full screen background image

‘காடுவெட்டி’ – சினிமா விமர்சனம்

‘காடுவெட்டி’ – சினிமா விமர்சனம்

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் த.சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N.மகேந்திரன், C.பரமசிவம், G.ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ்(குரு), சங்கீர்த்தனா(தாட்சாயினி), விஷ்மயா(ஆர்.கே.சுரேஷ் மனைவி), சுப்ரமணிய சிவா(ராஜமாணிக்கம்), அகிலன். ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் இசை – வணக்கம் தமிழா சாதிக், ஒளிப்பதிவு – M.புகழேந்தி, பாடல்கள் – மணிகண்டன் ப்ரியா, பா.இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல், கலை இயக்கம் – வீரசமர், படத் தொகுப்பு – ஜான் ஆப்ரகாம், சண்டை இயக்கம் – கனல் கண்ணன், நடன இயக்கம் – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – மாரியப்பன் கணபதி, பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு –  மஞ்சள் ஸ்கிரீன்ஸ், கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – சோலை ஆறுமுகம்.

காடு வெட்டி என்ற இந்தப் படத்தின் தலைப்புக்கே ஒரு பெரிய வரலாறு இருக்கிறதாம்.

மன்னர்கள் காலத்தில் போர்ப் பயிற்சிக்காக காட்டில் ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கிருக்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தை போர்ப் பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள்.

பின்பு போர்க் காலம் முடிந்த பிறகு அந்த போர்க்குடி மக்கள் அந்த இடத்தை விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதனை ஊர்களாக மாற்றுவார்கள். அப்போது அதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படி தமிழ்நாட்டில் 11 இடங்கள் உள்ளனவாம். ஆக, “இந்தக் காடுவெட்டி என்ற பெயருக்கே ஒரு வரலாற்றுக் கதையுண்டு..” என்கிறார் இயக்குநர்.

தமிழகத்தில் இருக்கும் முதன்மையான ஜாதிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியத் தளகர்த்தராகத் திகழ்ந்த காடுவெட்டு குருவின் சாயலில்தான் நான் இந்தப் படத்தில் நடித்துள்ளேன்…” என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகனான ஆர்.கே.சுரேஷ் பேசியிருந்தார்.

படத்தில் பார்க்கும்போது உண்மையான தலைவரான ராமதாஸை டம்மியாக்கி தான் சார்ந்த ஜாதியில் தான் மட்டுமே நல்லவன் என்று சொல்லி படத்தை முடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

ஆக தனது ஹீரோயிஸத்திற்காக மறைமுகமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவனை எந்த அளவுக்குக் கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு மறைமுகமாக அதனை செய்துள்ளார்.

காதல் என்ற சப்பை காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை, தலைமுறையாக, வன்முறையை சேர்க்கும். இந்தப் படம் தமிழ் சினிமாவில் வட மாவட்டத்து மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும்..” என்று இந்தப் படத்தின் இயக்குநரான சோலை ஆறுமுகம் அதே இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.

ஆனால் தனது சுய சாதியைச் சேர்ந்தவர்களை உயர்த்திக் காட்டியும், காலனி மக்களை தரம் தாழ்த்தியும், ஆணவக் கொலைகள் நடக்கக் காரணமாய் இருக்கும் காதல்களை, ‘நாடகக் காதல்என்று சொல்லி உண்மையில் நடந்த கதைகளைத் திரித்தும், மாற்றியுமாய் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

படைப்பாளிகளுக்கு பொய்யுரை தேவையில்லை. பொய்யுரை எழுதுபவர்களும் எழுத்தாளர்களல்ல. இயக்குநர்களுமல்ல.. படைப்பாளிகளுமல்ல.. இது இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்குமே பொருந்தும்.

படத்தின் துவக்கத்தில் அகிலனும், சங்கீர்த்தனாவும் சென்னையில் நல்ல படிப்பு படித்துவிட்டு, வசதியுள்ளவர்களாக வாழும்போது ஒருமித்தக் கருத்தோடு காதல் கொண்டு மிக எளிதாக தங்களது பெற்றோர்களிடம் கல்யாணத்துக்கு ஒப்புதல் வாங்குகிறார்கள்.

இதே காதல் கிராமப்புறங்களில் நடந்தால் என்னாகும் என்பதை நீங்களே பாருங்கள்..” என்று சொல்லி கதையை காடுவெட்டிஎன்ற கிராமத்திற்கு கொண்டு செல்கிறார் இயக்குநர்.

அங்கேயிருக்கும் கூத்துக் கலைஞரான ராஜமாணிக்கத்தின் மூத்த மகள் சங்கீர்த்தனா. அதே ஊரில் காலனியில் வசிக்கும் அகிலன், சங்கீர்த்தனாவைப் பார்த்தவுடன் லவ்வாகிறார். சங்கீர்த்தனா செருப்பால் அடித்தும் அகிலன் திருந்தவில்லை. அவள் கண் முன்பாகவே தற்கொலைக்கு அகிலன் முயல.. வழக்கம்போல காதல் பிறக்கிறது.

இந்தக் காதல் ஊருக்கே தெரிய வருகிறது. காதலனுக்கு அடி, உதை கிடைக்கிறது. காதலி வீட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறாள். உடனேயே ஊர்க் கூட்டம் போடப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் ராஜமாணிக்கத்திடம் “உன்னோட பொண்ணு காதலில் உறுதியாக இருப்பதால் அவளை கொலை செய்துவிடு..” என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

இன்னொரு பக்கம் அதே ஊரை சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த ‘குரு’ என்ற ‘நடுக்காட்டான்’ என்ற ஆர்.கே.சுரேஷ் அடிதடிக்குத் தயங்காதவர். அதிலும் பெண்களை தொட்டாலே வெட்டுவேன்…” என்று அனைவரையும் மிரட்டுபவர்.

தன் சாதிக்கார பள்ளி மாணவியிடம் கல்யாணம் பண்ணிக்கலாமா…” என்று டார்ச்சர் செய்யும் காலனி இளைஞர்களை அரிவாளால் வெட்டிச் சாய்க்கும்படி அறிவுரை சொல்லும் அளவுக்கு நல்லவர்.

அதேபோல் தனது சாதியைச் சேர்ந்த பெண் காலனியில் வாழ்க்கைப்பட்டு குடிகார காதலனால் அவதிப்படுவதைப் பார்த்து இரக்கப்பட்டு அந்தப் பெண்ணை காலனிக்குள்ளேயே புகுந்து தடுப்பவர்களை பறந்து, பறந்து அடித்து, வீழ்த்திவிட்டு பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

தனது வீட்டில் வைத்து அந்தப் பெண்ணை சில மாதங்கள் வைத்துப் பார்த்துக் கொள்ளும் குரு. அதன் பிறகு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வசதியான தனது சாதியைச் சேர்ந்த பையனுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார். இந்த அளவுக்கு தனது சாதியின் மேல் அதீத பற்றுள்ளவர்.

இந்த நிலையில் அகிலனும், சங்கீர்த்தனாவும் ஊரைவிட்டு ஓடிப் போய் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இரண்டு குடும்பங்களும் இப்போது ஒற்றுமையாக இருந்து வரும் நிலைமையில் சங்கீர்த்தனாவுக்கு ஆண் குழந்தையும் பிறக்கிறது.

இப்போது பார்த்து அகிலனின் ஜாதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலரின் தூண்டுதலால் பெங்களூருக்கே போய் தம்பதிகள் இருவரையும் ஒரு கும்பல் படுகொலை செய்கிறது. இந்தச் செய்தி குருவுக்குத் தெரிய வர.. அசுரனாகிறார் அவர். குரு அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்..!

படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் தற்போது பா.ஜ.க.வில் ஒரு முக்கிய பிரமுகராக இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நிற்கும் ஐடியாவில் இருப்பதால் தன்னை வளர்த்துக் கொள்ள தான் ரொம்ப நல்லவன் என்பதைக் காட்டும்விதமாகவும், தான் சார்ந்த சாதி சொந்தங்களிடம் பெயரெடுக்கும்விதமாகவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க இந்தப் படத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அவருடைய தோற்றம் வில்லனாக நடிக்கவே பொருத்தமாக இருப்பதோடு, அடிதடிகளுக்கு அஞ்சாத சிங்கமாகவும் காட்டிக் கொள்ளலாம் என்று இந்தப் படத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஹீரோவாக நடிப்பதற்கும், வில்லனாக நடிப்பதற்கும் எந்தவொரு மீட்டரும் இடைவெளியில்லாமல் இருப்பதால் வந்தார்.. அடித்தார்.. சென்றார்.. என்ற பாணியிலேயே தனது காட்சிகளில் தோன்றியிருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கிறார் என்று ஒருவரை சொல்ல வேண்டுமெனில் அது தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவாவை சொல்லலாம். தன் சாதி மக்களாலேயே ஊர்க்கூட்டத்தில் நிற்க வைத்து அவமானப்படுத்தப்படும் காட்சியில் ஒரு வசனம்கூட இல்லாமல் தனது முகத்திலேயே அத்தனை அவமானத்தையும் காட்டியிருக்கிறார்.

அதேபோல் வீடு திரும்பியவுடன் தான் ஆசையாய் வளர்த்த மகளைக் கொல்வதற்கு விருப்பமில்லாமல் தவிக்கும் காட்சியில் சாதியையும் தாண்டி மனிதப் பண்பைக் காட்டியிருக்கிறார். வெல்டன் அண்ணா..!

காதலியாக நடித்திருக்கும் சங்கீர்த்தனா காதலைக் கைவிட மாட்டேன் என்று அழுத்தமாக சொல்லும் காட்சியில் சபாஷ் போடும்படியான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். புதுமுகமான காதலன் அகிலன் சிறப்பு என்று சொல்ல முடியவில்லையென்றாலும் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்திருக்கிறார்.

ஆடுகளம் முருகதாஸ் தன் சாதிக்கார அண்ணனின் சதித்திட்டத்தைக் கேட்டவுடன் பணத்தை வீசியெறிந்து பொங்கும் காட்சியில் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

ஆதிரா பாண்டிலட்சுமி நாயகியை முதல்முறையாகப் பார்க்கும் இடத்திலும், அடுத்தடுத்த காட்சிகளிலும் சராசரி அம்மாவாக நடிப்பில் குறை வைக்கவில்லை. மற்றும் படத்தில் நடித்திருக்கும் மற்றைய நட்சத்திரங்களும் தங்களால் ஆன நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.

எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவில் குறையில்லை. படம் நெடுகிலும் கிராமத்து சம்பவங்களையும், இரவு நேரக் காட்சிகளையும் அதிகம் செலவு வைக்காமல் படமாக்கியிருக்கிறார். கொலை காட்சிகளை பயமுறுத்தாத வேறு கோணத்தில் படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

வணக்கம் தமிழா சாதிக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். எளிய தமிழில் மீண்டும் கேட்க விரும்பும் மெட்டில் பாடல்கள் அமைந்திருப்பது சிறப்புதான். சண்டை காட்சிகளில் ஆர்.கே.சுரேஷின் விஸ்வரூபத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் மெனக்கெட்டு படமாக்கியிருக்கிறார்கள்.

இயக்கத்தின் போதாமையால் பல காட்சிகளில் கோணங்கள் தவறானவையாக அமைந்து இயக்குநர் ஏதோ புதிதாக ஸ்டார்ட் காமிரா ஆக்சன் சொல்ல வந்தது போல இருக்கிறது.

மேலும் படத்தின் பல வசனங்கள், அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும், உண்மையாக நாட்டில் நடக்கும் பல சாதி எதிர்ப்பு காதல்களுக்கும், ஆணவக் கொலை சம்பவங்களுக்கும் பொய்யுரை வழங்குவதுபோல் அமைந்துள்ளது.

சென்சார் போர்டு பல இடங்களில் வசனங்களை மியூட் செய்தும், சில இடங்களில் வசனங்களை கட் செய்தும் கொடுத்துள்ளது. அப்படியும் இதில் இருக்கும் பல வசனங்கள் கோயபல்ஸ் டைப்பில்தான் பேசப்பட்டிருக்கிறது. நமக்குத்தான் கேட்பதற்கு நாராசாரமாய் இருக்கிறது.

படத்தில் வரும் பஞ்சாயத்து காட்சியில் நகைச்சுவை என்ற பெயரில்… அடுத்தவரின் மனைவியைக் கவர்ச்சி கோணத்தில் காட்டி, அந்தப் பெண்ணைப் பற்றி பஞ்சாயத்து செய்யும் ஆளும், பஞ்சாயத்தில் அமர்ந்திருக்கும் நபர்களும் பேசும் வசனங்களையெல்லாம், இந்தச் சாதிக்காரப் பெண்கள் பார்த்தாலோ, கேட்டாலோ  என்ன நினைப்பார்களோ..?

ஆதிக்க சாதிப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட சாதி பையன் காதலிப்பதையே நாடகக் காதல் என்றும் இந்தக் காதலை செய்ய வைத்து, பின்பு அந்தப் பெண் வீட்டாரிடம் பணம் வசூல் செய்துவிட்டு பெண்ணைத் திருப்பி அனுப்பும் சதி வேலையை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தலைவரும், அவருடைய கட்சியினரும் தொடர்ந்து செய்கிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் நமக்கு சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இதுவரையிலும் நடந்த ஆணவக் கொலைகளில் அனைத்துமே உண்மையான காதல்தான் இருந்தது. அந்தக் காதலில் உண்மை இல்லாமல் இருந்திருந்தால், ஏன் ஆணவக் கொலைகள் நடக்கப் போகிறது..? நடந்திருக்கிறது..?

இயக்குநர் தனது சாதியை உயர்த்திக் காட்ட, நடந்த சம்பவங்களை முற்றிலும் பொய்யாக்கும்விதமாக இந்தப் படத்தில் உண்மையைத் திரித்து சொல்லியிருக்கிறார்.  இது இயக்குநருக்குள் இருக்கும் சாதிய வன்மத்தை காட்டுகிறது.

அதோடு தன் சுய சாதிப் பெருமைகளை சொல்வதுபோல சொல்லி, மாற்று சாதியினரை சோத்துக்காக அடித்துக் கொள்வார்கள் என்ற ரீதியில் இழிவுபடுத்தி திரைக்கதை அமைத்திருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதோடு தங்களின் ஊர்க் கூட்டத்தில் “உன் பொண்ணுக்கு விஷம் வைச்சு சாகடிச்சிரு” என்று ஊர்த் தலைவர் எந்த விகல்பமும் இல்லாமல் சொல்ல.. அதைக் கேட்டுவிட்டு ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் எழுந்து போவதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்த்தால், “அந்த ஒட்டு மொத்த சாதிக்காரர்களும் முட்டாள்களா.. கொலைகார மக்களா..?” என்று மற்றவர்கள் சொல்ல மாட்டார்களா..? கேட்க மாட்டார்களா..?

“சாதிக்காக கொலையும் செய்வோம்” என்று ஒருவன் சொன்னால் அவன் நிச்சயமாக கொலைகாரன். கிரிமினல். அவன் சார்ந்த சாதியும் கொலைகார சாதிதான். இயக்குநர் தன் சாதிக்குப் பெருமை சேர்ப்பதாக நினைத்து மொத்த சாதிக்கும் சேர்த்து சாணியைத்தான் கரைத்து ஊற்றியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்தக் காடுவெட்டி’ திரைப்படம் சுய சாதிப் பெருமையைப் பேசுவதாகச் சொல்லி, ந்த சமூகத்து மக்களை ஒட்டு மொத்தமாக சிறுமைப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை.

RATING : 0 / 5

 

Our Score