தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்தாலே போதும்..! – நடிகர் நாசர் பேச்சு

தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்தாலே போதும்..! – நடிகர் நாசர் பேச்சு

அறிமுக இயக்குநர் என்.மனோன் இயக்கியிருக்கும் புதிய படம் 'கா கா கா'..!

IMG_6581-002

இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். படத்தின் தலைப்பிலேயே 'கா..கா..கா.. ஆபத்தின் அறிகுறி' என்று போட்டுள்ளார்கள். 

காகம் கரையுது என்றாலே வீட்டுக்கு விருந்தினர்கள் வரப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறி என்பார்கள். ஆனால் ஒரு சமூகத்தின் இணைப்புக்கு காகத்தைத்தான் உதாராணமாகக் காட்டுவார்கள்.

சோற்றுப் பருக்கையை வைத்தால்கூட தன் இனத்தையே கூவி அழைத்து சாப்பிடும் பழக்கம் கொண்டது. அந்த காக்கையை மையமாக வைத்து ஒரு பேய்ப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இந்த இயக்குநர் மனோன். இந்தப் படத்தில் காகம் ஆபத்தை உணர்த்தும் ஒரு கேரக்டராகவே நடித்திருக்கிறதாம்.

இயக்குநர் என்.மனோன் ஒரு பெங்களூர் தமிழர்.  'இருவர் மட்டும்' ராகவன், பி.வாசு, வெற்றி மாறன் ஆகிய பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அசோக், மேகாஸ்ரீ, நாசர், ஜெயசுதா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.இப்படம் தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியிருக்கிறது. அர்பிதா கிரியேஷன்ஸ் சார்பில் கிரண் பதிகொண்டா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று காலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ட்ரெய்லரை வெளியிட  இயக்குநர்  வெற்றி மாறன் அதைப் பெற்று கொண்டார்.

DSC_3658_resize

விழாவில் நாசர் பேசும்போது, “இப்போதெல்லாம் புதுமுக இயக்குநர்கள் ஒரு பெரும் கனவோடு வருகிறார்கள். அதனால், அவர்களை ஆதரிக்க நான் தயங்குவதேயில்லை.

இந்த மனோன் என்னிடம் இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டு கதை சொன்னபோது, 'நான் இந்தப் படத்துக்கு எந்த அளவுக்கு அவசியம்..? ஏன் நான் இதில் நடிக்க வேண்டும்..?' என்று கேள்வி கேட்டேன். அவர் அதற்கு சொன்ன பதில், எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

ஒவ்வொரு புதுமுக இயக்குநரிடமும் நான் புதிது, புதிதாக கற்றுக் கொள்கிறேன். இந்தப் புதுமுக இயக்குநரிடமும் நான் சிலவற்றை கற்றுக் கொண்டேன். எது வேண்டும், எது தேவை, எது தேவையில்லாது.. எது வேண்டாம் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். நல்ல திட்டமிடல் இருந்தது.

இன்று டிஜிட்டல் முறை வந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மனோன் அப்படிப்பட்ட ரகமல்ல. அவரிடம் நல்ல திட்டமிடல் இருந்தது. தொழில் சிரத்தை உள்ளவர். முழுப் படத்தையும் நன்கு திட்டமிட்டு எடுத்தார்.

இன்று தினசரிப் பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தால் 60 படங்களின் விளம்பரங்கள் வந்திருக்கின்றன. இதில் எதைப் பார்ப்பது என்று மக்களுக்கே குழம்புகிறது. இருத்தாலும் இந்தப் படம் அதிலும் தனித்து தெரியும்படி வெற்றி பெற வேண்டும்.

சினிமாவுக்கு தயாரிப்பாளர் முக்கியம். தயாரிப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் படம் நூறு நாள் ஓடவேண்டும் என்பதைவிட முதலில் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார்.

DSC_3634_resize

இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது “இயக்குநர் என்.மனோன் என்னுடன் பணியாற்றியவர். ஆர்வமாக உழைப்பவர். இப்படம் தொடங்கும்போது படம் இயக்கப் போவதை என்னிடம் சொன்னார். தயாரிப்பாளர் கஷ்டப்படாமல் திட்டமிட்டு எடுக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்தேன்.

படத்தின் ட்ரெய்லர் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஹாரர் படத்தில் ஒலி முக்கிய இடம் வகிக்கும். அதை இதில் சரியாகக் கையாண்டு இருக்கிறார்கள். ஒளிப்பதிவும், இசையும் நன்றாகவே இருக்கிறது...” என்றார்.

DSC_3639_resize

‘கா கா கா’ படத்தின் கதாநாயகனான அசோக் பேசும்போது, "இந்தப் படத்தில் கதையை புதுமையாக சொல்லி இருக்கிறோம். திறமையான தொழில் நுட்பக் குழுவினர் உருவாக்கிய படம் இது. ஒரு படம் பெரிய படமா, சிறிய படமா என்பதை யாரும் சொல்ல முடியாது. அதை ஆடியன்ஸ்தான் முடிவு செய்வார்கள். அவர்கள் தருகிற ஆதரவும், ஆசீர்வாதமும்தான் அதை முடிவு செய்யும்...” என்றார்.

DSC_3648_resize

இயக்குநர் என்.மனோன் பேசும்போது, "நான் புதியவன் என்று பார்க்காமல் அனைவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நாசர் சார் இவ்வளவு அனுபவசாலியாக இருந்தாலும் முதல் நாளே எடுக்க வேண்டிய காட்சிகளை கேட்டு வாங்கி தயாராகி வருவார்.

நீருக்கடியில் எடுத்த காட்சியில் ஹீரோ அசோக்கிற்கு உதட்டில் அடிபட்டு, உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அப்படியும் நடித்து முடித்துவிட்டுத்தான் மருத்துவமனைக்கு போனார். அவ்வளவு அர்ப்பணிப்பானவர் அவர். ஹீரோயின் மேகாஸ்ரீ நள்ளிரவு 2 மணிவரை நடித்துக் கொடுத்தார். இப்படி அனைவரும் உதவியதால்தான் படத்தை என்னால் விரைவில் முடிக்க முடிந்தது. தயாரிப்பாளர் கிரண் ஒரு உதவி இயக்குநர் போல உழைத்தார்...” என்றார்.

இவர்கள் மேடையில் பேசியதெல்லாம் ஒருவேளை உண்மையாக இருக்கும்பட்சம்… கா..கா… கா… படம் சற்றே வித்தியாசமான படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது எனலாம்.