. இந்த காயத்ரி இப்போதைய 2k கிட்ஸ்களின் அடையாளமாக தெரிகிறார் அதனாலேயே சாதி பார்க்காமல் லிங்கேஷ் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு இளைஞனை தீவிரமாக காதலிக்கிறார் காயத்ரி.
ஆனால், இந்தக் காதலை மிக கடுமையாக எதிர்க்கிறார் அம்மா அனுமோல். நம்முடைய சாதியைச் சார்ந்தவனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று மகளிடம் வற்புறுத்துகிறார். அப்பாவோ காயத்ரிக்கு சப்போர்ட் செய்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அம்மாவை மிஞ்ச முடியாமல், அம்மாவின் பேச்சை தட்ட முடியாமல்… அம்மாவின் அண்ணன் மகனுக்கு கழுத்தை நீட்டுகிறார் காயத்ரி.
ஆனால் எல்லாம் ஒரு மாதம்தான்… ஒரு மாதத்திலேயே காயத்ரி தற்கொலை செய்து கொள்ள அந்த வீடு சோக மயமாகிறது.
தன்னுடைய மனைவியால்தான் மகள் காயத்ரி இறந்து போனார் என்று நினைக்கும் ஐசக் வீட்டில் மனைவியுடன் பேசுவதை நிறுத்திக் கொள்கிறார். மனைவியும் இவருடன் பேசுவதில்லை. இருவருமே மன அழுத்தத்திற்கு உள்ளாகி ஆளுக்கு ஒரு பக்கமாக வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள்.
இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து ஓடிவரும் மகன், அம்மா அப்பா இருவரையுமே சகஜ நிலைமைக்கு கொண்டுவர முயல்கிறான் ஆனால் முடியவில்லை. இதனால் அம்மாவை மட்டும் தன்னுடைய மிக நெருங்கிய நண்பனும், மனதத்துவ டாக்டருமான ரமேஷ் திலக்கிடம் அழைத்து வருகிறார்.
ரமேஷ் திலக்கே இப்போது இன்னொரு மிகப் பெரிய மன அழுத்தத்தில்தான் இருக்கிறார். அவருடைய மனைவியும் திருமணமான சில மாதங்களிலேயே வயிற்றில் குழந்தை இருக்கும்பொழுது அவருடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இவருடன் வாழ முடியாது என்று சொல்கிறார். டைவர்ஸ் செய்து கொள்ளலாம் என்கிறார். இப்படி ஒரு கட்டான சூழலில் இருக்கும் பொழுது ரமேஷ் திலக்கின் முன்னால் வந்து அமர்கிறார் அனுமோல்.
அனுமோலை சகஜ நிலைமைக்கு கொண்டுவர ஒரு பிரயாணம் தேவைப்படுகிறது என்கிறார் ரமேஷ் திலக். இதனால் இறந்து போன காயத்ரியின் சாம்பலை ராமேஸ்வரத்தில் கொண்டு சென்று கரைக்கலாம் என்று முடிவு எடுத்து ஒரு பிரயாணத்தை தொடங்குகிறார்கள். இந்தப் பிரயாணம்தான் இந்தப் படத்தின் இரண்டாம் பகுதி.
இந்தப் பிரயாணம் அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தது?.. அனைவரும் மனம் மாறினார்களா? இயல்பு நிலைமைக்கு திரும்பினார்களா?.. என்பதை இந்தப் படத்தை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
எழுத்தாளர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள்… இவர்கள் எல்லாம் சிறந்த இயக்குநர்களாக இருப்பார்களா என்பது சந்தேகம்தான். பல எழுத்தாளர்கள் நல்ல இயக்குநர்களாக மாற முடியாமல் போய்விட்டார்கள். நல்ல இயக்குநர்கள் சிறந்த கதாசிரியர்களாக, திரைக்கதை ஆசிரியர்களாக உருவெடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
இப்படி இந்த இரண்டுவிதமான முரண்பாடுகளால்தான் பல கலைஞர்கள் ஏதேனும் ஒரு வகையில் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தை இயக்கியிருக்கும் எழுத்தாளர் தமயந்தி கதை, திரைக்கதை, வசனகர்த்தா என்பதையும் தாண்டி இயக்கத்திலும் தன்னுடைய சிறப்பான ஒரு படைப்பாக இதைக் கொடுத்து இருக்கிறார்.
படத்தின் நாயகி காயத்ரி என்று சொல்லப்பட்டாலும் உண்மையான நாயகி அவருடைய அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல்தான். கேமிராவுக்கே ஒரு அழகான முகம். உண்மையில் இதுவரையிலும் நிஜத்திலேயே திருமணமாகாத அனுமோல் இந்தப் படத்தில் ஒரு டீன் ஏஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் என்றால் அவர் எந்த மாதிரியான தோற்றத்தில் இருப்பார் என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அப்படி ஒரு அழகான அம்மாவாகவும் தோன்றி இருக்கிறார்.
ஆனால் நடிப்பில் தன்னுடைய போட்டி போட்டு நடித்திருக்கும் கணவன் ஐசக், மகள் காயத்ரி இருவரையும் தாண்டி வெகு தூரம் ஓடி இருக்கிறார்.
தன் மகள் காதலிக்கிறாள் என்றவுடன் காதலன் என்ன ஜாதி என்பதை சுற்றி சுற்றி வளைத்து திரும்பத் திரும்ப கேட்கும் அந்த சாதிய அம்மாவாக பளிச்சென்று துவக்கத்திலேயே தெரிந்துவிட்டார் அனுமோல்.
மகளின் இறப்பை தாங்க முடியாமல் அவர் கதறுகின்ற கதறலும்… அதற்கு பிறகு தன்னுடைய கணவருடன் ஒத்துழையாமை இயக்கத்தை வீட்டில் நடத்திக் கொண்டு சோகத்தை கண்களிலேயே வைத்திருந்து காட்டும் அந்த நடிப்பும் அழகோ அழகு. மிகச் சிறப்பான நடிகைகள் கையில் கிடைத்தாலே சிறப்பான கதை மிகச் சிறப்பான கதையாகி விடும் என்பதற்கு மிக ச்சிறந்த உதாரணமாகிவிட்டார் அனுமோல். பாராட்டுக்கள்.
காயத்ரியம் கேமராவுக்கு ஏற்ற அழகிதான். மிகப் பெரிய ஹீரோயினாக தன்னை காட்ட முடியாது என்று தெரிந்து தன்னுடைய நடிப்பினாலேயே நம்மை கவர்ந்து நிற்கிறார். அவருடைய அப்பா மீதான பாசம், அம்மா மீதான பயம், காதலனின் மீதான விருப்பத்தையும் அவர் காட்டியிருக்கும் விதம் சிறப்பு.
அப்பாவாக நடித்திருக்கும் ஐசக் அதிகமாக திரைப்படங்களில் நடிக்காதவர். இந்தப் படத்தின் மூலம் நிச்சயமாக பேசப்படுவார். மகள் மீதான பாசத்தில் அவருடைய காதலனை நேரில் பார்த்துவிட்டு மிக நாகரீகமாக “ஒரு டீ குடிக்கலாமா?” என்று கேட்கின்ற அந்த தருணத்தில் அத்தனை பேருக்கும் பிடித்தமான மாமனாராக ஆகிவிட்டார்.
மகள் இறந்த பிறகு மருத்துவமனையில் தன்னுடைய ஒற்றைப் பார்வையாலையே மகளுடைய கணவனை வெறுக்க வெறுக்கப் பார்க்கும் அந்த ஒரு காட்சியிலேயே தன்னுடைய சிறப்பான காட்டியிருக்கிறார் ஐசக்
காதலனாக நடித்திருக்கும் லிங்கேஷ் அந்த பாத்திரத்திற்கு நிச்சயம் உயிர் கொடுத்திருக்கிறார். காதலிக்கு திருமணம் ஆனவுடன் எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல் தன்னுடைய வேலையிலேயே ஆர்வம் காட்டும் அவருக்கு இரண்டாவது காதலும் வந்து சேர்கிறது.
அந்த தருணத்தை அவர் எதிர்கொள்ளும்விதமும் அந்தப் புதிய காதலியிடம் அவரை தவிர்க்கும் பொருட்டு அவர் பேசுகின்ற பேச்சும் திரைக்கதைக்கு நிச்சயமாக பூஸ்ட் கொடுத்திருக்கிறது.
இவரை காதலிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன் அழகி. க்ளோசப் காட்சிகளில் அவ்வளவு அழகாக லட்டு மாதிரி தெரிகிறார். இவருடைய காதல் முன்வைப்புகள் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக நமக்கு தெரிந்தாலும் இப்படியும் சில பெண்கள் இருப்பார்களே என்று நம்மை நம்மை தேற்றிக் கொள்ளலாம். ஸ்வாகதாவின் முக அழகுக்காகவே அவர் வருகின்ற காட்சிகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
வழக்கமான ஒரு காதல் கதைதான் இந்தப் படம் என்றாலும், வெளிவந்திருக்கும் திரைப்படங்களில் இது ஒன்றுதான் ரத்தம் சிந்தாமல் நம் கண் முன்னே வந்திருக்கிறது என்பதால் இந்தப் படத்தை நாம் விரும்பி வரவேற்கத்தான் வேண்டும்.
இயக்குநர் தமயந்தி ஒரு அழகான சிறுகதையாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். அச்சில் ஒரு சிறுகதையை படிக்கும்போது நமக்கு என்னென்ன எண்ணங்களும், மகிழ்ச்சியும், சோகமும் ஏற்படுமோ அதுபோலத்தான் இந்தப் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசி வரையில் நாம் பார்க்கும் போது ஒரு அழகான சிறுகதையை படித்தது போலவே தெரிகிறது.
தமயந்தியின் அழகான இயக்கத்திற்கு கை கொடுத்திருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களையும் நம் மனதார பாராட்ட வேண்டும். அதில் முதல் நபர் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்பிரமணியன்தான்.
அழகோ அழகு என்று சொல்லும் அளவுக்கு முதல் காட்சியின் முதல் பிரேமில் இருந்து கடைசி கட்சியின் கடைசி ஷாட் வரையிலும் அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பாண்டிச்சேரி கடல் பகுதிகளையும், ராமேஸ்வரம் கடல் பகுதியையும், நீர் நிலைகளையும் இயற்கை சூழலையும், சக மனிதர்களின் வாழ்வியலையும், பறவைகள் இது எங்கள் இடம் என்று கடல் மேல் தாவி செல்லும் அந்தக் காட்சிகளையும் பார்க்கின்ற பொழுது இந்த கேமராமேனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
இசையமைப்பாளர் ஜஸ்டின் கென்னடி ஆவின் இசையில் ரமேஷ் வைத்யா, தமயந்தி எழுதிய பாடல் வரிகள் மிக அழகாக நம் காதுகளில் நுழைகின்றன. அதை நுழைய அனுமதிக்கும் வகையில் இசையையும் கொஞ்சம் மெதுவாகவே இசைத்திருக்கிறார். அந்த வகையில் இசையமைப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.
படத் தொகுப்பாளர் வசனம் காட்சிகளை விடவும், இயற்கை காட்சிகளை மிக அழகாக இடையிடையே காட்டி, கொஞ்சமும் போர் அடிக்காமல் இந்தப் படத்தை கொண்டு செல்ல உதவி இருக்கிறார்.
ஆனாலும் வணிக ரீதியிலான கமர்சியல் படங்களின் தாக்கம் தமிழ் சினிமா பார்க்கின்ற ரசிகர்களின் மூளையில் அளவுக்கு அதிகமாக பதிந்திருப்பதால், இந்தப் படம் அது மாதிரியான ரசிகர்களுக்கு “என்ன இது ரொம்ப நீளமாக இருக்கிறது..?” என்று சொல்ல தோன்றும். ஆனால், இது அவர்கள் சந்திக்கும் முதல் வித்தியாசமான படைப்பு என்பதால் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று சொல்லலாம்.
இந்தப் படத்தில் எதையும் குற்றம், குறையாக சொல்ல விரும்பவில்லை. முதல் திரைப்படம் என்பதால் எழுத்தாளர் தமயந்தியின் இயக்குதலை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
ஆனால் அதே சமயம் திரைக்கதையில் ரமேஷ் திலக் என்ற ஒரு இளைஞர் மனோதத்துவ டாக்டராக இருப்பதும் அவருக்கே தாங்க முடியாத சொல்ல முடியாத வேதனையுடன் ஒரு கதை இருப்பதும் சற்று இடறலாக இருக்கிறது.
அதேபோல் அம்மாவை டாக்டரிடம் அழைத்து வந்த நண்பனிடம் அம்மாவை மருத்துவ ரீதியாக பேசுவதற்கு உட்படுத்தாத நிலைமையில் மகனிடம் மட்டும் பேசி “ஒரு பிரயாணத்துக்கு ரெடி செய்” என்று சொல்வது எந்த வகையிலும் எந்த ஒரு மனோதத்துவ டாக்டரும் சொல்ல மாட்டார்கள் என்பது உறுதி.
அந்தக் காட்சியில் ரமேஷ் திலக் அவருடைய அம்மாவிடம்தான் அதிகமாக பேசியிருக்க வேண்டும். அவரிடம் பேசித்தான் விஷயத்தை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் கதையில் திடீர் திருப்பமாக ஒரு பிரயாணம் செய்ய செய்தே தீர வேண்டும் என்று இயக்குநர் நினைத்துவிட்டதால் கதையை அப்படியே திசை திருப்பி இருக்கிறார்கள் போலும்!.
எப்படி இருந்தாலும் இந்த வாரத்திய திரைப்படங்களில் ஒரு வித்தியாசமான ஒரு திரைப்படமாக குடும்பத்துடன் அமைதியாக அமர்ந்து பார்க்கின்ற வகையில் நம் மனதை தொடும் வகையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய இயக்குநர் என்பதாலும் அதிலும் பெண் இயக்குனர் என்பதாலும் இந்தப் படத்தை நிச்சயமாக நாம் முன்மொழிந்துதான் ஆக வேண்டும்.
அவசியம் இந்தப் படத்தை தியேட்டரில் பாருங்கள்.
RATING : 4 / 5









