ஃபோர்ட்டூன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் சபீர் சுலைமான் ராவுத்தர் தயாரித்துள்ள புதிய படம் ‘காதலே வேண்டாம் சாமி.’
இப்படத்தின் கதாநாயகனாக அபிஷ் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மவுமிதா சௌத்ரி, வில்லனாக ரபிக் மற்றும் குணச்சித்திர வேடங்களில் செல்லா, நிறைமதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதி இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநரான யாசர்.
ஒளிப்பதிவு – சிவா.R, இசை – மேக்ஸ்வெல் புஜி, பாடல்கள் – பாரதி கண்ணதாசன், படத் தொகுப்பு – தேவா, நடனம் – பம்மல் சந்துரு, சண்டை பயிற்சி – ஹமீது, மக்கள் தொடர்பு -செல்வரகு, தயாரிப்பாளர் – சபீர் சுலைமான் ராவுத்தர், எழுத்து – இயக்கம் – யாசர்.
சமூக வலைத்தளங்களில் ஏற்படும் அவலநிலையை தட்டி கேட்கும் ஒரு சட்டக் கல்லூரி மாணவனை மையமாக வைத்து உருவாகும் கதை இது.
சட்டக் கல்லூரியில் படிக்கும் சக மாணவன் ஒருவன் அதே கல்லூரியில் படிக்கும் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறான். தட்டிக் கேட்கும் கதாநாயகன் அவனுக்கு கல்லூரி மைதானத்தில் பெரிய தண்டனை தருகிறான். வில்லன் அரசியல் பலம், பண பலத்தை பயன்படுத்தி கதாநாயகனை பெரிய சிக்கலில் மாட்டிவிடுகிறான். கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தானா என்பதுதான் கதை.
சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் குற்றங்களை அப்பட்டமாக படமாக்கியுள்ளனர். சமூகத்தில் தற்போது நடக்கும் அவலங்களை பிரதிபலிக்கும்விதமாக திருநங்கைகள் பாடும் ஒரு பாடல் காட்சியாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், பூம்பாறை, அரியலூர், சிதம்பரம் மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது. படத்தில் நான்கு பாடல்களும், மூன்று சண்டை காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.









