நேற்றைய இரவு 11.30 மணிக்கு காலமான தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறின் சுருக்கம் இங்கே :
தமிழ்த்திரை உலகில் புகழ் பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24-ம் தேதி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள்.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப டாக்டர். மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களின் முன்பாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார் ரங்காச்சாரி.
ஜெயலலிதாவுக்கு 2 வயதானபோது, அவரது தந்தை காலமானார். இதனால், அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா-பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார் ஜெயலலிதா. பெங்களூரில் அவர் தங்கியிருந்த அந்த குறுகிய காலத்தில், சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார்.
பின்னர் சென்னை வந்த ஜெயலலிதா இங்கே சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12-வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.
1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக் கொண்டார்.
மேல்படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு திரையுலக பிரவேசம் நடந்தது. ஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்பச் சூழ்நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார் ஜெயலலிதா.
1964-ல், திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி வழியையும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடமும் பிடித்தார். ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964-ல் வெளியான ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னட படம். இப்படம் அவருக்கு பெரும் விமர்சனங்களையும், பார்வையாளர்களின் கை தட்டலையும் பெற்றுத் தந்தது. ஒரு வருடம் கழித்து, புதுமை இயக்குநரான ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார்.
‘வெண்ணிற ஆடை’ படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த ‘எபிசில்'(லிகிதம்) என்ற ஆங்கிலப் படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் “இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்..! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்..!” என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.
அதன் பிறகு, அவர் தெலுங்கு சினிமாவில் தோற்றமளித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் பல தமிழ் படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்தார். அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றது.
நடிகர் எம்.ஜி.ஆருக்கு சரோஜாதேவிக்கு பிறகு ராசியான ஜோடியாகவும், சரியான ஜோடியாகவும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் ஜோடியாக நடித்திருந்தார் ஜெயலலிதா. இந்த ஜோடி பொருத்தம்தான் தமிழ்ச் சினிமாவில் அதிக படங்களில் நடித்த ஜோடி என்கிற பெயரையும் பெற்றிருந்தது.
முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார்.
ஜெயலலிதாவின் 100-வது படமான ‘திருமாங்கல்யம்’ 1977-ல் வெளிவந்தது. அதன் பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். 1968-ல், அவர் தர்மேந்திரா நடித்த ‘இஜத்’ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த தமிழ்ப் படம் 1980ல் வெளியான ‘நதியை தேடி வந்த கடல்’. சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு “வேதா நிலையம்” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் ‘வேதா’ என்னும் வேதவள்ளி)
1980-ம் ஆண்டில், அ.இ.அ.தி.மு.க. நிறுவனரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை கழகத்தின் கொள்கை பிரச்சார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமின உறுப்பினரான அறிவிக்கப்பட்டார். இதுவே, அவரை திறம்பட இந்திய பாராளுமன்றத்திற்கு செயல்பட வழிவகுத்தது.
பின்னர், அவர் தீவிரமாக அ.இ.அ.தி.மு.க. அரசியல் கட்சி உறுப்பினராக ஈடுபட்டார். இதுவே, ஜெயலலிதாவை, அ.இ.அ.தி.மு.க. கட்சியின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிட செய்தது.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராகப் பணியாற்றியபோது, ஜெயலலிதா அவருடைய அரசியல் கட்சியின் செயலாளராக இருந்து தன் தீவிர பங்கை வெளிப்படுத்தினார். அவரது மரணத்திற்கு பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்களை அதிமுகவின் எதிர்கால தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாக பிரிந்தது – ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும்.
எனினும், 1988-ம் ஆண்டில் அவரது கட்சி, இந்திய அரசியலமைப்பின் 356-கீழ் தள்ளுபடி செய்யப்பட்டது. 1989-ல், அதிமுக கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது.
அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும், அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
சொத்துக் குவிப்பு, அதிகாரத் துஷ்பிரயோகம், அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியது, வாங்கியது.. விற்பனை செய்தது, சம்பாத்தியத்துக்கு மேல் சொத்துக்களை சேர்த்த்து போன்ற வலுவான குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தாலும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக அசைக்க முடியாத தலைவராக நீடித்து வந்தார். இதனாலேயே அவர் மூன்று முறை ஆட்சிக்கு வந்தார்.
வாங்கிய விருதுகள் :
‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற படம் இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான “பிலிம்பேர் விருதினை” வாங்கிக் கொடுத்தது.
சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ‘ஸ்ரீ கிருஷ்ணா சத்யா’ என்ற படம் அவருக்கு வழங்கியது.
‘சூர்யகாந்தி’ படம், இவருக்கு சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வழங்கியது.
தமிழ்நாடு அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது.
சென்னை பல்கலைக்கழகம் மூலமாக இலக்கியத்தில் ‘கவுரவ டாக்டர் பட்டம்’ பெற்றார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ வழங்கியது.
‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து அறிவியலுக்கான ‘கவுரவ டாக்டர் பட்டம்’ கிடைத்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம், ‘கடிதங்களுக்கான டாக்டர் பட்டத்தை’ வழங்கியது.
சட்டத்திற்கான ‘கவுரவ டாக்டர் பட்டத்தை’, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வழங்கியது.
கால வரிசை பட்டியல் :
1948: மைசூர் நகரில், பிப்ரவரி 24ஆம் தேதி பிறந்தார்.
1961: ‘எபிஸில்’ என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் முதல் முறையாக பங்கேற்றார்.
1965: தமிழ் படங்களில் அறிமுகமானார்.
1972: ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்திற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.
1980: கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்டார்.
1984: மக்களவை உறுப்பினரானார்.
1989: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
2002: இரண்டாவது முறையாக மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.
2011: மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பணியாற்றினார்.
2016: நான்காவது முறையாக தமிழக முதல்வாரகவும் பதவியேற்றார்.
2016 டிசம்பர் 5 – காலமானார்