White Horse Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இத்திரைப்படத்தின் நாயகனுமான ஜெய்வந்தும், Youreka Cinema School நிறுவனத்தின் சார்பில் இப்படத்தின் இயக்குநரான யுரேகாவும் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தில் ஜெய்வந்த் நாயகனாக நடித்துள்ளார். ஐரா என்னும் புதுமுகம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ நரேன், ‘மூணாறு’ ரமேஷ், மாரிமுத்து, சி.வி.குமார், அபிஷேக், ‘யோகி’ தேவராஜ், எமி, ஆர்.ரத்தினகுமார், டேவிட், காமாட்சி மோகன், ‘அம்மா கணக்கு’ விக்கி, அஸ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – வி.ஜி.ஜெய்வந்த், எழுத்து, இயக்கம் – யுரேகா, இசை – விஜய் ஷங்கர், ஒளிப்பதிவு – மணி பெருமாள், படத் தொகுப்பு – லிஸ்ஸி, கலை – மோகன மகேந்திரன், சண்டை பயிற்சி – பிரபு சந்திரசேகர், நடன இயக்கம் – பூபதி, பாடல்கள் – பிறைசூடன், யுகபாரதி, யுரேகா, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பெஞ்சமின், உடைகள் – பிரசாத், ஒப்பனை – கரி சூழ்ந்தான், புகைப்படங்கள் – மோதிலால், விளம்பர வடிவமைப்பு – பிலசன், மக்கள் தொடர்பு – நிகில்.
‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யுரேகாவின் நான்காவது படம் இது.
வட்டித் தொழில் செய்யும் மார்வாடிகள் கடனை திருப்பிக் கேட்பதாகச் சொல்லிச் செய்யும் அட்டூழியம்தான் படத்தின் கதைக் கரு.
சென்னையில் இரவு நேரங்களில் சில கார்கள், பல பைக்குகள் எரிந்து சாம்பலாகின்றன. இந்த பைக்குள் மற்றும் கார்களின் உரிமையாளர்கள் யார் என்று தேடிப் பார்த்தால் அவர்கள் அனைவருமே மார்வாடியான சி.வி.குமாரின் சொந்த பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்பவர்கள்.
இந்த வழக்கை விசாரிக்க தற்போது சஸ்பென்ஸனில் இருக்கும் இன்ஸ்பெக்டர் ஜெய்வந்தை நியமிக்கிறார் கமிஷனர் ஆடுகளம் நரேன். இவருக்குத் துணையாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்னும் கான்ஸ்டபிளான மூணாறு ரமேஷும் நியமிக்கப்படுகிறார்.
ஜெய்வந்த் தனது விசாரணையைத் துவக்குகிறார். துப்பு துலங்கவில்லை. ஒரு சின்ன எவிடென்ஸ்கூட கிடைக்காமல் அடுத்தடுத்து பைக்குகளும், கார்களும் எரிந்து கொண்டிருக்கின்றன.
இதே நேரம் சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் ஐராவும் ஜெய்வந்திடம் வந்து அடைக்கலமாகிறார். அவரையும் தன் வீட்டுக்குள் அனுமதித்து அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வரும்வரையில் இருக்கலாம் என்று அனுமதியும் கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர் ஜெய்வந்த்.
இவர் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சில இடங்களில் பைக்குகள் எரிகின்றன. கார்கள் எரிகின்றன. அந்தச் சமயத்தில் பிடிக்க முயலும்போது அந்த நபர் ஆண் அல்ல பெண் என்பதும் தெரிய வருகிறது.
உண்மையில் யார் அந்தப் பெண்.. அந்தச் செயலைச் செய்வது யார்.. எதற்காகச் செய்கிறார்கள்.. ஜெய்வந்த் எப்படி அதனை கண்டறிகிறார் என்பதைத்தான் படத்தின் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் யுரேகா.
படத்தின் கதைக் கருவைவிட்டுவிட்டு தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல், சமூக சூழலை வெளிப்படுத்துவதிலேயே படம் குறியாக இருப்பதால் படம் எதை நோக்கிச் செல்கிறது என்பதே தெரியாமல் போய்விட்டது.
படத்தின் துவக்கத்திலேயே இயக்குநர் தனியாக நின்று பேசும்போதே இத்திரைப்படம் பல்வேறு விஷயங்களை அலசப் போகும் படம் என்று தெரிந்துவிட்டது.
இதன் பின்பு மார்வாடிகளின் வட்டி பிரச்சினையில் துவங்கி சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதி அமைத்தாக வேண்டும் என்கிற இயக்குநர் யுரேகாவின் ஒற்றை அம்ச கோரிக்கையை வலியுறுத்தும்வகையில் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்.
பல வசனங்களின் மூலம் வட்டித் தொழிலில் ஈடுபடும் மார்வாடிகளின் அட்டூழியங்களைச் சொன்னாலும் அவர்கள் அல்லாது போனால் அந்தத் தொழிலின் மூலம் தமிழர்களுக்கு உதவ யார் இருப்பது.. யார் உதவ வேண்டும் என்பதையெல்லாம் இயக்குநர் சொல்லாமல் சாய்ஸில் விட்டுவிட்டார்.
நடிகரும், பத்திரிகையாளருமான யோகி தேவராஜின் மூலமாக பாரதியின் பாடல் வரிகளைத் தெறிக்கவிட்டு.. உள்ளூர் பொருட்களை புறக்கணித்தால் நாம் அன்னியராகிவிடுவோம் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் இது படத்திற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதுதான் உண்மை.
படமோ ஒரு சைக்கோ பற்றிய கதை. ஆனால் திரைக்கதையோ அந்தச் சூழலை மட்டுமே சொல்கிறதே தவிர, சைக்கோ தரப்பு நியாயத்தை நியாயமாக வெளிப்படுத்தவில்லை.
படத்தின் துவக்கத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சியிலேயே அந்த சைக்கோ யாராக இருக்கும் என்பதை யூகிக்க முடிவதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். இந்த சஸ்பென்ஸை கடைசிவரையிலும் மெயின்டெயின் செய்தாலும் அது கடைசியில் புஸ்வாணமாகிவிட்டது.
தயாரிப்பாளர் ஜெய்வந்தே ஹீரோவாக நடித்திருக்கிறார். அடிக்கடி மீசையை நீவிவிட்டுக் கொள்கிறார். கோபப்படுகிறார். ஆத்திரப்படுகிறார். அவ்வளவுதான். படத்தின் நாயகனாக தான் சுமக்க வேண்டிய கதையில் இவரால் எதுவும் செய்ய முடியவில்லை. கடைசியாக ஒரு போலீஸ் ஆபீஸரே இதைச் செய்யலாமா என்பதற்கு இயக்குநர் நேர்மையாக எந்தப் பதிலும் சொல்லாமலேயே எஸ்கேப்பாகிவிட்டார்.
புதுமுகம் ஐராவுக்கு அதிகமாக நடிப்புக்கான காட்சிகள் இல்லை. ஆனால் நடித்திருக்கிறார். ஆடுகளம் நரேனின் நடிப்பு மட்டுமே கொஞ்சம் ஆறுதலைக் கொடுக்கிறது. அவரது கேரக்டர் ஸ்கெட்ச் மட்டுமே நம்பும்படியாக இருக்கிறது.
ஓய்வு நாளில்கூட போலீஸ்காரர்களை வைத்தே அசைவ உணவு விருந்தளிக்கும் சில போலீஸ் உயரதிகாரிகளின் செயல்களையெல்லாம் இதில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
அரசு காப்பகத்தின் பொறுப்பாளரான எமி ஏன் இந்தக் கத்துக் கத்து கத்துகிறார் என்றே புரியவில்லை. அதிலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அவர் நடத்தும்விதம்கூட அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தைக் பெரிதும் குறைக்கிறது..!
விஜய் சங்கரின் இன்னிசையில் ‘சிவப்பு விளக்கு வேண்டும்’ என்கிற பாடல் காட்சியை படமாக்கியவிதமும், பாடலும் நன்று. படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்திலேயே படமாக்கியிருப்பதால் ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இரவு நேரக் காட்சிகளை குறையில்லாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஒட்டு மொத்தமாய் படமாக பார்க்கப் போனால் யுரேகாவின் இயக்கம் அழுத்தமாக இல்லாததால் படமே கூடு விட்டு கூடு பாய்வதுபோலத்தான் இருக்கிறது. விவசாய பிரச்சினை, காவிரி நீர் பிரச்சினை, போராட்டங்களை அடக்க நினைப்பது, வட நாட்டவர்களின் ஆக்கிரமிப்பு, வட்டித் தொழிலில் பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் என்று பலவற்றையும் ரீல் பை ரீலாக சொல்லிக் கொண்டே வருவதால் படம் ஏதோ டிவி கலந்துரையாடல் காட்சி போலத்தான் தெரிந்தது.
வட்டித் தொழில் செய்யும் மார்வாடிகளின் லீலைகளை காட்டு்ம் படமாக மட்டுமே எடுக்கப்பட்டிருந்தால் உண்மையில் ரசித்திருக்கலாம். இயக்குநர் தன்னுடைய அபரிமிதமான தமிழ் உணர்வை இப்படத்தில் கொட்டியிருப்பதால் எதை ரசிப்பது, எதை ஏற்றுக் கொள்வது, எதை விடுவது, இது யாருக்கான படம், எதற்கான படம் என்கிற குழப்பத்தில் படம் யாருக்கும் மன நிறைவைத் தரவில்லை என்பதுதான் உண்மை.