full screen background image

இரவுக்கு ஆயிரம் கண்கள் – சினிமா விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் – சினிமா விமர்சனம்

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளரான ஜி.டில்லிபாபு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார், லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆடுகளம்’ நரேன், ஆனந்த்ராஜ், ஜான் விஜய், சாயாசிங், வித்யா பிரதீப், சுஜா வருணி, ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அரவிந்த்சிங், படத் தொகுப்பு – சான் லோகேஷ், இசை, பாடல்கள் – சாம் சி.எஸ்., கலை இயக்கம் – ராகுல், சண்டை இயக்கம் – கணேஷ்குமார், பாடகர்கள் – சாம் சி.எஸ்., சத்ய பிரகாஷ், சின்மயி, ஹரிச்சரண், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.அரவிந்த், கே.பூர்ணேஷ், தினேஷ் கண்ணன், எழுத்து, இயக்கம் – மு.மாறன்.

ஒரு கொலை நடக்கிறது.. அது எதனால்.. எப்படி.. யார் செய்தது என்பதை துப்பறியும் நாவல்களை எழுதிய ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற எழுத்தாளர்களின் கதையம்சத்தோடு ஒத்துப் போகும்வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நாள் இரவில் நடைபெறும் கொலையும், அந்தக் கொலையைச் செய்யும் வாய்ப்புள்ள ஐந்து நபர்களையும் சுற்றியே திரைக்கதை நகரும்படி அமைக்கப்பட்ட சுவாரஸ்யமான திரைக்கதையில் படம் செய்யப்பட்டிருக்கிறது.

பரத் என்னும் அருள்நிதி சொந்தமாக கால் டாக்சியை வைத்து அவரே டிரைவராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருடைய காதலி சுசிலா என்னும் மகிமா நம்பியார்.

இன்னொரு பக்கம் பணக்கார வயதில் மூப்பானவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை பெண் சபலத்தால் வீழ்த்தி அவர்களிடமிருந்து பணம், நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்தவர் அஜ்மல். இவருடன் இந்தத் தொழிலில் கூட்டாளியாக இருப்பவர்கள் அனிதா என்னும் வித்யா பிரதீப்பும், மாயா என்னும் சுஜா வாருணியும்.

மகிமா தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றுகிறார். பெரும் தொழிலதிபரான வசந்த் என்னும் ஜான் விஜய்யின் வீட்டுக்கு வந்து அவரது அப்பாவுக்கு தினமும் இன்சுலின் ஊசி போட்டுச் செல்கிறார் மகிமா. அங்கே ஜான் விஜய் தினமும் தன் மனைவியான ரூபலா என்னும் சாயாசிங்கை வார்த்தைகளால் படுகொலை செய்து வருகிறார். தங்களுக்கு இன்னமும் குழந்தை பிறக்கவில்லையே என்கிற குறைபாடுடன் கொடுமைக்கார கணவனையும் சகித்துக் கொண்டிருக்கிறார் சாயா சிங். இதையறியும் மகிமா சாயா சிங்கிற்கு உதவ முன் வருகிறார்.

இந்த நேரத்தில் மகிமாவுக்கு ஒரு ஆபத்து நேரத்தில் உதவி செய்ய வந்த அஜ்மல், மகிமாவை பாலோ செய்து அவருக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். அந்தத் தொந்தரவு ஒரு முறை எல்லை மீறி மகிமாவை மயக்கமடையச் செய்து அவரை ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுக்கும் அளவுக்கு போய்விட்டது.

அதே சமயம் இன்னொரு பக்கம் வித்யா பிரதீப்பின் நண்பியான சாயாசிங்கை தனது வலையில் வீழ்த்தி அவரையும் வீடியோ படம் எடுத்து வைத்திருக்கிறார் அஜ்மல். இதையறிந்து சாயா சிங் தற்கொலைக்கு முயல.. காதலி மகிமாவுக்காக இந்தப் பிரச்சினையில் தலையிட முயல்கிறார் அருள்நிதி.

அஜ்மலின் வீட்டிற்கு நள்ளிரவில் செல்கிறார் அருள்நிதி. அங்கே ஏற்கெனவே சுஜா வாருணி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அருள்நிதிக்கு முன்பாக அதே வீட்டுக்கு தொழிலதிபர் ஆனந்த்ராஜும் வந்து போவது தெரிய வருகிறது. ஆனந்த்ராஜை விரட்டிக் கொண்டு போகும்போது போலீஸிடம் சிக்குகிறார் அருள்நிதி.

ஆனாலும் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட ஆரம்பிக்கிறார். தான் போலீஸில் மாட்டினால் கொலையை தன் மீது சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்து தானே உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முனைகிறார் அருள்நிதி.

அதைச் செய்து முடித்தாரா.. உண்மையில் சுஜா வாருணியை கொலை செய்தது யார்.. எதற்காக கொலை செய்தார்கள் என்கிற திரைக்கதையை இடைவேளைக்கு பின்பு மிக, மிக சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அருள்நிதியின் நடிப்பு இந்தப் படத்திலும் கூடியிருக்கிறது. அல்லது கூட்டப்பட்டிருக்கிறது. முன் பின் அறிமுகமில்லாதவர்போல மகிமாவுடனான முதல் காட்சியில் அவர் பேசத் துவங்குவதும், காட்சியின் முடிவில் அவர்கள் காதலர்கள் என்பதை ஒற்றை வசனத்தின் மூலம் அவர் தெரிவிப்பதும் இதற்கு சாட்சி.

கொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் இன்னசென்ட்.. என்ற கலவையாய் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் இருக்க.. அதன்படியே கடைசிவரையிலும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் காதல் காட்சிகளில் இன்றைய இளசுகளுக்குப் பிடித்தாற்போன்று ரொமான்ஸ் செய்யத் தெரிந்தால் அருள்நிதிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் திரளும் என்பதைச் சொல்லிக் கொள்கிறோம்.

மகிமா நம்பியார் குறையில்லாமல் நடித்திருக்கிறார். அழகுடன் நடிப்பையும் சேர்த்தே கொண்டிருக்கிறார். நடிப்புக்கான மிகப் பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லையென்றாலும் அஜ்மலுடனான உரசல் காட்சிகளில் உண்மையாகவே நமக்கும் ஒரு பீலிங் வருவதை போலவே நடித்திருக்கிறார்.

ஜான்விஜய்-சாயா சிங் ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். கணவன் வில்லனாய்.. மனைவி வில்லியாய்.. இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் போடும் திட்டமும், ஆட்டமும் பலே என்று சொல்ல வைத்திருக்கிறது.

இதில் முதல் தொழிலதிபராய் வந்து தனது சொத்துக்களை இழக்கும் ஆனந்த்ராஜ் சில நிமிடங்களே என்றாலும் ஜொள்ளிட வைத்திருக்கிறார். ஆனாலும் கதையின்படி கொஞ்சமும் நம்ப முடியாத கேரக்டர் ஸ்கெட்ச் இருப்பதால் சகிக்க வேண்டியிருக்கிறது. ஆடுகளம் நரேனும் இடையில் புகுந்து ஒரு வில்லனாய் தோற்றமளிக்க டென்ஷனை கூட்டுவதற்கு இவர்களை கச்சிதமாகப் பயன்படு்த்தியிருக்கும் இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும்.

வில்லனாய் பரிமாணித்திருக்கும் அஜ்மலுக்கு இன்னொரு சிறப்பான வேடம். அவருக்கே உரித்தான வில்லச் சிரிப்புடன் அவர் பேசும் அனைத்துமே வில்லத்தனத்தைத்தான் காட்டுகிறது. சாயா சிங்குடன் மல்லுக்கட்டும் காட்சியில் அடடே என்று பேச வைத்திருக்கிறார் அஜ்மல்.

வித்யா பிரதீப், சுஜா வாருணி என்று இரண்டு பேர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்போல் வளைய வந்து போயிருக்கிறார்கள்.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவுக்கு ஒரு ஜே. இரவு மழைக் காட்சிகளையும், சுஜா கொலையுண்ட வீட்டில் நடக்கும் காட்சிகளையும், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளையும் அழகாகப் படமாக்கியிருக்கிறார். காட்சிகளின் கோணத்தைவிடவும் ஒளி வெள்ளமே சிறப்பாய் அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் சாம். சி.எஸ்ஸின் இசையில் ‘உயிர் உருவாத’, ‘ஏன் பெண்ணே நீயும்’ பாடல்கள் ஒலித்தன. ஆனால் படம் முடிவதற்குள் மனதில் இருந்து மறைந்துவிட்டன. காட்சிகளோடு பார்த்தால்தான் ஆயிற்று..!

ஒரு திரில்லர், சேஸிங் படங்களுக்கு தேவையான விதத்தில் படத் தொகுப்பினை செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ். கொலையுண்ட இடத்தில் நடக்கும் காட்சிகளையும் அதன் தொடர்ச்சியான காட்சிகளையும் முன் பின் காட்டினாலும் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் லாஜிக் இடிக்காத வண்ணம் காட்சிகளை பார்த்துப் பார்த்துத் தொகுத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

‘துருவங்கள் பதினாறு’ பாணியில் நான் லீனியர் வரிசையில் முன் பின் காட்சிகளை நகர்த்தி திரைக்கதை அமைத்திருக்கிறார். இதனால் கிளைமாக்ஸ் வரும்போது ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும் டிவிஸ்ட்டுகள் படத்தின் முடிவு மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்குள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதுவே இந்தப் படத்தின் மெளத் டாக்கின் பரவலுக்கு காரணமாகிவிட்டது.

கதையின் முடிவை லட்சுமி ராமகிருஷ்ணனின் நாவலோடு கொண்டு போய் முடிச்சுப் போடும் டிரிக்கிற்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு. அப்போது ஏற்படும் இன்னொரு டிவிஸ்ட் எதிர்பாராதது, என்றாலும் அது நியாயமானதாகவே தோன்றுகிறது.

ஒரு சேஸிங், திகில், சஸ்பென்ஸ் படத்திற்கே உரித்தான இலக்கணங்களோடு படம் உருவாகியிருந்தாலும் படத்தின் இயக்கம் இன்னமும் மேம்பட்டிருந்தால் ‘துருவங்கள் பதினாறு’, ‘அதே கண்கள்’, ‘மாநகரம்’, ‘குற்றம்-23’ வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கும். அது ஒன்றுதான் பெரிய மிஸ்ஸிங்.

ஆனாலும், அது ஒரு பெரிய குறையாகத் தோன்றாதவண்ணம்தான் படம் இருக்கிறது. பார்க்க வேண்டிய திரைப்படம்தான்..!

Our Score