திரையுலகில் ஜெயலலிதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திறமையாலும், கடுமையான உழைப்பாலும் படிப்படியாக வளர்ந்து உச்சத்தை தொட்டவர்.
ஜெயலலிதா 1961-ம் ஆண்டு ‘ஸ்ரீசைல மகாத்மே’ என்ற கன்னட படத்தில் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெறும் பள்ளிக்கூட நாடக காட்சியில் பார்வதி வேடத்தில் நடிக்க வேண்டிய சிறுமி வரவில்லை. இதனால் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க தனது தாயார் சந்தியாவுடன் சென்றிருந்த ஜெயலலிதாவை டைரக்டர் அரூர் பட்டாபி, பார்வதி வேடத்தில் நடிக்க வைத்தார். பார்வதி வேடத்தில் நடனக் காட்சியில் ஜெயலலிதா நடித்தார்.
அதன் பிறகு 1962-ல் கிஷோர் குமார் கதாநாயகனாக நடித்த ‘மன்மாஜி’ என்ற இந்தி படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் 3 நிமிட நடன காட்சியில் நடித்தார். பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’ படத்தின் நூறாவது நாள் விழா 1964-ம் ஆண்டு சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.
இந்த படத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும் நடித்து இருந்ததால், விழாவுக்கு தனது மகள் ஜெயலலிதாவையும் அழைத்து வந்து இருந்தார். அப்போது பி.ஆர்.பந்துலு தனது இயக்கத்தில் பிரபல நடிகர் கல்யாண்குமார் கதாநாயகனாக நடிக்கும் ‘சின்னத கொம்பே’ என்ற கன்னட படத்துக்கு புதுமுக கதாநாயகியை தேடிக்கொண்டு இருந்தார்.
விழாவுக்கு வந்திருந்த ஜெயலலிதாவை பார்த்த பி.ஆர்.பந்துலு, சந்தியாவின் அனுமதியுடன் ஜெயலலிதாவை ‘சின்னத கொம்பே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.
அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்திருந்த ஜெயலலிதா, 2 மாதங்களில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர இருந்ததால், முதலில் அவரை நடிக்க வைக்க தாயார் சந்தியா தயங்கினார். “6 வாரங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும், எனவே ஜெயலலிதா கல்லூரியில் சேருவதில் எந்த இடையூறும் இருக்காது” என்று பி.ஆர்.பந்துலு உறுதி அளித்ததால், ஜெயலலிதா நடிப்பதற்கு தாயார் சந்தியா அனுமதி அளித்தார்.
1964-ல் வெளியான ‘சின்னத கொம்பே’ படம் மகத்தான வெற்றி பெற்றதால், திரையுலகில் ஜெயலலிதா மிகவும் பிரபலம் ஆனார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதனால் அவரது கல்லூரி படிப்பு கனவாகவே முடிந்து விட்டது.
சட்டம் படித்து வக்கீலாக வேண்டும் என்பது ஜெயலலிதாவின் விருப்பமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம் ஈடேறாவிட்டாலும், அவரது வாழ்க்கை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்துக்கு சென்றுவிட்டது.
ஜெயலலிதா இனிமையான குரல் வளம் கொண்டவர். பல படங்களில் சொந்தக் குரலில் பாடியும் இருக்கிறார்.
அவர் பாடிய பாடல்களின் பட்டியல் :
1. அடிமை பெண்- அம்மா என்றால் அன்பு…
2. சூரிய காந்தி- ஓ மேரி தில் ரூபா…
3. சூரிய காந்தி- நான் என்றால் அது…
4. வந்தாளே மகராசி- கண்களில் ஆயிரம்…
5. வைரம்- இரு மாங்கனி போல்…
6. அன்பைத் தேடி- சித்திர மண்டபத்தில்…
7.திருமாங்கல்யம்- திருமாங்கல்யம் கொள்ளும் முறை…
8. திருமாங்கல்யம் – பொற்குடத்தில் பொங்கும் எழிற் சுவையோ…
9. உன்னை சுற்றும் உலகம்- மெட்ராஸ் மைல்…
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘மாறி வரும் உலகினிலே…’, ‘மாரியம்மா முத்து மாரியம்மா…’, ‘காளி மகமாயி கருமாரியானவளே…’, ‘தங்க மயிலேறி வரும் எங்கள் வடிவேலவன்…’ போன்ற பக்தி பாடல்களையும் ஆல்பங்களில் பாடி இருக்கிறார்.









