full screen background image

காதலிக்க நேரமில்லை – சினிமா விமர்சனம்

காதலிக்க நேரமில்லை – சினிமா விமர்சனம்

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி என்ற ரவி மோகன் நாயகனாக நடிக்க, நித்யா மேனன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T.J.பானு, லால், ஜான் கொகேய்ன், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். U.கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, படத் தொகுப்புப் பணிகளை லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார். கிருத்திகா உதயநிதி எழுதி, இயக்கியுள்ளார்.

காதலிக்க நேரமில்லைஎன்ற இந்தத் தலைப்பில் 1964-ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக, மிக முக்கியமான ஒரு திரைப்படம். நகைச்சுவை, அந்தகம், காமெடி என்று எந்த வார்த்தைகளில் சொன்னாலும் இந்தப் படத்தை வீழ்த்தும் அளவுக்கான ஒரு திரைப்படம், இதற்குப் பின்பு வந்ததே இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் ஒரு மிகப் பெரிய சாதனை.

அப்படி ஒரு வெற்றி பெற்ற, சாதனை படைத்த, படத்தின் தலைப்பை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய படம், அந்தப் படத்தின் பெயரையும், மாண்பையும் குலைக்கும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

இந்தப் படம் இன்றைய நவநாகரீக வாழ்க்கையில் சில இளைஞர்களின் மனப்போக்கை காட்டுவதாக இருந்தாலும், சில இடங்களில் சில பேர் செய்கின்ற தவறுகளைப் பெரிதாக்கி அதை போல் பலரும் இருப்பார்கள்; அல்லது இருந்தாக வேண்டும்; அல்லது இருங்கள் என்று மறைமுகமாக, அந்த ஒரு சிலரின் கருத்தை வலியுறுத்துவதுபோல அமைந்திருப்பது வேதனையான விஷயம்.

செக்ஸ் என்பது மனித வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். ஆனால் அதுவே முழு வாழ்க்கை அல்ல. குடும்பம், குழந்தை என்கின்ற கான்செப்ட் மனிதர்கள் அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். மற்றவர்கள் குடும்பத்திலும் நுழைந்து குழப்பம் செய்வித்து மிருகங்கள்போல தாறுமாறான வாழ்க்கையை வாழக் கூடாது என்பதற்காகவும்தான்.

ஆனால் இப்போதைய பாஸ்ட் புட் வாழ்க்கைச் சூழலில் ஒரு சிலர் இந்த குடும்பம் என்ற கான்செப்ட்டே தேவையில்லை. நாம் விருப்பம் போல வாழலாம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கின்றனர். இந்த விருப்பம் போல வாழலாம் என்கின்ற நினைப்பில்தான் அனைத்துவிதமான அக்கிரமங்களும், மனிதத் தன்மையற்ற, சட்ட விரோதமான செயல்களும் நடைபெறுகின்றன.

அதில் ஒன்றைத்தான் இந்த படத்தில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி சொல்ல வந்து, கடைசியில் “இதுதான் நிஜமான வாழ்க்கை” என்று  சொல்லி தவறான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

ஜெயம் ரவிஸாரி ரவி மோகன், ஒரு பில்டிங் கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் மிகப் பெரிய கட்டிட வல்லுநராக இருக்கிறார். மாடலிங் செய்து வரும் பானுவை நீண்ட நாட்களாகக் காதலித்து வருகிறார். பானுவையே திருமணம் செய்து கொள்ளவும் நினைக்கிறார். ஜெயம் ரவி, “கல்யாணம் செய்து கொள்ளலாம். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தத்தின்போது, பானு வராமல் போக அந்தத் திருமணம் நின்று விடுகிறது.

ஜெயம் ரவியின் நண்பரான வினய், விந்து தானம் செய்யப் போகும்போது துணைக்குச் சென்ற ஜெயம் ரவியும், யோகிபாபுவும்  ஒரு ஆர்வத்தில் தாங்களும் விந்து தானம் செய்துவிட்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் நித்யா மேனன் தன்னுடைய நான்கு வருட காதலரை திருமணம் செய்து கொள்வதற்கு தயாராக இருக்கிறார்.

ஆனால், அந்த நேரத்தில் அவருடைய காதலரான ஜான் கோகேய்ன், அமெரிக்காவிற்கு வேலைக்காக செல்ல வேண்டியுள்ளது.

திருமணம் செய்து கொண்டு போனால் விசா எளிதாக கிடைக்கும் என்று நினைத்து நித்யா மேனனை கன்வின்ஸ் செய்து, அவசரமாக ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்கிறார் ஜான்.

அதன் பின்பு ஜான் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை நித்யா மேனன் பார்த்துவிட்டதால், இந்தத் திருமணம் முறிந்து போகிறது.

இதைத் தொடர்ந்து ஆண்கள் மேல் பொதுவாக தப்பான அபிப்ராயம் கொள்ளும் நித்யா மேனன், ஆண்களின் தயவு இல்லாமல் டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார். அதனால் அவசரப்பட்டு குழந்தையை ஏற்றுக் கொள்கிறார்.

தன் வயிற்றில் உண்டாகியிருக்கும் கருவுக்கு விந்து தானம் செய்தது ஜெயம் ரவி என்பது நித்யாவுக்குத் தெரியாது. கரு வளர்ந்தவுடன், இந்தக் குழந்தைக்கு தந்தை யார் என்பதை அறிவதற்காக நித்யா மேனன், ஜெயம் ரவியின் முகவரியைத் தெரிந்து கொண்டு பெங்களூர் செல்கிறார்.

பெங்களூர் வந்த நித்யா, ஜெயம் ரவியைத் தேடுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெயம் ரவியை பார்த்துப் பேசிவிட்டு அவர்தான் தன்னுடைய வயிற்றில் உள்ள குழந்தைக்கு அப்பா என்பதே தெரியாமல் அவருடன் நட்பு பேணுகிறார்.

அவர் வீட்டிலேயே தங்கியிருந்து, அவருடைய குடும்பத்துடன் பேசிவிட்டு சென்னை வந்து விடுகிறார் நித்யா. அதற்குப் பிறகு, இவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்புகளே இல்லை.

எட்டு வருடங்கள் கழித்து நித்யாவின் மகன் இப்பொழுது பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறான். இந்த நேரத்தில் சென்னையில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த ஜெயம் ரவி மறுபடியும் நித்யாவை சந்திக்க நேர்கிறது. நித்யா வசிக்கும் அதே அபார்ட்மெண்ட்டில் வேறொரு பிளாட்டில் ஜெயம் ரவி தங்க வேண்டிய சூழல்.

அந்த நேரத்தில் இருவருக்கும் இடையில் மீண்டும் ஒரு புரிதல் ஏற்பட்டு நித்யாவுக்கு, ஜெயம் ரவி மீது ஒரு ஈர்ப்பும் உண்டாகிறது. இந்த நேரத்தில் ஜெயம் ரவியின் முன்னாள் காதலி மறுபடியும் திரும்பி வருகிறாள்.

நித்யாவின் மகன் ஜெயம் ரவியுடன் மிகுந்த ஒட்டுதலாகிவிட ஜெயம் ரவி, அந்தச் சிறுவனைப் பிரிய முடியாத சூழல் ஏற்படுகிறது.

இவர்கள் இருவருக்குமான நட்பு தொடர்ந்ததா? அல்லது இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா? கடைசியில் இருவருடைய வாழ்க்கையும் என்னவானது? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தை முழுமையாக தாங்கிப் பிடித்து இருப்பது நித்யா மேனன்தான். அவருடைய மிக, மிக இயல்பான நடிப்புதான் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது. இவ்வளவு பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, கொஞ்சமும் கவர்ச்சி காட்டாமல், அழகில்லாத ஒரு முகத்தையும் வைத்துக் கொண்டு, நித்யா மேனன் பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பாற்றலை மட்டுமே வைத்து ஜெயித்துக் கொண்டே வருகிறார். இந்த படத்திலும் அவர் ஜெயித்து விட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.

தன் கர்ப்பமாக இருப்பதை தன்னுடைய பெற்றோரிடம் அவர் சொல்கின்ற அந்தக் காட்சியே அவருடைய நடிப்பாற்றலுக்கு உதாரணமாக சொல்லலாம். ஜெயம் ரவியை முதன்முதலாக பார்க்கும்பொழுது அவருக்குள் ஏற்படும் கெமிஸ்ட்ரியும், அதற்குப் பிறகு அவரைப் பார்க்க முடியாமல் தவிக்கின்றபோது அவர் காட்டுகின்ற அந்த நடிப்பும் அசத்தல்..!

மகனை காணாமல் தேடுகின்ற அந்த 15 நிமிட காட்சிகளில் நம் மனதை ஆக்கிரமித்துவிட்டார் நித்யா. அதோடு ஜெயரவியை தவறாக புரிந்து கொண்ட ஒரு தருணத்தில் அவர் காட்டுகின்ற வேகமும், நடிப்பும் சிம்பிளி சூப்பர் என்று சொல்லலாம்.

ஜெயம் ரவி பல திரைப்படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்துவிட்டு, இந்தப் படத்தில் கொஞ்சம் ஆக்சன் இல்லாத ஒரு அமைதியான இளைஞனாக நடித்திருக்கிறார். ஆனால், அவருடைய வயதுகூடகூட அவருடைய உடல் வாகுவும் கூடியிருக்கிறது. அது, இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது. இனிமேலும் இவர் இளைஞராக நடிப்பது என்பதை கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

கொஞ்சமும் கோபப்படாமல்.. சும்மா நார்மலாக நண்பர்களுடன் ஜாலியாக இருக்கின்ற மாதிரியான ஒரு கேரக்டரில் இடைவேளைக்கு முன்புவரையில் நடித்து விட்டு, பின்பு கொஞ்சம் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டிய சூழ்நிலையை தன்னுடைய நடிப்பிலும் காண்பித்திருக்கிறார் ஜெயம் ரவி.

கிளைமாக்ஸ் காட்சியில் அவர் காட்டுகின்ற நிதானமும், இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறெந்த சந்தர்ப்பம் வாழ்க்கையில் வராது என்பதால் இப்போதாவது இணைந்து விடுவோமே என்ற எதிர்பார்ப்புடன் ஒரு காட்டுகின்ற நடிப்பும் ரசிக்கும்படி இருந்தது.

ஜெயம் ரவியின் காதலியாக நடித்திருக்கும் டி.ஜே.பானு அசப்பில் அதிதி பாலனை போலவே இருந்தாலும், நடிப்பிலும் மின்னியிருக்கிறார். கேமிராவுக்கு ஏற்ற முகம். மிகச் சிறப்பான தேர்வு.

நண்பர்களாக நடித்திருக்கும் வினய்யும், யோகி பாபுவும் திரைக்கதையை நகர்த்துவதற்கும் சில இடங்களில் மெலிதாக சிரிக்க வைப்பதற்கும் உதவியிருக்கிறார்கள்.

நித்யாவின் சித்தியாக நடித்திருக்கும் வினோதினி திரைக்கதைக்கு கொஞ்சம் உதவி இருக்கிறார். “என்னடி சிகரெட்டு? என்ன இது புது பழக்கம்?!” என்று கேட்கும்போது நம்முடைய பிரதிநிதியாகவே நமக்குத் தெரிகிறார்.

நித்யா மேனனின் தாய், தந்தையாக நடித்த பாடகர் மனோவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் அப்பாவாக நடித்த மலையாள நடிகர் லாலும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் தொழில் நுட்பத்தில் எதுவும் சோடை போகவில்லை ஒளிப்பதிவை கொட்டிக் குவித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அற்புதமான ஒளிப்பதிவு. படத்தின் துவக்கக் கட்சியில் இருந்து கடைசிவரைக்கும் சிறப்புதான். பாடல் காட்சிகளில் ரொம்பவும் அழகாக மாண்டேஜ் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

பாடல்களும், நடனமும் படத்தை நகர்த்துவதற்கு மட்டுமே உதவி இருக்கின்றன. லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் இந்தப் படம் ஒரு குடும்பப் படம் என்பதற்கு ஏற்றபடியே அமைந்திருக்கிறது.

சண்முகராஜாவின் கலை இயக்கம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஜெயம் ரவியின் பெங்களூர் வீடு, நித்யா மேனனின் தாய் வீடு, அவர் வசிக்கின்ற பிளாட் என்று பல இன்டோர் செட்டுகளை எல்லாம் மிக அழகாக வடிவமைத்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

படத்தில் இன்னொரு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது காஸ்ட்யூம் டிசைனிங். டிசைனர்ஸ் கவிதா, திவ்ய லக்ஷனா இருவரையும் மனதார பாராட்ட வேண்டும். நித்யா மேனனின் ட்ரெஸ்ஸிங் அந்த அளவுக்கு மிகவும் சிறப்பு. கடைசிவரையில் அவ்வளவு அழகான ட்ரெஸ்ஸிங்கில் நம்மை தொடர்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.

முதலில் இந்தப் படம் யாருக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதே புரியவில்லை. படத்தின் முக்கால்வாசி வசனங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. படத்தின் டர்னிங் பாயிண்ட்டான சில வசனங்கள்கூட ஆங்கிலத்தில் அமைந்து நம்மை சோதனைக்குள்ளாக்கியிருக்கிறது.

மால் தியேட்டர்களில் படம் பார்க்க வருபவர்கள் மட்டுமே எங்களது படத்தைப் பார்த்தால் போதும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும்.. மால் தியேட்டர்களிலும் 10 ருபாய், 25 ரூபாய் டிக்கெட்டுக்களில் படம் பார்க்க வரும் ரசிகர்களை என்னவென்று நினைத்துவிட்டார் இயக்குநர்?…

படம் பார்த்து, வசனங்கள் புரிந்து, காட்சியமைப்புகள் விளங்கி, கதை என்னவென்று தெரிந்தால்தானே நடிப்பவர்களின் நடிப்பை கிரகித்து படத்துடன் ஒன்ற முடியும்?.. இங்கே முதலுக்கே மோசம் என்பதுபோல வசனங்களை அந்நிய மொழியில் வைத்துவிட்டு படத்தை பீலிங்கோட பாருங்கஎன்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது..?

இன்னொரு பக்கம், இந்தப் படம் ஒட்டு மொத்தமாக என்னதான் சொல்ல வருகிறது என்று தோண்டித் துருவி பார்த்தாலும் இதில் நமக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்பது சோகமான ஒரு விஷயம்.

குடும்பம் என்ற கான்செப்ட்டை உடைப்பது போல ஜெயம் ரவி பேசுவதையும், நித்யா மேனன் பேசுவதையும் தவறு என்பதை ஒரு இடத்தில்கூட மற்ற கதாபாத்திரங்களை வைத்து சொல்லவில்லை என்பதுதான் மிகவும் சோகமான ஒரு விஷயம்.

அதிலும் மேதாவித்தனமாக நித்யாவின் குடும்பத்தை பிராமணக் குடும்பமாகக் காட்டியிருப்பதுகூட ஒரு உள் அரசியல்தான். அவர்களை மறைமுகமாகக் கிண்டல் செய்வதுபோல திரைக்கதையும், வசனங்களும் இருப்பது அடுத்தக் கொடுமை.

வேறெந்த சாதிக்காரர்களையும் சினிமாவில் இப்படி கூர்மையாகத் தாக்கிவிட முடியாது. வெகுண்டெழுந்து வந்து சட்டையைப் பிடித்துவிடுவார்கள். பிராமணர்கள்தானே.. வரவா போறாங்க.. கேட்கவா போறாங்க.. என்ற அலட்சியம்தான் திரைப்படங்களில் தொடர்ச்சியாகப் பிராமணர்களைக் குறி வைத்துத் தாக்குவதற்குக் காரணம்.. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல!

சிறப்பாக இயக்கம் செய்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி. சிறந்த நடிப்பை நடித்தவர்களிடமிருந்து வரவழைத்திருக்கிறார். ஆனால், இந்தப் படத்தை பார்க்கின்ற இளைய சமூகத்தினர், இன்றைய இளைஞர்கள் எல்லாம் என்ன நினைப்பார்கள்..? அவர்களுடைய வாழ்க்கை என்னவாகும் என்பதைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் விட்டுவிட்டார்.

புதுசா எதையாவது ஒன்றைக் கொடுப்போம். அப்போதுதான் நாம் கவனிக்கப்படுவோம். அப்போதுதான் நம்மையும் ஒரு இயக்குநராக அனைவரும் பேசுவார்கள். பரபரப்பாவோம்…” என்ற ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறோம்.

இதைவிட கொடுமையாக படம் முழுவதும் ஒரே குடி.. குடி.. குடி நித்யா மேனன் உட்பட அனைத்து பெண்களுமே படத்தில் குடிப்பது போல காட்சிகளை வைத்திருப்பது மகா மட்டமான விஷயம். “அதுதான் முன்னாடி டைட்டிலில் கார்டு  போட்டுவிட்டோமே..?” என்று சொன்னாலும் இத்தனை குடிகாரக் காட்சிகள் தேவைதானா இயக்குநரே?...

இப்படி குடியை இன்னொரு பக்கம் ஆராதித்து, அதனை தூண்டிவிடுவதுபோல இருக்கும், இந்தப் படம் நிச்சயமாக வன்மையாக கண்டிக்கக் கூடிய ஒரு திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குடும்பம் என்ற கான்செப்ட்டை கொஞ்சம் கொஞ்சமாக மேல் தட்டு வர்க்கம் உடைத்துக் கொண்டு வருகின்றன. காரணம், எப்படி வேண்டுமானால் நாங்கள் வாழ்வோம்.. வாழலாம்.. என்ற எண்ணம்தான்.

அவர்களில் சிலர் தங்களது செக்ஸ் தேவைகளுக்காகவும், வடிகாலுக்காகவும் மட்டுமே ஓரினச் சேர்க்கையாளராக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த ஓரினச் சேர்க்கையை சரியானதுதான் என்பதுபோல ஜெயம் ரவியின் நண்பரான வினய்யை ஓரினச் சேர்க்கையாளராக காட்டி, அவர் ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளஅந்த திருமணத்திற்கு இவர்கள் எல்லாம் போய் வாழ்த்துவது போல வாழ்த்தி இந்தப் படத்தை மிக மிக முற்போக்கான திரைப்படமாக கொண்டு வந்து காட்டி தான் ஒரு முற்போக்கான இயக்குநர் என்கின்ற பெயரை பெற வேண்டும் என்று ஆசையில் இந்தப் படத்தைக் கொடுத்து தமிழ் சமூகத்தை கெடுக்கும் வேலையைச் செய்திருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.

மொத்தத்தில் இந்த திரைப்படம் தியேட்டர்களுக்கே வந்திருக்கக் கூடாத திரைப்படம். பார்க்கவே கூடாத திரைப்படம். சமூகத்தை கெடுக்கக் கூடிய ஒரு திரைப்படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மிக மிக வருந்துகிறோம்.

Our Score