பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் வைட் மூன் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’.
இந்தப் படத்தில் சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘மைம்’ கோபி, ‘கல்லூரி’ வினோத் மற்றும் சில பிரபல நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசை – ஆதித்யா சூர்யா, ஒளிப்பதிவு – விஷ்ணுஸ்ரீ, படத் தொகுப்பு – வடிவேல், விமல்ராஜ், கலை இயக்கம் – ராஜேஷ், எழுத்து, இயக்கம் – ஆர்.டி.எம்.
தன்னுடைய தனித்துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கும் நடிகை ரவீணா ரவிதான், இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
ஏற்கெனவே அவர் நடித்திருந்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் மிகப் பெரிய அளவுக்கு பேசப்பட்டு, பட விழாக்களில் விருதினையும் அள்ளிச் சென்றது நினைவிருக்கலாம்.
சினிமாவில் மிகச் சில படங்களே தான் பேசும் கருத்துகளாலும், கதையாலும், கவனத்தை ஈர்த்து மக்கள் மனதில் இடம் பெறும். இந்தக் ‘காவல் துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் அப்படியான கவன ஈர்ப்பை கொண்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது.
பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டதுதான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும், உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
சென்சாரில் இந்தப் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் பெற்ற நிலையில் ரிலீஸிற்கு முன்பே கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாக இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இது குறித்து லிப்ரா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பேசும்போது, “சமீப காலங்களில் குறிப்பாக 2019-ம் ஆண்டில் சிறு முதலீட்டில் எடுக்கப்படும், அழுத்தமான கதைகள் கொண்ட, நல்ல படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலைக் குவித்து வருகின்றன. மேலும் விமர்சகர்களிடமும் நல்ல பாராட்டை பெற்று வருகின்றன.
இம்மாதிரி படங்களே என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபகரமானதாகவும் நல்ல பெயரையும் பெற்றுத் தருகின்றன.
இந்தக் ‘காவல் துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் மிக அழுத்தமான கதையையும், அதே நேரம் மக்களை ஈர்க்கக் கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இப்படத்தினை பார்த்த உடனேயே இதை எந்த வகையிலும் விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து வாங்கிவிட்டேன்.
இப்படத்தினை எளிமையும், தத்ரூபமும் கூடியதாகவும், அதே நேரத்தில் அனைத்து மக்களையும் கவரும் வகையிலும் படைத்திருக்கிறார் இயக்குநர் R.D.M.
படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு பற்றிய விவரங்களை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்…” என்றார்.