K-13 – சினிமா விமர்சனம்

K-13 – சினிமா விமர்சனம்

SP சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் S.P.ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

படத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்றும் காயத்ரி ஷங்கர், ஆதிக் ரவிச்சந்திரன், யோகி பாபு, மதுமிதா, ரிஷிகாந்த், ரமேஷ் திலக், விஜய் ராஜேந்தர், லிஸி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இணை தயாரிப்பு – கிஷோர் சம்பத் மற்றும் டி.டெஸாஸ்ரீ. சி.எஸ்.சாம் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை இயக்கம் – சுதேஷ். எழுத்து, இயக்கம் – பரத் நீலகண்டன்.

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் உதவி இயக்குநர் மதியழகன் என்னும் அருள்நிதி. ஒரு நல்ல கதையுடன் நாளைக்கு வந்து பார்க்கும்படி சொல்கிறார் ஒரு தயாரிப்பாளர். அந்தக் கதைக்கான தேடலில் அமர்ந்திருக்கும்போது அருள்நிதியின் நண்பர்கள் அவரை வற்புறுத்தி பப்புக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அங்கே குடித்துக் கொண்டிருக்கும் மலர்விழி என்னும் ஸ்ரத்தாவை பார்த்ததும் பேச வேண்டும் என்று தோன்றுகிறது அருள்நிதிக்கு. அருகில் சென்று பேசுகிறார். ஸ்ரத்தா அருள்நிதியை தன் வீட்டுக்கு அழைக்கிறாள். போதையின் உச்சத்தில் இருந்த அருள்நிதி ஸ்ரத்தாவுடன் அவருடைய வீட்டுக்கு வருகிறார்.

ஆனால் காலையில் கண் முழிக்கும் அருள்நிதி தான் ஒரு சேரில் கட்டிப் போடப்பட்ட நிலையில் இருப்பதை உணர்கிறார். ஸ்ரத்தா தன் கையில் நரம்பை வெட்டிக் கொண்டு இறந்து போயிருப்பதும் அவருக்குத் தெரிய வருகிறது.

அதிர்ச்சியடையும் அருள்நிதி அங்கேயிருந்து தப்பிக்க நினைக்கிறார். ஆனால் அபார்ட்மெண்ட்வாசிகள் நள்ளிரவில் யாரோ உள்ளே வந்து சிசிடிவி கேமிராக்களை உடைத்திருப்பதாக போலீஸில் புகார் செய்ய.. போலீஸ் உள்ளே வந்திருப்பதைப் பார்த்து திகைக்கிறார்.

அங்கேயிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசிக்கிறார்.. ஸ்ரத்தா எப்படி இறந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. தன்னை யார் கட்டிப் போட்டது என்பதும் அருள்நிதிக்குப் புரியவில்லை. அங்கிருந்து அவர் தப்பித்தாரா.. இல்லையா.. அடுத்தது என்ன என்பதுதான் இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் திரைக்கதை.

‘கே-13’ என்பது ஸ்ரத்தாவின் வீட்டு எண். இதையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்கள். படம் மொத்தமே 104 நிமிடங்கள்தான். இதில் 80 நிமிடங்கள் அந்த அபார்ட்மெண்ட்டில்தான் நடக்கிறது. இதிலும் 65 நிமிடங்கள் அந்த வீட்டுக்குள்ளேயே நடக்கிறது. முற்பாதியில் விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கும் இயக்குநர் பிற்பாதியில்தான் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறார்.

இறுதிக் காட்சியில் இருக்கும் ஒரு டிவிஸ்ட்டுக்காகவே இந்தப் படுகொலை என்றால் சாதாரணமாக நம்மால் இதனை ஏற்க முடியாது. ஆனால் ஒரு படைப்பாளிக்கு தனது படைப்புக்காக எந்த லெவலுக்கும் செல்வான் என்பதை வசனத்தில் வைத்து இதற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் இயக்குநர். ஏற்பதற்கில்லை.

ச்சும்மா படுத்தபடியே நடிப்பைக் காண்பிப்பதே கஷ்டம். இதில் செத்த பொணமாக இருக்க வேண்டுமெனில்.. ஸ்ரத்தாவின் அந்த அமைதியான பொண நடிப்பும், இதற்குப் பொருத்தமாக ஒன் மேன் ஷோவாக அருள்நிதி காட்டியிருக்கும் அத்தனை நவரச நடிப்பும் ரசிக்கத்தக்கது.

கோபம், குழப்பம், தவிப்பு, இயலாமை என்று தனக்குள் இருக்கும் அத்தனை உணர்வுகளையும் நிமிடத்திற்கு நிமிடம் கலந்து கொடுத்திருக்கிறார் அருள்நிதி. அவரை இந்த அளவுக்கு டிரில் செய்த இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ஸ்ரத்தாவும் ஒருவித ஸ்டிரெஸ்ஸில்தான் உள்ளார் என்பதை அவர் பக்க நியாயத்தைக் காட்டுவதற்காக ஒரு கதையைச் சொல்கிறார்கள். நச்சென்று ஒரே காட்சியில் நடந்த விவகாரத்தை அம்பலப்படுத்துகிறார் இயக்குநர்.

நெருங்கிய தோழி என்பதற்காக அவளிடம் பகிர்ந்து கொண்ட குடும்பக் கதையை எழுத கதையில்லை என்பதற்காக வெளிப்படையாக எழுதிவிட்ட ஸ்ரத்தாவுக்கு காயத்ரியின் கணவன் வந்து டோஸ் விடுகிறான். காயத்ரியை டைவர்ஸ் செய்வதாகவும் சொல்கிறான். தன்னால்தானே அத்தனையும் என்கிற மன வெறுப்பு பப்புக்கும் போக வைத்து கடைசியில் சாவுக்கும் வழி வகுக்கிறது.

இப்படியாக நாம் நினைத்துக் கொள்ளும்வகையில் திரைக்கதையை அமைத்து இதனை கடைசியில் நொறுக்கும்விதமாய் அந்த டிவிஸ்ட்டை காட்டும் இடத்தில் ‘அட’ என்று சபாஷ் போட வைத்திருக்கிறார் இயக்குநர்.

ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்றவாறு கலை இயக்கத்தோடு வீட்டை அழகுற பதிவாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இவரைவிடவும் இசையமைப்பாளர் சி.எஸ்.சாமின் பின்னணி இசைதான் படத்தின் மிகப் பெரிய பலம்.

வீட்டுக்குள் ஓடி ஒளியும்போதும், ஒவ்வொரு அறையாகத் திறந்து பார்க்கும்போதும், எதிர் வீட்டுக்குள் நுழைந்து சோதனையிடும்போதும், தப்பிக்க முயற்சிக்கும்போதும் அந்த திக் திக் உணர்வை திரையில் இருந்து நமக்குள்ளும் கடத்தியிருக்கிறது சாமின் பின்னணி இசை.

இதற்கு சமமான அளவுக்கு உழைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர். நான் லீனியர் முறையில் முன் பின் பாணியில் திரைக்கதை அமைத்திருப்பதால் எளிதில் புரியும்வண்ணம் காட்சிகளைத் தொகுத்தளித்திருக்கிறார்.

இது போன்ற உளவியல் ரீதியான சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்களில் படத்தின் இயக்கம்தான் படத்தினை ஜெயிக்க வைக்கும். இந்தப் படத்திலும் இயக்கம் சிற்பபு என்றாலும் ஏதோ ஒன்று குறைவதை போலவே கடைசிவரையிலும் உறுத்தலாய் இருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியை உலக சினிமாத்தனமாய் காட்டாமல் இன்னும் கொஞ்சம் ரியலிஸசமாகக் காட்டியிருந்தால், கடைசி பெஞ்ச் ரசிகர்களுக்கும் இத்திரைப்படம் புரிந்திருக்கும்.  

Our Score