full screen background image

“பத்திரிகையாளர்களுக்காக நாயகியுடன் நெருக்கமாக நடித்தேன்…” – விஜய் ஆண்டனியின் கிண்டல்..!

“பத்திரிகையாளர்களுக்காக நாயகியுடன் நெருக்கமாக நடித்தேன்…” – விஜய் ஆண்டனியின் கிண்டல்..!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘காளி’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகிய நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.

மேலும், வேல ராமமூர்த்தி, யோகிபாபு, ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், மதுசூதனன் ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கிருத்திகா உதயநிதி, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், இசை – விஜய் ஆண்டனி, கலை இயக்கம் – எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டை இயக்கம் – ஆர்.சக்தி சரவணன், நடன இயக்கம் – பிருந்தா, உடை வடிவமைப்பு – கவிதா, ரோஹித், உடை – கே.சாரங்கன், தயாரிப்பு நிர்வாகி – ஆர்.ஜனார்த்தனன், நிர்வாகத் தயாரிப்பு – எம்.சிவக்குமார், தயாரிப்பு மேலாளர் – கே.மனோஜ்குமார், பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், அருண் பாரதி, தமிழணங்கு, பாடகர்கள் – நிவாஷ் ரகுநந்தன், ஜானகி ஐயர், ஹேமச்சந்திரா, சங்கீதா, தீபக், ஜெகதீஷ், ஒலி பொறியாளர்கள் – எஸ்.சந்திரசேகர், ஆர்.ஜனார்த்தனன், கே.சக்திவேல், ஒலிக் கலவை – ரஹமத்துல்லா, கிராபிக்ஸ் – கலரிஸ்ட் – ராஜராஜன், ஒலி  வடிவமைப்பு – விஜய் ரத்தினம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா-டி ஒன், விஷூவல் எபெக்ட்ஸ் – R Art Works – ரமேஷ் ஆச்சார்யா, ரியா, கார்வன்ஸ் ஸ்டூடியோ, புகைப்படம் – முத்துவேல், பப்ளிசிட்டி டிஸைனர் – கபிலன் செல்லையா, கிப்சன், டிஜிட்டல் பார்ட்னர் – விவோ.

பெண் இயக்குநரான கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

kaali-movie-press-meet-stills-10

இந்த சந்திப்பின் துவக்கத்தில் ‘காளி’ படத்தின் டிரெயிலரும், அதைத் தொடர்ந்து படத்தின் முதல் 20 நிமிடக் காட்சிகளும் பத்திரிகையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை படக் குழுவினர் பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ் பேசுகையில், “இதற்கு முன்பாக விஜய் ஆண்டனியுடன் நான்கு படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அவர் ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர். அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய ப்ளஸ்…” என்றார்.

richard m.nathan

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் பேசுகையில், “ஆண்கள் மட்டுமே ஆளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கும் படம்தான் இந்த ‘காளி’. எடுத்தவரையிலும் சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்றார்.

shilpa manjunath

நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், “தமிழில் இது என்னுடைய முதல் படம். முதல் மேடை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி என்னை அழைத்தபோது வயதான, அனுபவமிக்க இயக்குநராக இருபபார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குநராக அவரைப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியமாகவே இருந்தது. படத்தை சிறப்பாகவே எடுத்திருக்கிறார் கிருத்திகா..” என்றார்.

r.k.suresh

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “நான் ஒரு வினியோகஸ்தராக,  தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்தவரையில் சமீப காலங்களில் ‘தர்மதுரை’ படமும், விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படமும்தான் லாபத்தில் ஓவர் ஃப்ளோ கொடுத்த படங்கள்.

நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில், நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப் பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.

‘காளி’ என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு. படப்பிடிப்புத் தளத்தில்  இயக்குநர் கிருத்திகாவின் திறமையைப் பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா. நன்றாக நடிக்கக் கூடியவர்களையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார் கிருத்திகா. இதுவே அவரது தனித்திறமையைக் காட்டுகிறது…” என்றார்.

sunaina

நடிகை சுனைனா பேசுகையில், “ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய ‘வம்சம்’ பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன். அதை ஒப்பிடும்போது இது பரவாயில்லை.

நான் இதுவரையிலும் 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாகத்தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக் கருத்தே அன்புதான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை.

விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்…” என்றார்.

kiruthiga udhayanidhi

படத்தின் இயக்குநரான கிருத்திகா உதயநிதி பேசுகையில், “பெண்கள் தினத்தில்தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி ஸார்தான்.

அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார். எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குநர் சக்தி படத்துக்கு மிகப் பெரிய பலம். உயிரை பணயம் வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி.

வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். நான்கு கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள்.

திரைக்கதை எழுதும்போதே கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள்…” என்றார்.

vijay antony

படத்தின் நாயகனாந விஜய் ஆண்டனி பேசுகையில், கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர்.  எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதைதான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை. அந்த கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர்தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குநர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராகத்தான்  இருக்கிறார்கள்.

நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக் காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் ஹீரோயின்களுடன் மிக நெருக்கமாக நடித்துள்ளேன். நான் ரொமான்ஸ் காட்சிகளில் நெருங்குவதேயில்லை என்று பத்திரிகையாளர்களே பல முறை வருத்தப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் ரொம்பவே ஈடுபாட்டோடு நடித்திருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞரான அண்ணாமலையின் மறைவிற்குப் பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார். ‘திமிர் பிடிச்சவன்’ படத்தை அடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள்…” என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.

இந்த சந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழணங்கு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Our Score