“நான் அதிகச் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய்…” – யோகி பாபு பேச்சு..!

“நான் அதிகச் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய்…” – யோகி பாபு பேச்சு..!

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரித்திருக்கும் புதிய படம் ‘தர்ம பிரபு’.

இந்தப் படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ரேகா, சாம் சுஜித், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், ஜனனி ஐயர், மேக்னா நாயுடு, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், மனோபாலா, கும்கி அஸ்வின், மாஸ்டர் கணேஷ், சரவண சக்தி, பாஸ்கி, ‘மைனா’ நந்தினி, ‘அங்காடி தெரு’ சிந்து, அந்தோணி பாக்கியராஜ், சவரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி, படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், பாடல்கள் – யுகபாரதி, கலை இயக்கம் – சி.எஸ்.பாலச்சந்தர், உடைகள் – முருகன், ஒப்பனை – பாபு, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், டிசைன்ஸ் – ஜோஸப் ஜாக்சன், நிர்வாக தயாரிப்பு – ராஜா செந்தில், தயாரிப்பு – P.ரங்கநாதன், வசனம் – முத்துக்குமரன், யோகி பாபு, எழுத்து, இயக்கம் – முத்துக்குமரன்.

இந்தப் படத்தின் இயக்குநரான முத்துக்குமரன் ஏற்கனவே விமல் நடித்து திரைக்கு வரவிருக்கும் ‘கன்னிராசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பாக இந்தப் படத்தை 2-வது படமாக இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், இயக்குநர் முத்துக்குமரன், நாயகன் யோகி பாபு, நடிகை ரேகா, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கவிஞர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் சக்திவேலன், ஞானவேல்ராஜா, இயக்குநர்கள் கல்யாண், செல்வக்குமார் மற்றும் படத்தில் பங்கு கொண்ட அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும், உதவி இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.

yugabharathy

இந்த விழாவில் கவிஞர் யுகபாரதி பேசும்போது, “என் நண்பரான ரங்கநாதன் இந்தப் படத்தின் மூலமாகத் தயாரிப்பாளராகியிருப்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. தற்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் நகைச்சுவைக்கு இவரைத் தவிர ஆள் இல்லை என்கிற பாராட்டைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. நான் தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் நண்பன் இயக்குநர் முத்துக்குமாருடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி…” என்றார்.

IMG_0413

நடிகை ரேகா பேசும்போது, “இயக்குநர் முத்துக்குமரன், ‘இந்தப் படத்தில் ஒரு அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது.. பணியாற்றுகிறீர்களா?’ என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக் கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கும் மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன்.

ZF1A8428

அதேபோல் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இப்படத்தின் டிரெய்லரை பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். இந்தப் படத்தில் அம்மா வேடம் என்பதால் அப்படியே பாட்டியாக்கி ஓரம்கட்டிவிட நினைக்காதீர்கள். நான் அடுத்து யோகி பாபுவிற்கு ஜோடியாகவும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்..” என்றார்.

director thirumalai

இயக்குநர் திருமலை பேசும்போது, “இந்த ‘தர்ம பிரபு’ படம் பற்றி திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கேட்கும் கேள்வி ‘இது குழந்தைகளுக்கு ஏற்ற படமாக இருக்குமா?’ என்பதுதான். சமூகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நகைச்சவையாக கொடுத்திருக்கிறார். அதற்காக யோகிபாபுவைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள். ஆங்காங்கே அரசியல் கலந்திருந்தாலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை…” என்றார்.

படத் தொகுப்பாளர் சான் லோகேஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநரான இயக்குநர் முத்துக்குமரன் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு விடாமுயற்சி எடுத்துக் கொண்டே இருப்பார். கடைசியில் அவருடைய படத்திலேயே எனக்கு வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். டிரெய்லரில் பல விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறோம். படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். நிச்சயம் இப்படம் வெற்றி பெறும்…” என்றார்.

ZF1A8534

பாடகர் வேல்முருகன் பேசும்போது, “நான் ‘கள்வனின் காதலி’ படத்தில்தான் பாடகராக அறிமுகமானேன். அன்றிலிருந்தே தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் எனக்கு நண்பர். அப்போதிருந்தே அவருடைய கடின உழைப்பைப் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். அரசியல் வசனங்கள், மற்றும் பாடல்களுடன் டிரெய்லர் நன்றாக வந்திருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

dance master viji

நடன இயக்குநர் விஜி பேசும்போது, “இந்தப் படத்தில் யோகிபாபு இரவு பகலாக பணியாற்றி கடுமையாக உழைத்திருக்கிறார். அதேபோல், இயக்குநர் முத்துக்குமாரும் கடின உழைப்பாளி. படப்பிடிப்பு தளத்திலும் இந்த மேடையில் இருப்பதை போலவே கலகலப்பாகத்தான் இருப்பார்கள். சிறிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக செட் அமைத்திருக்கிறார் கலை இயக்குநர். பழைய பாணி இருக்கக்கூடாது என்பதற்காக கவனத்துடன் செட் அமைத்திருக்கிறார்…” என்றார்.

justin prabhakaran

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, “இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எமலோகத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பாடலை எம்.எஸ்.வி.-யின் மகன்தான் பாடியிருக்கிறார். யோகிபாபுவின் நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்…” என்றார்.

muthukumaran

படத்தின் இயக்குநரான முத்துக்குமரன் பேசும்போது, “யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன்தான். அதை மையமாக வைத்து நகைச்சுவையாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ராதாரவி யோகிபாபுவிற்கு தந்தையாக நடித்திருக்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் இந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கமாட்டார்கள்.

தயாரிப்பாளரிடம் இக்கதையைக் கூறி, தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றேன். கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்றார். கலை இயக்குநர் நான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக செட் அமைத்துக் கொடுத்தார். அதுதான் படத்திற்கு முக்கியம். அதேபோல், ஆடை வடிவமைப்பு செய்த முருகனும் சிறப்பாக தனது பணியை செய்து கொடுத்தார். ‘கன்னிராசி’ படத்தை 45 நாட்களில் இயக்கி முடித்தேன். ‘கன்னிராசி’ படத்திற்கு இசையமைக்க ஜஸ்டினை அழைக்க நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அப்போது அவரை அழைக்க முடியவில்லை. ஆனால், இந்த படத்தில் ஜஸ்டின் இசையமைத்ததில் மகிழ்ச்சி.

யோகிபாபுவை பற்றி பேசிக் கொண்டே போகலாம். நானும் யோகிபாபுவும் பல ஆண்டுகளாக நண்பர்கள். அவரை நடிகனாகும் முன்பிருந்தே தெரியும். நானும், அவரும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். ஒரு காலகட்டத்தில் அவர் சம்பாதித்து வரும் பணத்தில்தான் எனக்கும் சாப்பாடு. அப்போது நாங்கள் இருவரும் இந்தக் கதையைப் பற்றிப் பேசியிருக்கிறோம். அவர் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

ganavelraja

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “நான் பார்த்ததிலிருந்தே தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். சினிமாவை அதிகம் நேசிக்கக் கூடியவர். ரஜினியைப் பற்றி இப்படத்தில் விமர்சனம் செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் தைரியம் வேண்டும். இசையமைப்பாளர் ஜஸ்டின் திறமையானவர். அவரை இனிமேல் என் படங்களில் இசையமைக்க அழைப்பேன்.

இந்தப் படத்தின் நாயகனான யோகிபாபு இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போதே யோகிபாபு தினத்துக்கு 10 லட்சம் சம்பளம் வாங்குவதாகக் கேள்விப்பட்டேன். இது உண்மையெனில் நிச்சயமாக இது பெரிய விஷயம்தான். யோகி பாபு மென்மேலும் உயர வேண்டும்..” என்றார்.

IMG_0487

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது, “இயக்குநர் மூர்த்தி கேட்ட கேள்வி சரியானதுதான். டிக்கெட் விலையில் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். ஆனால், யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். இந்நிலைமைக்கு முறையான முயற்சி செய்யாமல் இருப்பதுதான் காரணம். தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்.

‘தர்ம பிரபு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்ததும் இப்படத்தை இழந்துவிட்டோம் என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கும். யோகி பாபுவிற்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

இயக்குநர் முத்துகுமாரின் முகபாவனையும், நகைச்சுவை கலந்த பேச்சும் நன்றாக இருக்கிறது. அவரும் நடிக்கலாம். இதுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நகைச்சுவை நடிகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் தங்களைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்துக் கொண்டு இனிமேல் வருபவர்கள் அந்த தவறை சரி செய்து கொள்ள வேண்டும்…” என்றார்.

yogi babu

இறுதியாக படத்தின் நாயகனான யோகிபாபு பேசும்போது, “இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான்.

நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில்தான் நாங்கள் இருவரும் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல்கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது.

இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா..? தேதி கிடைக்குமா..? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘குர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு, பகலாக நடித்துக் கொடுத்தேன்.

யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

முதலில் இந்தப் படத்திற்காக எமதர்மன் மேக்கப்பை போட்டதும் யாருக்கும் திருப்தி ஏற்படவில்லை. ரேகா மேடம்தான் ‘இந்த கெட்டப்பை போட்டாலே திமிர் தானாக வந்து விடும்’ என்றார். அதேபோல்தான் நானும் உணர்ந்தேன்.

சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும். விரைவில் நானும், ரேகாவும் அவருடைய ஆசைப்படியே இணைந்து நடிப்போம்.

நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள். நான் தினத்துக்கு பத்து லட்சமெல்லாம் வாங்கலை. தயாரிப்பாளர்கள் எனக்கு என்ன கொடுக்க விரும்புகிறார்களோ, அதைத்தான் பெற்றுக் கொள்கிறேன்..” என்றார்.

Our Score