கிரியேட்டிவ் எண்ட்டெர்டெயினர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் G.தனஞ்ஜெயன், S.விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் சென்ற ஆண்டு ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தும்ஹாரி கலு’ படத்தின் ரீமேக்காகும்.
வித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், மயில்சாமி, உமா பத்மநாபன், சண்ட்ரா அமி பிரஜின், சிந்து ஷியாம், மதுமிதா, சிந்து சேகரன், சீமா தனேஜா, மற்றும் பல நடிகர், நடிகையர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைக்கதை, இயக்கம் – ராதா மோகன், கதை – சுரேஷ் திரிவேனி, இசை – A.H.காஷீப், பாடல்கள் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, வசனம் – பொன்.பார்த்திபன், கலை இயக்கம் – கதிர், உடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, படத் தொகுப்பு – பிரவீன் K.L., நடனம் – விஜி சதீஷ், ஒலி வடிவமைப்பு – டி. உதயகுமார், ஸ்டூடியோ – Knack Studios & Accel Media, விளம்பர வடிவமைப்பு – ஜோஸப் ஜாக்சன், புகைப்படங்கள் – ஸ்டில்ஸ் குமரேசன், தயாரிப்பு நிர்வாகம் – எம்.செந்தில், இணை தயாரிப்பு – எஸ்.சரவணன், தயாரிப்பு – கிரியேட்டிவ் எண்ட்டெர்டெயினர்ஸ், வெளியீடு – பாப்டா மீடியா வொர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், தயாரிப்பாளர்கள் – ஜி.தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன், மக்கள் தொடர்பு – ஜான்சன்.
இந்தப் படத்தை தமிழின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவரான ராதா மோகன் இயக்கியிருக்கிறார்.
ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மொழி’. இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் இந்த ‘காற்றின் மொழி’ படத்தில் இணைந்திருக்கிறது.
“திருமணமாகி குழந்தைக்கும் தாயான ஒரு பெண், தன் தனி மனித விருப்பத்துடன் ஒரு வேலையைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது சரியா.. தவறா..?” என்கிற பட்டிமன்றத் தலைப்பை கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளது இத்திரைப்படம்.
‘விஜயலட்சுமி பாலசுப்ரமணியன்’ என்னும் ஜோதிகா பிளஸ் டூவில் மூன்று முறை பெயிலாகி படிப்பைக் கைவிட்டவர். இப்போது பாலசுப்ரமணியன் என்னும் விதார்த்துடன் திருமணமாகி 11 வயது பையனுக்கு அம்மாவாக இருக்கிறார்.
நிறைய பேச்சுத் திறமையுள்ளவர். மிமிக்ரி செய்யும் ஆற்றலும் உள்ளவர். இருந்தும் அவருடைய முழு நேரப் பணியே கணவர், குழந்தை, சமையலறை, வீட்டு வேலைகள் என்று முடிந்துவிடுகிறது. ஏதாவது ஒரு வேலையோ, தொழிலோ செய்து தனது தனித்தன்மையைக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் ஜோதிகா.
இதற்கு அவரது அக்காள்களும் ஒருவகையில் காரணமாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் முறையே வங்கி ஊழியர் மற்றும் அரசு ஊழியராக இருக்கிறார்கள். இவர்களுடன் ஜோதிகாவின் அப்பாவான மோகன்ராமும் சேர்ந்து கொண்டு அவ்வப்போது வீட்டுக்கு வந்து “நீ பிளஸ் டூ பெயில்” என்று குத்திக் காட்டி பேசுவதை பொறுத்துக் கொள்ளாமல் முடியாமல் உள்ளுக்குள் கொதிப்பில் இருக்கிறார் ஜோதிகா.
இந்த நேரத்தில் ‘ஹலோ எஃப்.எம். பண்பலை வானொலி’ நடத்திய ஒரு போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்கிறார் ஜோதிகா. அந்தப் பரிசுப் பொருளை வாங்க அந்த வானொலி நிலையத்துக்கு வந்தவர், அங்கே ரேடியோ ஜாக்கி பணி காலியிருப்பதாக அறிந்து அதற்கு அடிபோடுகிறார்.
பலவித இடைஞ்சல்களுக்கு பிறகு அந்தப் பணி கிடைக்கிறது. ஆனால் அது மிட் நைட் மசாலா போன்று அந்தரங்க கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இருந்தும் ஜோதிகா அதனை தனது திறமையான பேச்சுவன்மையால் அழகாக நடத்துகிறார். நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது.
ஆனால், இது போன்ற நிகழ்ச்சியினால் தனது பெயர் கெடுவதாக கணவர் விதார்த்தும், தங்களது குடும்பப் பெயரும் கெட்டுவிட்டதாக அக்காள்களும், அப்பாவும் வந்து குதியாய் குதிக்கிறார்கள். ஆனாலும் ஜோதிகா தனது பணியில் உறுதியாய் இருக்கிறார்.
இந்த நேரத்தில் அளவு கடந்த செல்போன் விளையாட்டு ஆர்வத்தில் இவர்களது மகன் தனது படிப்பைத் தொலைக்கிறான். அதோடு புதிய வீடியோ கேம் வாங்குவதற்காக வீட்டிலிருந்து அப்பாவின் செல்போனையும் களவாடிச் செல்கிறான். இது பள்ளியில் தெரிந்து அவனை பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்கிறார்கள்.
இதைத் தாங்க முடியாத பையன் வீட்டிலிருந்து ஓடி விடுகிறான். ஜோதிகாவின் இரவு நேரப் பணியினால்தான் அவனைக் கவனிக்க முடியவில்லை என்று விதார்த் குற்றம்சாட்ட நிலைகுலைந்து போகிறார் ஜோதிகா.
பையன் திரும்ப கிடைத்தானா..? ஜோதிகாவின் வேலை என்ன ஆச்சு..? குடும்பத்தில் மறுபடியும் மகிழ்ச்சி கிடைத்ததா..? என்பதற்கான விடைதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
தமிழ்த் திரையுலகில் இயக்குநர் பாசிலுக்கு பின்பு அவருடைய பாணியில், சினிமா மொழியில், அழகியல் தன்மையுடன் சிறந்த படங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பது இயக்குநர் ராதாமோகன்தான்..! அந்த வகையில் இந்தப் படமும் இயக்குநர் ராதாமோகனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
பெண் என்றால் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்க வேண்டுமா..? பிடித்த வேலையைச் செய்யக் கூடாதா..? இரவுப் பணிகளுக்குப் போகக் கூடாதா..? ஆண்கள் மட்டுமே கோலோச்சும் மன நலம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லக் கூடாதா..? என்றெல்லாம் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் கேள்விகளை எழுப்பி அதற்கு ஏற்ற பதிலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.
இது மட்டுமில்லாமல் மனைவியை இழந்த கணவர்களின் சோகமும், அதைத் தூக்கியெறிய வேண்டிய சிந்தனையையும் எம்.எஸ்.பாஸ்கர் மூலமாகச் சொல்கிறார். பள்ளி மாணவர்களின் படிப்பு சம்பந்தமாக பெற்றோர்களுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வையும் ஜோதிகா-விதார்த் ஜோடிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் கோடு போட்டுக் காட்டியிருக்கிறார்.
எந்த வயதிலும் யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரலாம். அந்தக் காதல் உணர்வை அந்த நேரத்திலேயே புரிந்து கொண்டால் எல்லாம் சுபம் என்று மனோபாலா மூலமாக மறுபடியும் சொல்லிக் கொடுக்கிறார்.
ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்கிற இரவுப் பணியை பெண்கள் மேற்கொள்வது.. ஓட்டுநர் பணியை தயக்கமில்லாமலும், பயமில்லாமலும் பெண்களே செய்வதுகூட இனி வரும் காலங்களில் சாத்தியமானதுதான் என்பதை செந்தி கேரக்டர் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை ஆளுமைத் தன்மையுடன் நடத்திக் காண்பிக்கும் தைரியமும், திறனும் பெண்ணுக்கும் உண்டு என்பதாக லட்சுமி மஞ்சு கேரக்டரில் காட்டுகிறார் இயக்குநர்.
பள்ளியில் படிக்கும் பையன்கள் தங்களுடைய கவனத்தை வேறு வழிகளில் திசை திருப்பாமல் கல்விக்கு உதவும் வகையிலான விளையாட்டுக்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும், வீட்டில் அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் எதையும் செய்யாது, அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமலும் இருப்பதுமே அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு சிறப்பு என்பதையும் ஜோதிகா-விதார்த் தம்பதிகளின் மகனின் கேரக்டர் மூலமாகச் சொல்லியிருக்கிறார்.
இப்படி நாட்டிலும், குடும்பங்களிலும் நிலவுகிற அனைத்து வகைப் பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு மருந்தாக.. காயகல்ப பஸ்மாக காட்சியளிக்கிறது இந்த ‘காற்றின் மொழி’ திரைப்படம்..!
மிட் நைட் புரோகிராமாக இருந்தும் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு மிக அற்புதமான பதில்களை படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். பெண்களுக்கான உள்ளாடைகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்பவரின் பிரச்சினைக்கு ஜோதிகா சொல்லும் தீர்வும், ரயில் டிரைவர் இதுவரையிலும் 46 பேரை கொலை செய்திருக்கிறேன் என்று வருத்தப்படுவதற்கு அவர் சொல்லும் தீர்வும் உண்மையில் சிறந்த மன நல தீர்வாகும்..!
படத்தின் நாயகனும் ஜோதிகாதான். நாயகியும் ஜோதிகாதான். அற்புதமான நடிப்பு.. இன்னமும் அழகு குலையாத முகம்.. கட்டுக்குலையாத உடல்.. நொடிக்கு நொடி சட்டென மாறும் அவரது உடல் மொழி.. கச்சிதமான வார்த்தைப் பிரயோகம்.. என்று எல்லாமும் சேர்ந்து ஜோ-வை பெரிதும் ரசிக்க வைக்கிறது.
ஒரேயொரு கண் சிமிட்டலில் விதார்த்தை கவிழ்ப்பதும், ‘நேத்து ராத்திரி யம்மா’வை மாடுலேஷனுடன் சிச்சுவேஷனுக்கேற்றாற்போல் பாடுவதும், ‘புதிய பறவை’ படத்தின் புகழ் பெற்ற வசனமான ‘கோப்பாபால்..’ என்று சரோஜாதேவி போல் பேசி கலாய்ப்பதும், எஃப்.எம். ஸ்டூடியோவில் குமாரவேலை கிண்டல் செய்வதுமாய் முதல் பாதியில் முற்றிலும் குஷி ஜோதிகாவாய் தெரிகிறார்.
பிற்பாதியில்தான் அவரது சோக, வேக, கோப, ஆத்திர நடிப்பு அத்தனைக்கும் தீனி போட்டிருக்கிறார் இயக்குநர். ஆனாலும் சிற்சில இடங்களில் குளோஸப் ஷாட்டுகளில் அது தீவிரமான நடிப்பாகவும் தெரிவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
தன்னுடைய படிப்பு ஏன் பாழானது என்று சொல்லி தன் அக்காள்களிடம் சண்டையிடும்போதும், நக்கல் அடிக்கும் தன் அப்பாவை சமாளிக்க முடியாமல் திணறும்போதும், பையனை தானே வளர்த்துக் கொள்வதாய் சொல்லி அனைவரையும் விரட்டுவிடும் காட்சியிலும் ஜோதிகா காணாமல் போய் விஜயலட்சுமியே தெரிகிறார்.
விரலுக்கேத்த வீக்கமாய் விதார்த் கொஞ்சம் அடக்கமான கணவராக அதே சமயம் பேசத் தெரியாதவராகவும் நடித்திருக்கிறார். ரொமான்ஸில் ஜோதிகாவுடன் சளைக்காமல் போராடியும் மயிரிழையில் தோல்வியடைந்துள்ளார். ஜோதிகாவின் ஸ்பீடும், வழிசலும் இவரிடத்தில் இல்லை. என்றாலும் மற்றைய நடிப்பில் பின்னிவிட்டார்.
தனது மகன் பிரச்சினை பெரிதானதும் அவர் எடுக்கும் முடிவும்.. அதே நிகழ்ச்சிக்கு தானே ஒரு நேயர் போல் போன் செய்தும் அடக்கமாய் தன்னுடைய பிரச்சினையை வெளிப்படையாய் ஜோதிகாவுக்கு சொல்லும்போதும் ‘அச்சச்சோ’ என்று சொல்ல வைத்திருக்கிறார் விதார்த்.
கம்பெனியில் புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் முதலாளியை சமாளிக்க முடியாமல் அவர் படும்பாடும், இதனால் விளையும் பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதத்தில் விதார்த்தின் நடிப்பு ரசிக்கக் கூடியதாக உள்ளது.
இவர்களின் மகனாக நடித்த பையன், நடிப்பு தம்பதிகளின் மகனாக இருப்பதால் அவருக்கு நடிப்பு இயல்பாகவே வந்திருக்கிறது. மிக அழகாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
வானொலி நிலையத்தின் தலைமை செயல் அதிகாரியாக லட்சுமி மஞ்சு நடித்திருக்கிறார். அந்தக் கேரக்டருக்கான கெத்தோடு, அதிகாரத்தோடு, அதே சமயம் வளைந்து கொடுக்கும் தன்மையோடு மிக யதார்த்தமாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இவருடைய உடைகளை வடிவமைத்தவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. கச்சிதமாக இருக்கிறது. ஒரு வோட்கா ‘புல்’லை ராவாக அடித்தது போன்ற இவரது கனமான கவர்ச்சியான குரலும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது. வாழ்த்துகள். பாராட்டுக்கள் மேடம்..!
ராதாமோகனின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகளான குமாரவேலுவும், எம்.எஸ்.பாஸ்கரும் எப்போதும்போல இந்தப் படத்திலும் தங்களது முத்திரையைக் கச்சிதமாக குத்தியிருக்கிறார்கள்.
வானொலி நிலையத்தின் ஆஸ்தான வித்வானாக காட்சியளிக்கும் குமாரவேலுவின் கவிஞர், எழுத்தாளர் வேடம் கச்சிதம். ‘ஆலுமா டோலுமா’ பாடலை ‘அன்னபூரணி அப்பளமாக’ மாற்றி பாடலை சொல்லும் காட்சியில் சிரித்து சிரித்து மாய்ந்து போனோம். ‘நாயும் பொழைக்குமா இந்தப் பொழைப்பு..?’ என்று கடைசியாய் வெகுண்டெழும் அவரது கவிஞருக்கான எமோஷன் காட்சிகள் கச்சிதமான நகைச்சுவை. இவருடைய ஒன் லைன் ஸ்டாண்ட் அப் காமெடி வசனங்கள் கவர்ந்திழுக்கின்றன.
எம்.எஸ்.பாஸ்கர் அனைவரிடமும் வார்த்தைகளைக் கொட்டி கோபக்காரராக இருப்பவர் ஒரு நாள் இரவில் போனில் ஜோதிகாவிடம் பேசி தன் மனதைக் கொட்டிவிட்டு அடுத்த நாளே எல்லாத்தையும் மறந்து புதிய பாஸ்கராக காட்சியளிப்பது அருமை. மிகச் சிறந்த கதாபாத்திரப் படைப்பு..!
வழக்கம்போல மனோபாலா இடையில் புகும் காட்சிகளுக்கேற்ப நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். அப்பளம் விற்கும் மாமியாக வரும் ‘சரோஜா’ என்ற உமா பத்மபநாபனுக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான படம். அவர் அறிமுகமாகும் காட்சியிலேயே பிடித்துப் போகிறது. நேரங்கெட்ட நேரத்தில் வந்து ஜோதிகாவிடம் ரிசிபியை செய்து கொடுக்கும்படி கேட்டு ரகளை செய்யும் காட்சியில் அசத்தல் நடிப்பு. இவரைப் பார்த்தவுடன் மனோபாலாவுக்கு தலைக்கு மேலை லைட்டு எரியும் காட்சிக்கு அடுத்து காட்சிகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இவர்களது கதையை பாதியிலேயே விட்டுவிட்டார் இயக்குநர்.
மூன்றே மூன்று காட்சி என்றாலும் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார் மயில்சாமி. முந்திரி பருப்பை சாப்பிட்டுவிட்டு போனில் அழைத்த வல்லிய பெண்குட்டியைத் தேடி 5-வது மாடிக்கு ஏறிப் போய் இறங்கிப் போய் அல்லல்படும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது..! வெல்டன் ஸார்..!
ஜோதிகாவிடம் சந்தேகம் கேட்கும் சாம்பிராணியாக இரண்டு காட்சிகளில் நடித்திருக்கும் யோகி பாபுவும், இடையில் சில நிமிடங்கள் கலகலக்க வைத்திருக்கிறார்..!
இடையில் ஒரேயொரு காட்சியில் சிம்பு தலையைக் காட்டியிருக்கிறார். அதிலும், “லேட்டா வந்ததுக்கு என்கிட்ட ஸாரி கேக்குற முதல் ஆளு நீங்கதான்…” என்று உள்குத்தாய் ஜோதிகாவிடம் சொல்லும் காட்சியை வைத்தமைக்காக இயக்குநரை பெரிதும் பாராட்ட வேண்டும்.
மேலும் ஜோதிகாவே பார்த்து பொறாமைப்படும் ஆர்.ஜே.வான சிரிப்பு ராணியாக படம் முழுவதும் வலம் வந்திருக்கும் சண்ட்ரா எமி, வானொலி நிலைய ரிசப்ஷனிஸ்ட்டாக சிந்து ஷியாம் மற்றும் அவரிடம் மதியச் சாப்பாடு சப்ளைக்காக பணம் கேட்டு கெஞ்சும் அந்த காமெடியன், ஜோதிகாவின் அக்காள்கள், அப்பா மோகன்ராம் என்று அனைவருமே வழக்கம்போல் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜோதிகாவின் அக்காள்கள் கேரக்டரில் நடித்தவர்கள்தான் ஹிந்தி மூலமான ‘தும்ஹாரி சுலு’விலும் இதே கேரக்டரில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநருக்கு அடுத்தபடியாக படத்துக்கு பெரிதும் உதவியிருப்பது வசனகர்த்தா பொன்.பார்த்திபனின் முத்தான வசனங்கள்தான். ஜோதிகா நிகழ்ச்சியில் பிரச்சினைகளுக்கு சொல்லும் தீர்வுகளும், குமாரவேலுவும், லட்சுமி மஞ்சுவும் கோபத்துடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகளின் வசனங்களும் அந்தக் காட்சிகளைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன.
இதேபோல் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா சம்பந்தப்பட்ட காட்சி, மற்றும் மயில்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் மிக எளிமையான வசனங்களால் ‘ஏ’ கிளாஸ் வசனம் என்பதையும் தாண்டி ரசிக்க வைத்திருக்கிறார் பொன்.பார்த்திபன்.
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு படம் முழுவதும் வியாபித்துள்ளது. ஒரு காட்சியில்கூட கலர் டோன் குறையவே இல்லை. போதாக்குறைக்கு அனைத்து கதாபாத்திரங்களின் உடைகளும் சிறப்பாக டிஸைன் செய்யப்பட்டுள்ளதால் ஆள் பாதி, ஆடை பாதியாகவே அனைத்தையும் ரசிக்க முடிந்திருக்கிறது.
புதிய இசையமைப்பாளரான காஸிப் பாராட்டுக்குரியவர். ‘கிளம்பிட்டாளே விஜயலட்சுமி’ பாடல் படம் முழுவதும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாடல் காட்சியை படமாக்கியவிதமும்கூட அழகு. ஒரிஜினலில் இருப்பதையே அதிகமாக படமாக்கியிருக்கிறார்கள்.
‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடல் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே இருக்கிறது. இதுதான் அந்தத் தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையைக் காட்டுகிறது என்பதைக்கூட சிறப்பான காட்சிகளால் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் காட்சியில் இம்மியளவுகூட தரம் கெடாமல் படமாக்கியிருக்கிறார்கள். பாடல் ஒரு மாதிரியாக இருந்தாலும், நடன அசைவுகள் அழகு. இசையும் கேட்கும் தரத்தில் அமைந்திருக்கிறது.
படத்தில் குறை சொல்லித்தான் தீர வேண்டும் என்று அடம் பிடித்தால்கூட தேடிக் கண்டுபிடிக்க இன்னொரு முறையும் படம் பார்த்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தை இந்தப் படம் உருவாக்கியிருப்பதால் நிறைகளை மட்டுமே சொல்லுவோம்..!
இவை போன்ற சிறந்த திரைப்படங்களே தமிழ்த் திரைப்பட துறையின் பெயரைக் காப்பாற்றுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களும், இயக்குநரும் நிச்சயம் பெருமைக்குரியவர்கள். நாம் பெரிதும் பாராட்டுகிறோம்.. வாழ்த்துகிறோம்.
இந்த ‘காற்றின் மொழி’ அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்..!