full screen background image

‘சின்ன வீடு’ கல்பனாவுக்கு அல்வா கொடுத்த கே.பாக்யராஜ்..!

‘சின்ன வீடு’ கல்பனாவுக்கு அல்வா கொடுத்த கே.பாக்யராஜ்..!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட், சக்திவேல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.

இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும் படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப் பதிவு செய்தவர்.

‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இங்கே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மதுஸ்ரீ எடைக் குறைப்பு பற்றிப் பேசினார். இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது.

நான் ‘சின்ன வீடு’ படத்தில் நடித்தபோது அதில் நாயகியாக நடித்த கல்பனாவுக்கு தினமும் அல்வா வாங்கிக் கொடுத்தேன். அது, அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக.  சிரமப்பட்டு உழைத்தால்தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும். இதனால்தான் ‘வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும்’ என்பார்கள்.

நான் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் கம்பைச் சுற்றி  பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில் 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகுதான் அப்படி நடித்தேன். படத்தின் ஒரு காட்சியில் நான் ஒரு கையால் கம்பைச் சுற்றி விளையாடுவதுபோல் நடித்திருப்பேன்.

அப்போது, “இரண்டு கையாலும் கம்பைச் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும்” என்று படத்தின் சண்டை இயக்குநரான அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன். “அது முடியாது. கஷ்டம்” என்றார். “அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள்” என்று கேட்டேன். அவருக்கு என் மீது நம்பிக்கை இல்லை. ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டு கற்றுக் கொண்டு படத்தில் சுற்றி இருப்பேன்.

அந்தப் படத்தை பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். என்னிடம், “எத்தனை  வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய்?” என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை. “பொய் சொல்லாதே” என்றார். அப்போது நான் “மனம் வைத்தால் எதுவும் முடியும்…” என்றேன். இந்த ‘லாக்’ படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார் இயக்குநர் கே.பாக்யராஜ்.

Our Score