full screen background image

ஜோதிகாவின் அடுத்த திரைப்படம் ‘மகளிர் மட்டும்’

ஜோதிகாவின் அடுத்த திரைப்படம் ‘மகளிர் மட்டும்’

‘36 வயதினிலே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஜோதிகா, ‘குற்றம் கடிதல்’ படத்தின் இயக்குநரான பிரம்மாவின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடிகைகள் ஊர்வசி, பானுப்ரியா, மற்றும் சரண்யா, மற்றும் நடிகர்கள் நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சூர்யாவின் ‘2-டி எண்டர்டேயின்மென்ட்’ நிறுவனமே தயாரிக்கிறது. இணை தயாரிப்பு க்ரிஸ் பிக்சர்ஸ்.

நடிகை ஜோதிகா இப்படத்தில் ஒரு ஆவணப் பட இயக்குநராக நடிக்கிறார். இந்தப் படம் முழுக்க, முழுக்க குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்திற்காக பைக் ஓட்டும் காட்சியிலும் ஜோதிகா நடிக்கிறார். இதற்காக சமீபத்தில் காலை நேரத்தில் சென்னையின் தெருக்களில் ஜோதிகாவுக்கு சூர்யாவே பைக் ஓட்ட கற்றுக் கொடுத்து அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியதும் நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக துவங்கி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதுவரையிலும் பெயர் சூட்டப்படாமல் இருந்த இந்தப் படத்தின் பெயர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.

‘மகளிர் மட்டும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதே பெயரில் நடிகர் கமல்ஹாசன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்தைத் தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் ஊர்வசி, ரேவதி, ரோகிணி, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அப்போது செம ஹிட்டடித்த இந்தப் படத்தின் பெயரையே இப்போதைய புதிய படத்திற்கு வைப்பதற்கு சம்மதம் தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

Our Score