full screen background image

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – சினிமா விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – சினிமா விமர்சனம்

ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் முதல்முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். மேலும் நவீன் சந்திரா, நிமிஷா சஜயன், சத்யன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ், இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – எஸ்.திருநாவுக்கரசு, படத் தொகுப்பு – ஷஃபிக் முகமது அலி, தயாரிப்பு வடிவமைப்பு – டி.சந்தானம், சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன், கலை இயக்கம் – பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன், நடன அமைப்பு – ஷெரிப் எம், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன், ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா, ஒப்பனை – வினோத்.எஸ்., ஆடைகள் – சுபேர், பாடல்கள் – விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்., புகைப்படங்கள் – எம்.தினேஷ், VFX மேற்பார்வையாளர் – எச்.மோனேஷ், கலரிஸ்ட் – ரங்கா, பப்ளிசிட்டி டிசைன்ஸ் – ட்யூனி ஜான் (24 AM), டீசர் கட் – ஆஷிஷ், சவுண்ட் மிக்ஸ் – சுரேன்.ஜி., ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – கணேஷ் பி.எஸ்., தயாரிப்பு நிர்வாகம் – ஜி.துரைமுருகன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ராஜ்குமார், தயாரிப்பு மேலாளர்கள் – என்.சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள், நிர்வாகத் தயாரிப்பாளர்: அசோக் நாராயணன்.எம்., அசோசியேட் தயாரிப்பாளர்: பவன் நரேந்திரா, இணை தயாரிப்பு: கல் ராமன், எஸ். சோமசேகர், கல்யாண் சுப்ரமணியம், இணை தயாரிப்பாளர்: அலங்கர் பாண்டியன், தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன், இயக்குநர்கள் குழு : சீனிவாசன், ஆனந்த் புருஷோத், கார்த்திக் வி.பி., விக்னேஸ்வரன், ஜெகதீஷ், அரவிந்த் ராஜு ஆர், மகேஷ் பாலு, சூரஜ் தாஸ், சாய், முருகானந்தம், ராகுல். எம், அவினாஷ் ஆர், மோகன் குமார்.ஆர்., பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன், வம்சி காக்கா, இப்ராஹிம் காண்ட்ராக்டர்.

தமிழ்த் திரையுலக வரலாற்றின் 2000-ம் வருடக் கணக்கில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. கமர்ஷியல் கம்மர்கட் என்ற வகையில் சகல தரப்பினரையும் திருப்திப்படுத்திய திரைப்படம் அது.

அதனுடைய அடுத்த வெர்ஷன் என்று சொல்லும்படியாக இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

கதை 1972-ல் துவங்கி 1975-ல் முடிவடைகிறது. சென்னை, மதுரை, தேனி கோம்பை காட்டுப் பகுதிகள்தான் படத்தின் கதைக் களம்.

ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழுவது.. பயத்தால் வலிப்பு வருவது என்னும் அளவுக்கு தொடை நடுங்கி பயில்வானாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைக்கிறது. டிரெயினிங்கிற்குக் கிளம்ப வேண்டிய நேரம்.

எதிர்பாராதவிதமாக ஒரு சதி வலையில் சிக்கி 4 பேரை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கொலைக் கைதியாக மதுரை சிறையில் இருக்கிறார்.

தற்போது தமிழகத்தை ஆளும் அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவும், நடிகராகவும் இருக்கிறார் ஷான் டைம் சாக்கோ. அவர் நடித்த படத்தை தென் மாவட்டங்களில் வெளியிட விடாமல் சதி செய்கிறார் சக அமைச்சரான இளவரசு.

தேனி அருகேயிருக்கும் கோம்பை காட்டுப் பகுதியில் டி.எஸ்.பி.யாக இருக்கும் நவீன் சந்திரா அந்தப் பகுதியில் வசிக்கும் அப்பாவி பழங்குடியின மக்களை சித்ரவதை செய்து பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறார்.

அரசியலிலும், கலை உலகத்திலும் தன் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இளவரசுவையும், அவரது கூட்டாளிகளையும் காலி செய்துவிடும்படி தனது தம்பி நவீன் சந்திராவிடம் உதவி கேட்கிறார் ஷான் டைம் சாக்கோ. இதற்காக சிறையில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நால்வரை விடுவித்து அவர்களிடம் பேரம் பேசி அனுப்பி வைக்கிறார் நவீன்.

எஸ்.ஜே.சூர்யா செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருப்பதைவிடவும் கொலை செய்துவிட்டு சத்தமில்லாமல் சப்-இன்ஸ்பெக்டர் போஸ்ட்டை வாங்கிவிடலாம் என்று நினைத்து இதற்கு சம்மதிக்கிறார். இதன்படி சூர்யாவு கொல்ல வேண்டியது மதுரையின் தாதாவான ராகவா லாரன்ஸை.

ராகவா லாரன்ஸ் தேனி, கோம்பை பகுதியின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையால் சிறு வயதிலேயே மதுரைக்குக் குடி பெயர்ந்தாலும், சொந்தம் விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக தனது சொந்தக்காரப் பெண்ணான நிமிஷா சஜயனை திருமணம் செய்திருக்கிறார். நிமிஷா தற்போது கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.

ராகவா லாரன்ஸூக்கு தற்போது சினிமாவில் ஹீரோவாகும் ஆசை வந்துவிட்டது. அதற்காக மதுரையில் தன் வீட்டிலேயே இயக்குநர்களை வரவழைத்து நேர்காணல் செய்கிறார். தனது நண்பன் சத்யனுடன் அங்கே வரும் சூர்யா, ராகவா லாரன்ஸின் மனதில் இடம் பிடித்து வீட்டிலும் இடம் பிடித்துவிடுகிறார்.

எப்படியும் சூர்யா தன்னை ஹீரோவாக்கிவிடுவார் என்று நினைத்து லாரன்ஸ் சூர்யா இழுத்த இழுப்பெக்கெல்லாம் ஆடுகிறார். சூர்யாவோ சமயம் பார்த்து லாரன்ஸை போட்டுத் தள்ள நினைக்கிறார்.

சூர்யாவின் திட்டம் பலித்ததா.. அல்லது ராகவா லாரன்ஸின் ஹீரோ லட்சியம் நிறைவேறியதா.. பழங்குடியின மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததா.. ஷான் டைம் சாக்கோவின் திட்டம் என்னவானது.. இது மொத்தத்தையும் கலந்து கட்டி அடித்துதான் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கிளைமாக்ஸ்.

இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவா அல்லது ராகவா லாரன்ஸ் ஹீரோவா என்று பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு இருவருக்கும் திரைக்கதையிலும், நடிப்பிலும் சரி சமமான வாய்ப்புகளை வழங்கி சமன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

படத்தில் வழக்கம்போல அதிகமாக நம்மைக் கவனிக்க வைத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ரத்தத்தைப் பார்த்தவுடன் மயக்கம் வந்து வலிப்புடன் கீழே விழுந்து தவிக்கும் காட்சியில்கூட நிஜமான நோயாளி போலவே மாறியிருக்கிறார்.

திடீரென்று சாமி வந்ததுபோல குரலை உயர்த்தி ராகவா லாரன்ஸிடம் சினிமா பற்றியும், இயக்குநர்கள் பற்றியும் பேசும் அந்தக் காட்சியில் சட்டென்று தனது நடிப்பு கிராப்பை லாரன்ஸை முந்திக் கொண்டு உயர்த்தியிருக்கிறார் சூர்யா.

ராகவா லாரன்ஸை கொலை செய்ய நினைத்து அவர் பக்கத்தில் இருப்பதற்காகவே  அவரை நடிக்க வைத்து ஷூட் செய்யும் எஸ்.ஜே.சூர்யா போகப் போக உண்மையான இயக்குநராகவே மாறிப் போவது திரைக்கதையின் டிவிஸ்ட்.

வெறுமனே ஸ்டார்ட் கேமிரா, ஆக்‌ஷன், கட் என்று வழக்கமானவற்றை சொல்லிப் பழகுபவர் பின்பு அவரை அறியாமலேயே ஒரு இயக்குநராக மாறி ராகவா லாரன்ஸை பெண்டெடுக்கும் காட்சிகளில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

இடையிடையே இவனை எப்படி கொல்வது என்ற அங்கலாய்ப்புடன் இருந்தாலும், கெட்டவனை நல்லவனாக்கும் முயற்சியில் திட்டமிட்டு லாரன்ஸை கோம்பை வனப்பகுதிக்குக் கொண்டு வந்து கெட்ட ஆட்டம் போடும் சூர்யாவின் நடிப்புதான் படத்தின் மிகப் பெரிய பலம்.

இதுவரையிலும் காட்டாத நடிப்பையும், தோரணையையும் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் பரம ரசிகர் என்ற இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மட்டும் சுவாரஸ்யமானது. இதையொட்டி கிளிண்ட்ஸ் தியேட்டர் என்ற பெயரில் தியேட்டரையும் கட்டி, அதில் தன்னை எதிர்ப்பவர்களுடன் நேருக்கு நேர் மோதுவதெல்லாம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்பெஷல் திரைக்கதை.

மதுரையின் தாதாவாக ராகவா லாரன்ஸ் போடும் ஆட்டமும், எதிர்க் குரல் கொடுக்கும் மனைவியை அடக்க முடியாமல் கத்திக் கூப்பாடுபோடும் போது நமக்கே சிரிப்பு வருகிறது.

ஆரம்பத்தில் கெட்டவனாக இருந்து, போகப் போக நல்லவனாகி கடைசியில் மக்கள் நாயகனாகவும் மாறுகிறார். நடனக் காட்சிகளில் வழக்கமான தனது ஸ்டைல் நடனத்தை முற்றிலும் தவிர்த்துவிட்டு அந்த தாதா கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான ஆட்டத்தை ஆடி ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் ராகவா லாரன்ஸ்.

நடிகராகவும், அமைச்சராகவும் நடித்திருக்கும் ஷைன் டான் சாக்கோ தனக்கே உரித்தான பாணியில் வில்லத்தனம் கலந்த ஹீரோயிஸத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு எதிரியான அமைச்சர் இளவரசு முதல் அமைச்சரிடம் செருப்படி வாங்கிய அவமானத்துடன் கடைசியில் சாக்கோவை திட்டமிட்டு பழி வாங்குவது எதிர்பார்க்காத டிவிஸ்ட்.

எதற்கெடுத்தாலும் செருப்பால் அடிக்கும் முதல் அமைச்சராக நடித்திருந்த அந்தப் பெண்மணி சிறப்பாக நடித்திருக்கிறார். இருந்தும், அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை பார்த்தால் முன்னாள் முதல் மந்திரி ஜெயலலிதாவை அவர் ஞாபகப்படுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை.

ராகவா லாரன்ஸின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் சாதாரணமான சிட்டி பெண்ணாகவும் இல்லாமல், கிராமப்புற பெண்ணாகவும் இல்லாமல்.. வித்தியாசமான கேரக்டர் ஸ்கெட்ச்சில் தாதா புருஷனை வெளுத்துக் கட்டும் பழங்குடியின பெண் கதாப்பாத்திரத்தை நச் என்று செய்திருக்கிறார். அவருடைய முகத் தோற்றமும் அந்தக் கதாப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் நவீன் சந்திராவின் வில்லத்தனம் கொடூரம். நண்பனாக நடித்திருக்கும் சத்யன் தானும் ஒருவன் படத்தில் இருக்கிறேன் என்பதை சொல்ல வைத்திருக்கிறார். அனைத்து நடிகர், நடிகையரையும் சிறப்பாக நடிக்க வைத்ததன் மூலமாக தானும் ஒரு சிறந்த நடிகன்தான் என்பதை மறைமுகமாக நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

நடிப்பாற்றல் போலவே தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் சிறப்பு வாய்ந்ததுதான்.

1970-களில் கதை நடப்பதால் அக்காலத்தை கண் முன்னே கொண்டு வருவதற்காக பிரயத்தனப்பட்டு உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சந்தானம். அவருடைய உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் திருவின் ஒளிப்பதிவு தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது. சென்னைக்கு ஒரு கலர்.. கோம்பைக்கு ஒரு கலர். காட்டுப் பகுதிக்கு ஒரு கலர். மதுரைக்கு ஒரு கலர் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கலர் டோன்களை வைத்து திரையை வண்ணமயமாக்கியிருக்கிறார்.

பாடல் காட்சிகளில் காட்டியிருக்கும் வேகம், சண்டை காட்சிகளிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் மாமதுரை பாடல் தியேட்டருக்கு வெளியிலும் ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசை தனி அடையாளத்துடன் படத்திற்கு பெரும் பலமாக பயணித்திருக்கிறது.

ஒலி வடிவமைப்பில் சிரத்தையெடுத்து பதிவு செய்திருப்பதால் காட்டுப் பகுதிகளில் நடக்கும் காட்சிகளில் மனதைப் பறி கொடுக்கிறோம்.

யானைகளின் நன்றி தெரிவிக்கும் காட்சியில் அவைகள் நிஜமான யானைகள்தானா.. அல்லது சி.ஜி.யா என்று சந்தேகம் வரும் அளவுக்கு படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் ஒரு ரவுடிக்கும், திரைப்பட இயக்குநருக்கும் இடையிலான நட்பையும், கசப்பையும் சொல்லியிருந்தார். அதுபோலவே இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு ரவுடிவுக்கும், இயக்குநருக்குமான பிரெண்ட்ஷிப்புதான் படத்தின் மையக் கரு என்று சொல்லியிருந்தாலும் இதில் இருக்கும் சில, பல கிளைக் கதைகள் மூலமாக வனங்களின் பாதுகாப்பு, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்தல் என்ற சமூக அக்கறையையும் தொட்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

படத்தின் மிகப் பெரிய பலவீனமே படத்தின் நீளம்தான். தயவு தாட்சண்யமே பார்க்காமல் அரை மணி நேர காட்சிகளை கத்தரித்து கொடுத்திருந்தால் படம் இப்போது இருப்பதைவிடவும் மிகவும் கிரிப்பாக இருந்து மக்களை உசுப்பேற்றியிருக்கும்.

முதல் பாதியில் லாரன்ஸை நடிக்க வைக்க சூர்யா எடுக்கும் முயற்சிகளும், லாரன்ஸின் தாதாத்தனத்தைக் காட்டுவதற்காக வைத்திருக்கும் சிற்சில காட்சிகளும்கூட ரொம்பவே போரடிக்க வைக்கிறது. பிற்பாதியில் லாரன்ஸ் எப்போது சுய சிந்தனை பெற்று நல்லவரானார் என்பதையும், சூர்யா தான் லாரன்ஸை கொல்ல வந்ததை மறந்துபோய் மக்களுக்காக உழைக்க முன் வருவது ஏன் என்பதையும் இயக்குநர் திரைக்கதையில் சொல்லாமல் விட்டிருப்பது, படத்தின் திரைக்கதையில் ஓட்டை விழுந்திருப்பதை காட்டுகிறது.

கமர்ஷியலாக படமாகவே, மிக நீளமானதாகவே இது இருந்தாலும்… ஒரு நல்ல கருத்தை, வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கும் இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் கார்த்திக் சுப்பராஜின் ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.

RATING : 3.5 / 5

Our Score