ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் காந்தாரா அத்தியாயம் 1 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
இதில் ரிஷப் ஷெட்டி – பெர்மே, ருக்மிணி வசந்த் – கனகவதி, ஜெயராம் – (மன்னர் விஜயேந்திரா), குல்ஷன் தேவய்யா – குலசேகரா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இணை எழுத்தாளர்கள் : அனிருத் மகேஷ், ஷானில் கவுதம், ஒளிப்பதிவு : அரவிந்த் எஸ். காஷ்யப், ஐஎஸ்சி, இசை – பின்னணி இசை : அஜனீஷ் லோக்நாத், எடிட்டர் : சுரேஷ், ஆடை அலங்கார இயக்குநர் : பிரகதி ஷெட்டி, ஆர்ட் டைரக்டர் : தரணி கங்கேபுத்திரா, ஸ்டண்ட் அமைப்பாளர்கள் : அர்ஜுன் ராஜ், டோடார் லாசரோவ் (ஜூஜி), ராம் – லக்ஷ்மண், மகேஷ் மாத்யூ, மிதுன் சிங் ராஜ்புத், நடன அமைப்பாளர்கள் : புஷன், ஸ்வராஜ் ஷெட்டி, வி எஃப். எக்ஸ் மேற்பார்வையாளர் : சஞ்ஜித், டிஐ : கலர் பிளானெட் ஸ்டுடியோஸ், கொச்சி, கலரிஸ்ட் : ரமேஷ் சி.பி, ஸ்ரிக் வாரியர், ஆடியோகிராஃபி : ஆ.சு. ராஜகிருஷ்ணன், சவுண்ட் டிசைன் : ஒளி சவுண்ட் லாப்ஸ், சூப்பர்வைசிங் சவுண்ட் எடிட்டர் : அருண் எஸ். முணி, பத்திரிக்கை தொடர்பு : யுவராஜ்.
2022-ம் ஆண்டில் வெளிவந்த ‘காந்தாரா’ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் அடுத்தப் பாகமாக இந்தப் படம் வந்துள்ளது. முதல் பாகத்தின் கடைசியில் படத்தின் நாயகனும், அவருடைய தந்தையும் எப்படி அங்கிருந்து மாயமாக மறைந்தார்கள் என்பதை பிளாஷ்பேக் மூலமாக சொல்ல வேண்டிய கதையின் தொடர்ச்சியாக இந்தப் படம் ‘காந்தாரா – சேப்டர்-1’ என்கின்ற பெயரில் வந்துள்ளது.
இப்போது ‘காந்தாரா’ என்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் நாயகன் ரிஷப் தலைவனாக வாழ்ந்து வருகிறார். இந்த ஊரில் காவல் தெய்வமாகவும், எல்லை தெய்வமாகவும் நான்கு கருணீகக் கற்கள் அமைந்துள்ளன. அந்த காவல் தெய்வங்கள்தான் இதற்கு முந்தைய காலக்கட்டங்களில் பக்ரா அரசின் மன்னர்களிடம் இருந்தும் காந்தாராவுக்கு அருகில் இருக்கும் இன்னொரு இனமான கடப்பா என்ற பழங்குடியினரின் தாக்குதலில் இருந்தும் காப்பாற்றியது என்று காந்தார மக்கள் இப்போதுவரையிலும் நம்புகிறார்கள்.
காந்தாரா மக்கள் வாழும் பகுதியான ஈஸ்வரன் பூந்தோட்டம் என்கின்ற அந்த பூமியின் மீது கடப்பாவாசிகள் தொடுத்த போரின்போது இந்த நான்கு கற்களையும் வணங்கிவிட்டு சண்டையிட சென்ற காந்தாரா மக்கள் வெற்றி பெற்றார்கள். அதனால் இந்த நான்கு கருணீகக் கற்களும் தங்களை காக்க வந்த தெய்வம் என்றும், சிவபெருமானின் அடையாளமாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.
இப்போது பாக்ரா நாட்டில் தற்போதைய மன்னரான ஜெயராம் தன்னுடைய அரசுரிமையை தன்னுடைய மகனான குலசேகரனுக்கு மாற்றித் தருகிறார். மகனை அரசனாக்குகிறார். ஆனால் அந்த மகன் எப்போதும் குடி போதையில் மிதக்கிறான். ஒரு அரசனுக்கு உரித்தான எந்த ஒரு பண்பும் இல்லாமல் இருக்கிறான்.
ஆனால் ஜெயராமின் மகளான இளவரசி கனகவதி மிகுந்த அரசியல் சாதூரியத்துடனும், பேச்சுத் திறமையுடனும்… அந்த அரச குடும்பத்தில் அனைவராலும் விருப்பப்படுபவர்களாகவும் இருக்கிறாள்.
காந்தாரா மக்கள் வாழும் ஈஸ்வர பூந்தோட்டத்தை கைப்பற்றி அந்த நான்கு சிவன் கடவுள்களையும் கைப்பற்ற கடப்பவாசிகள் மீண்டும் ஒரு முறை தாக்குதல் கொடுக்கிறார்கள். ஆனால் இப்போதும் அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கிறது.
காத்தாராவிலிருந்து வெளியில் வந்த ரிஷப் ஷெட்டி தன்னுடைய இன நண்பர்களுடன் பாக்ரா நாட்டுக்குள் செல்கிறார். அந்த நாட்டுக்குள் இவர்கள் போனதால் பல விபரீதங்கள் ஏற்பட்டு அங்கே சிறை கைதிகள் ஆகிறார்கள்.
ஆனால் தங்களுடைய புராக்கிரமத்தால் அங்கிருந்து தப்பிக்கும் அவர்கள் அங்கே இருந்த ஒரு தேரை நகர்த்திக் கொண்டு சென்றதில் பாக்ரா துறைமுகத்தில் இருக்கும் மார்க்கெட் போன்ற பகுதியையே நாசமாக்குகிறார்கள்.
இதை அடுத்து அந்த துறைமுகத்தின் ஏற்றுமதி, இறக்குமதியை நிகழ்வைப் பார்க்கும் ரிஷப் ஷெட்டி தங்களுடைய காந்தாரா நாட்டில் இது போல் நிறைய விவசாய விளைபொருள்களை உருவாக்கி அதை இந்த்த் துறைமுகத்திற்கு கொண்டு வந்து பண்டமாற்று முறையாக தங்களுடைய காந்தாரா மக்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று முடிவெடுக்கிறார்.
இதற்காக ரிஷப் ஷெட்டி கனகவதியை சந்தித்து பேச கனகவதி ரிஷப் ஷெட்டி மீது காதல் உணர்வில் இருக்க… அந்தக் காதலின் அடிப்படையில் துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தருகிறாள்.
தன்னை அவமானப்படுத்தி தப்பிச் சென்ற ரிஷப் செட்டி, தன் தங்கை கனகவதியுடன் நெருக்கமாக இருப்பதை அறியும் அரசன் குலசேகரன், காந்தாரா பகுதியை அழிக்க முடிவு செய்கிறான்.
தன்னுடைய படைகளுடன் காந்தாராவுக்குள் நுழைந்து பலவித கொடுமைகளை செய்து வீடுகளை தீ வைத்து எரித்து, குழந்தைகள், பெண்கள் அனைவரையும் படுகொலை செய்கிறான். இந்தக் கொடூரத்தில் ரிஷப் ஷெட்டியின் தாயாரும் கொல்லப்படுகிறாள்.
இதை அறிந்த ரிஷப் ஷெட்டி அங்கு வந்து பாக்ரா நட்டு படைகளுடன் மோதி, மன்னன் குலசேகரனையும் கொலை செய்து விடுகிறான். இதனால் அதிர்ச்சியாகும் குலசேகரனின் அப்பாவான ஜெயராம், காந்தாரி மக்களுடன் இணைந்து போக விரும்பி ரிஷப் ஷெட்டியுடன் ஒரு சமரச ஒப்பந்தம் செய்து கொள்கிறார்.
இந்த ஒப்பந்தத்தின்படி பாக்ரா அரசு, காந்தாரா பகுதிக்குள் நுழைவதையும் காந்தாரா பகுதி மக்கள் பாக்ரா தேசத்துக்குள் நுழைவதையும் தடுத்து ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது.
அதே நேரத்தில் தங்களுடைய நாட்டில் தெய்வ வலிமை குறைந்து விட்டதாகவும் இங்கே எந்த ஒரு கடவுளும் தங்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்பதையும் உணரும் ஜெயராம் தந்திரமாக காந்தாரா மக்களின் மிகப் பெரிய பலமாக இருக்கும் அந்த காரீண்யக் கற்களில் உயிர்ப்புடன் இருக்கும் சிவலிங்கங்களை தங்களது நாட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யும்படி ரிஷப்பிடம் கெஞ்சி கூத்தாடி கேட்கிறார்கள்.
ரிஷப் செட்டியும் இவர்களுடைய உள்ளடி வேலை தெரியாமல் தங்களுடைய தெய்வங்களை பாக்ரா தேசத்தின் கோவிலுக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்கிறார்கள்.
ஆனால் அதன் பிறகு காந்தாரா தேசத்தில், அந்த ஈஸ்வர பூந்தோட்டத்தில் பல அமானுஷ்யமான செயல்கள் நடக்கின்றன. ரிஷப் செட்டியின் கனவில் காந்தாரா பகுதியே அழியப் போவது போன்ற ஒரு கெட்ட செய்தியும் கிடைக்க ரிஷப் செட்டி குழம்பி போகிறார்.
இந்த நேரத்தில் தாங்கள் ஏற்கனவே தோற்கடித்த கடப்பா வம்சத்தை சேர்ந்தவர்களும் காந்தாராவுக்குள் நுழைய திட்டமிட்டு வருவதை அறியும் ரிஷப் செட்டி, தங்களுடைய தெய்வம் தங்களை விட்டு போனதால்தான் இவ்வளவு குழப்பங்கள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து மீண்டும் அந்த தெய்வங்களை கைப்பற்ற பாக்ராவுக்குள் தன் படை, பரிவாரங்களுடன் படையெடுக்கிறார்.
அந்தக் காரீண்யக் கற்கள் தம் கைக்கு கிடைத்துவிட்டதால் மன்னன் ஜெயராம் தனக்கு அதிக பலம் கிடைத்துவிட்டதாக கருதி காந்தாரா மக்களுடன் போரை எதிர் கொள்ள தயாராக காத்திருக்கிறார்.
இதன் பின்பு என்ன நடந்தது..? போரில் கந்தாரா மக்கள் வெற்றி பெற்றார்களா? அல்லது பாக்ரா நாடு வெற்றி பெற்றதா? கடப்பாவாசிகளின் கதி என்னவானது? யாருக்கு சிவபெருமானின் அருள் ஆசி கிடைத்தது?.. என்பதெல்லாம் இந்த அட்டகாசமான திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
கர்நாடகாவில் உடுப்பி பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான மக்களிடையே தெய்வங்களாக கருதப்படும் குளிகா, பஞ்சுருளி தெய்வங்களை முன் வைத்துதான் இந்த காந்தாராவின் முதல் பாகத்தை எடுத்திருந்தார் ரிஷப் ஷெட்டி.
குளிகா மற்றும் பஞ்சுருளி தெய்வங்கள் தன்னை அதிகம் நேசிக்கும் ஒரு பக்தனின் உடலில் புகுந்து அதன் மூலமாக எதிரிகளை விரட்டி அடித்து தன்னுடைய இன மக்களை காப்பாற்றுகின்றன என்பதைத்தான் தன்னுடைய அபாரமான நடிப்பினால் சொல்லியிருந்தார் ரிஷப் ஷெட்டி.
அந்த முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் அந்த தெய்வங்கள் அவருடைய உடலில் இறங்கி வித்தை காட்டும்போது அவர் காட்டி இருந்த நடிப்புதான் அந்த படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம்.
இந்தப் பாகத்தில் குளிகா தெய்வம் உள்ளே இறங்கும்போது ஒரு முறை அல்ல… ஏழு முறைகளாக ஒவ்வொரு முறைக்கும் மாற்றி மாற்றி தன்னுடைய ஆக்ரோஷமான தோற்றத்துடன் வித்தியாசமான வகையில் சாமியாடும் அந்த அதிசயத்தை ஏழுவிதமாகவும் மாற்றி மாற்றி காட்டியிருக்கும் ரிஷப் ஷெட்டியின் நடிப்பை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம்… அப்படி ஒரு ஆவேசத்தை தன்னுடைய உடல் மொழியால் காட்டியிருக்கிறார் ஹீரோ ரிஷப் செட்டி.
காட்சிக்கு காட்சி, பிரேமுக்கு பிரேம்… இந்தப் படத்தில் இயக்குநர் ரிசப் செட்டி செய்திருப்பது அத்தனையும் அதிசயம். இவ்வளவு கடின உழைப்பை கொட்டி படத்தை தயாரித்துக் கொடுத்திருப்பது என்பது சினிமாவை தெய்வமாகத் தொழும் ஒரு சிலரால் மட்டும்தான் முடியும். அந்த வகையில் ரிஷப் ஷெட்டியை கன்னட திரையுலகத்தின் மாஸ் இயக்குநர் என்றே சொல்லலாம்.
பாக்ரா நாட்டுக்குள் அந்த தேரை வைத்துக் கொண்டு இவர்கள் ஆடுகின்ற வித்தியாசமான சண்டைக் காட்சி நம்மை கவர்கிறது என்றால் அதற்குப் பிறகு கடப்பாவாசிகளுடன் நடக்கும் சண்டையும்.. குளிகாவை உடலுக்குள் ஏந்தி கொண்டு அந்த தெய்வத்தின் வலிமையை பெற்று அதன் பின்பு குலசேகரனை சம்ஹாரம் செய்யும் அந்தக் காட்சிகளும், அடுத்தடுத்து நடக்கும் சண்டை காட்சிகளில் எல்லாம் தன்னுடைய உடலை வருத்திக் கொண்டு எந்த அளவுக்கு பிரமிப்பை காட்ட முடியுமோ… அந்த அளவுக்கு பிரமிப்பை காட்டி நடித்திருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
இளவரசி கனகவதியாக அழகு காட்டி இருக்கும் ருக்மணி வசந்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அழகை காட்டி இருக்கிறார். கொட்டியும் இருக்கிறார். தன்னுடைய பேச்சில் தேன் தடவிய சொற்களை வைத்து ரிஷப் செட்டியை கவர்ந்திழுக்கும் போதும் அடடா என்ன ஒரு நடிப்பு என்று சொல்ல வைத்திருக்கிறார் ருக்மணி வசந்த். இறுதியில் அவருக்குள்ளே இருக்கும் ஒரு வில்லிக் கதாபாத்திரம் வெளிப்படும்போது ஐயோ இந்த அழகுக்குள் இப்படி ஒரு பயங்கரமா என்று பேச வைத்து விட்டார்.
மன்னன் குலசேகரனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா தன்னுடைய பாடி லாங்குவேஜ் அழகிலேயே நம்மை பெரிதும் கவர்ந்துவிட்டார். அட்டகாசமான நடிப்பை காண்பித்திருக்கிறார். அவர் கெட்டவர் என்றாலும் அவரை ரசிக்கும்படியான திரைக்கதையில் அவருடைய நடிப்பும், உடல் மொழியும் நம்மை பெரிதும் கவருகிறது.
பாக்ரா மன்னராக ஜெயராம் படத்தின் மிக முக்கியமான தருணங்களில் அமைதியாக நடித்து, பின்பு கடைசியாக வில்லத்தனத்தையும் காட்டி நடித்திருக்கிறார்.
ரிஷப் செட்டியின் அம்மாவாக நடித்த நடிகையும் ஒரு அற்புதமான நடிப்பை காண்பித்து இருக்கிறார். வழமையான சினிமாவின் துணை நடிகர், நடிகையராக இல்லாமல் இந்தப் படத்தில் பெரும்பாலான நடிகர்கள் புதுமுகங்களாகவும், அந்தப் பகுதி மக்களாகவும் இருந்து இந்தப் படத்தில் தங்களுடைய நடிப்பை காட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் வித்தியாசமான முகங்களில் காட்டும் நடிப்பை நம்மால் ரசிக்க முடிகிறது.
சென்னா என்ற கேரக்டரில் நடித்திருப்பவர் முதல் பாதியில் அவ்வப்பொழுது இடையிடையே கமெண்ட்ஸ்களை கொடுத்துக் கொண்டே வருவதை பார்த்தால் இந்தப் படம் புராண காலத்து கதையா அல்லது நம்முடைய அரசர்கள் காலத்து கதையா அல்லது இப்போது நடக்கின்ற கதையா என்று கொஞ்சம் யோசிக்கவும் வைத்திருக்கிறது. இந்த இடையிடையே வரும் அந்த காமெடிகளை கண்டிப்பாக கட் செய்து இருக்கலாம். அதனால் ஒரு தேவையில்லாத கவன ஈர்ப்பு ரசிகனை திரையை விட்டு வெளியேற செய்கிறது.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ்.காஷ்யப்பின் ஒளிப்பதிவு நிச்சயமாக பிரமிப்பை ஊட்டும் வகையில் இருக்கிறது. நாயகன் எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அதே அளவுக்கு படத்தின் ஒளிப்பதிவாளர் நிச்சயம் கஷ்டப்பட்டு இருப்பார். அந்த அளவுக்கு அவருடைய படப் பதிவு திரையில் நமக்குத் தெரிகிறது.
காத்தாரா மக்கள் வசிக்கும் பகுதி, அந்த மலைப் பிரதேசங்கள், இடையிடையே சிற்றாறுகள், மேலே இருந்து கொட்டி தீர்க்கும் அருவிகள், மிகப் பெரிய அரண்மனைகள், அரண்மனை தர்பார் காட்சிகள், அரண்மனைக்கு வெளிப்புறம் இருக்கும் நாட்டின் பகுதிகள், கடலோரம் இருக்கும் அந்த கிராமத்து மக்களின் வீடுகள், கலர் கலரான பகுதிகள், அமைதியாக உள்ளே இருக்கும் தெய்வங்கள்… இப்படி படம் நெடுகிலும் தன்னுடைய கேமரா வித்தையினால் ஒரு நிமிடம்கூட திரையை விட்டு நம் கண்களை எடுக்க விடாத அளவுக்கு படத்தில் ஒன்றி போக வைத்திருக்கிறார் ஒலிப்பதிவாளர். அவருக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
பாக்ரா நாடு, காந்தாரா தேசம், கடப்பா தேசம், பழங்குடியின மக்களின் வசிக்கும் இடம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கும் கலை இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அந்த அளவுக்கு கச்சிதமாக வடிவம் வைத்திருக்கிறார்.
வீடுகள், இடங்கள், மட்டுமல்லது அப்போதைய மக்கள் பயன்படுத்திய உணவுப் பொருட்கள், விளை பொருள்கள், கத்திகள், ஆயுதங்கள் என்று அத்தனையையும் நம் கண் முன்னே கொட்டி பிரமிக்க வைத்திருக்கிறார் கலை இயக்குநர்.
பின்னணி இசை அமைத்திருக்கும் அஜனீஷ் லோக்நாத் தன்னுடைய சிறப்பான பின்னணி இசையால் மொத்தப் படத்தையும் தூக்கிப் பிடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதிலும் தெய்வங்கள் உடலுக்குள் புகுந்த பின்பு ஹீரோ ஆடும் பேய் ஆட்டத்தில், அந்த ஆட்டத்திற்கு மிகுந்த மரியாதை கொடுப்பதை போல பின்னணி இசையை கூடவே அடித்து ஆடியிருக்கிறார்.
ருக்மணி வசந்தும், ரிஷப் செட்டியும் சந்திக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் இளமையையும் கொஞ்சம் காதலையும் ததும்பி வருவதைப் போல ஏதோ ஒன்று அவர்களுக்குள் நிகழப் போகிறது என்பதாகவே நம்மை தூண்டிவிடும் வகையில் இசையை மெல்லிசையாக பரவ விட்டு இருக்கிறார்.
படத்தின் தூண்களாக இருக்கும் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கும் அர்ஜுன் ராஜ், டோடார் லாசரோவ் (ஜூஜி), ராம் – லக்ஷ்மண், மகேஷ் மாத்யூ, மிதுன் சிங் ராஜ்புத் என்று எத்தனை சண்டை காட்சி அமைப்பாளர்களும் ஆளுக்கு ஒரு சண்டைக் காட்சியை ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வடிவமைத்திருக்கிறார்கள்
எடிட்டர் சுரேஷ் என்ன ஒரு மாயாஜாலம் செய்து இந்தப் படத்தை இரண்டரை மணி நேரம் படமாக நமக்கு கண்முன்னே காட்டி இருக்கிறார் என்றால் அவருடைய பொறுமை, அசாத்தியமான வேலை திறமை அனைத்தும் மொத்தப் படத்திலும் தெரிகிறது. சினிமாவை சினிமாவாக பார்ப்பதற்கு படத் தொகுப்புதான் முதல் காரணம்.. அந்தத் தொகுப்பில் சுரேஷின் மாயாஜாலம் திரையில் நமக்கு தெரிகிறது.
கர்நாடகாவில் படமாக்கப்பட்ட அந்த படம் கொச்சியில் டி.ஐ. செய்யப்பட்டு கலர் கிரேடிங் செய்யப்பட்டு உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு தரத்தில் கொஞ்சமும் சமரசமே செய்து கொள்ள மாட்டேன் என்ற ரிஷப் செட்டியின் அறிவாற்றலை காட்டுகிறது. இவ்வளவு அழகான காட்சிகளை லட்டு போல் எடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் அந்தக் காட்சிகளுக்கு எந்த ஒரு சின்ன இடையூறும் இல்லாத வகையில் செய்திருப்பதற்கு உதவி செய்திருக்கிறார்.
எந்தக் கட்சி கிராபிக்ஸ், எந்த காட்சி நிஜம் என்பதை நமக்கு தெரியாத வகையில் மிக அழகாக சிஜி செய்திருக்கிறார்கள். அந்த புலி வருகையையும் அதற்கு பின்பு வருகின்ற சிறு தெய்வத்தின் உதவியையும் கிராபிக்ஸில் வடிவமைத்திருப்பது ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது. இனிமேல் கிராபிக்ஸில் நாங்கள் அதகளம் செய்து இருக்கிறோம் என்று யாராவது சொன்னால், காந்தாராவை மிஞ்சியா என்று எதிர்க் கேள்வியை எழுப்பலாம். ஒரு இந்திய திரைப்படத்தில் இந்த அளவுக்கு கிராபிக்ஸில் வித்தை காட்ட முடியுமா என்ற ஒரு கேள்வியை இந்த காந்தாரா-2 திரைப்படம் எழுப்பியிருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பகுதிகளும் வாழ்ந்து வரும் மக்களுக்கு பொதுவான கடவுள்கள் இருந்தாலும், அவருடைய குலதெய்வங்கள் வேறு பேராக இருப்பார்கள். அந்த குலதெய்வங்கள்தான் அவர்கள் வணங்கும் முதல் கடவுளாகவும் இருக்கும்.
இந்தப் படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் தெரிந்திருக்கும் குளிகா, பஞ்சுருளி தெய்வங்களும், அவர்கள் செய்யும் பூதக்கலா வழிபாடுகளும் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டன. இதேபோல் இந்த குல தெய்வ வழிபாடுகளை நம் மக்கள் பின்பற்றிய வகையில் தெய்வங்களை பார்த்து அவர்கள் பயந்திருந்த அந்தக் காலகட்டம் நிச்சயம் நம்முடைய நாட்டின் வரலாற்றில் மிக உன்னதமான காலம் என்றே சொல்லலாம்.
குளிகா தெய்வ வழிபாட்டில் இருக்கும் பல்வேறு வகைகளையும் சுட்டிக் காட்டி அந்த ஒவ்வொரு வகைக்கும். ஒவ்வொரு விதமான ஓங்காரங்களையும், அந்த சப்தத்தையும் தன்னுடைய பல்வேறு முக பாவனையில், நடிப்பில் காண்பித்திருக்கும் நடிகர் ரிஷப் ஷெட்டி நிச்சயம் இந்தப் படத்துக்காக அத்தனை விருதுகளையும் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் படம் என்ன காமெடி படமா என்று நாம் சந்தேகிக்கும் அளவுக்கு இடையிடையில் காமெடி வசனங்களை வீசிக் கொண்டே போயிருக்கிறார்கள்.
ஆனால் குலசேகரன் காத்தாராவுக்குள் நுழையும்வரையிலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் வரக் கூடிய பல காட்சிகளுக்கு முன்னோட்டமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இடைவேளைக்கு முன்பே கொஞ்சம், கொஞ்சமாக காண்பித்து நம்மை அந்த காந்தாராவின் உலகத்திற்குள் இழுத்து இருக்கிறார் கதாசிரியர் ரிஷப் செட்டி. இந்த விஷயத்தில் அவருக்கு துணையாக இருந்திருக்கும் கதாசிரியர்கள் அனிருத் மகேஷ், சனில் கவுதம் ஆகியோரையும் நம் மனதார பாராட்ட வேண்டும்.
பிரகதி ஷெட்டியின் உடை வடிவமைப்பும் இந்தப் படத்தில் ஓஹோ என்று பேசக் கூடியதுதான். ஆண்களுக்கும் பெண்களுக்குமான உடை அலங்காரத்தையும் காட்சிப்படுத்தலின்போது இருக்கும் ஒளிப்பதிவுக்கேற்ற அவருடைய கலர் முதற்கொண்டு அனைத்து ஆடைகளையும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். கூடுதலாக படத்தின் நாயகியான ருக்மணி வசந்துக்கு செய்து கொடுத்திருக்கும் உடை வடிவமைப்பை பாராட்ட வயதில்லை. வணங்குகிறோம் பிரகதி ஷெட்டியை…!
முதல் பாதையில் கதை எங்கெங்கோ செல்வது போல நமக்கு தோன்றினாலும் இரண்டாம் பாகத்தில் ஜெயராமுக்கும், கனகவதிக்கும் காந்தாரா மக்கள் மீது ஏற்பட்ட கோபத்திற்கான காரணத்தை கொஞ்சம் நீளமான திரைக்கதை படுத்தியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
அந்தக் காரணீக தெய்வங்களை பாக்ரா நாட்டில் பிரதிஷ்டை செய்துவிட்டு வந்த பின்பு ரிஷப் செட்டிக்கும் ஏற்படுகின்ற அந்த கனவு.. அதன் விளைவு.. ஏன் மீண்டும் வாங்க நினைக்கிறார். ஏன் இவர்கள் படையெடுக்கிறார்கள் என்பதற்கான அழுத்தமான காரணத்தை கொஞ்சம் வசனத்தின் மூலமாகவோ அல்லது காட்சிகள் மூலமாகவோ காட்டி இருக்கலாம். ஆனால், அந்த இடத்தில் ஏன் எதற்காக மீண்டும் போரிடுகிறார்கள் என்பதற்கான காரணம் நமக்கு சரி வர தெரியப்படுத்தப்படவில்லை என்பதுதான் இந்தப் படத்தில் இருக்கும் ஒரே ஒரு குறை.
ஆனாலும் கோவிலுக்கு சென்று கடவுளை வழங்கிவிட்டு கோவில் பிரசாதத்தை பெறுவதற்குள் பிரசாதம் தீர்ந்துவிட்டால் நமக்கு என்ன மனநிலை இருக்குமோ அப்படி ஒரு சின்ன ஏமாற்றமான மன நிலையை இத்திரைப்படம் இந்தக் காரணத்திற்காகவே கொடுத்திருக்கிறது.
மற்றபடி இந்த காந்தாரா சேப்டர் ஒன் என்ற திரைப்படம் கன்னட சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் அனைத்து விருதுகளையும் பெரும் தகுதியுடன் வந்திருக்கிறது. ஒரு மாயாஜாலமான ஒரு கதைக்குள் நம்மை அழைத்துச் சென்று போதும் போதும் என்கின்ற அளவுக்கு நமக்கு பேன்டசியை கொடுத்து திருப்தி பண்ணி அனுப்பி இருக்கிறார்கள்.
இதை நீங்கள் உணர வேண்டும் எனில் நிச்சயம் இந்த இரண்டரை மணி நேர திரைப்படத்தை திரையரங்கில் நீங்கள் பார்த்து அனுபவித்து உணர்ந்து கொள்ளலாம்.
RATING : 4.5 / 5









