‘ஜவான்’ வெற்றியை கொண்டாடிய செய்தியாளர் சந்திப்பில் ‘ஜவானி’ன் முன்னணி நட்சத்திரங்கள் பங்கு கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர், மேலும் இந்நிகழ்வில், மீடியா மற்றும் ரசிகர்களுக்காக அனிருத்தும் ராஜகுமாரியும் பாடல் பாடினார்கள்.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றி நடை போட்டு இன்னும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது.
உலகம் முழுவதும் ‘ஜவான்’ படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக் குழு வெற்றியை கொண்டாடும்விதமாக செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘ஜவான்’ படத்தின் பாடல் நிகழ்ச்சியை படக் குழு நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் நேற்று மாலை 2 மணி நேரம் நடைபெற்றது.
இந்த சக்ஸஸ் விழாவில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன், விஜய் சேதுபதி, சுனில் குரோவர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பெண் கலைஞர்களும் மற்றும் ஜவானின் முழு நட்சத்திரக் குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் அட்லியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நாயகி நயன்தாரா சில காரணங்களால் பங்கேற்க முடியாததால், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்பினார். இவர்களைத் தவிர, ஜவானுக்குப் பின்னால் முதுகெலும்பாக இருந்த ஜவானின் தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
படத்திற்கு ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின்போது நேரலையில் இசையமைத்தார். கிங் கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய ராஜகுமாரியும் இதில் பங்கு கொண்டார்.
இந்த நிகழ்வில் ‘சாலேயா’ பாடலுக்கு SRK மற்றும் தீபிகா படுகோனே இருவரும் நடனமாடி அசத்தினார்கள். மேலும், நாயகன் ஷாரூக்கான் ‘ராமையா வஸ்தாவய்யா’ பாடலுக்கும் நடனமாடி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.
இந்த ‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.













