full screen background image

“இப்படியொரு கிரைம், திரில்லர் படத்தைப் பார்த்திருக்கவே மாட்டீங்க..!” – ரத்தம் படம் பற்றி இயக்குநர் அமுதன் பேச்சு!

“இப்படியொரு கிரைம், திரில்லர் படத்தைப் பார்த்திருக்கவே மாட்டீங்க..!” – ரத்தம் படம் பற்றி இயக்குநர் அமுதன் பேச்சு!

’தமிழரசன்’, ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ என்று இந்த ஆண்டு தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘ரத்தம்’.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கமல் போரா, ஜி.தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகைகளான மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் இந்தப் படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நடிகர் ஜெகன் கிருஷ்ணாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு, கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். டி.எஸ்.சுரேஷ் படத் தொகுப்பு செய்ய, செந்தில் ராகவன் கலை இயக்கம் செய்துள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். ‘தமிழ்ப் படம்’ புகழ் இயக்குநர் சி.எஸ்.அமுதன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படமாகும்.

“ஊடகத் துறை மற்றும் அரசியல் துறையை மையப்படுத்திய க்ரைம், திரில்லர், ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம். ஆனால், வழக்கமான க்ரைம் திரில்லர் படம் போல் அல்லாமல் இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத க்ரைம், திரில்லர் படமாக இது இருக்கும்…” என்கிறார் இயக்குநரான சி.எஸ்.அமுதன்.

படம் குறித்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் மேலும் பேசும்போது, “நானும் விஜய் ஆண்டனியும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அதனால் அவரை எனக்கு நண்பராக முன்பே தெரியும். நான் தமிழ்ப் படம்’ படத்தை எடுத்து முடித்தபோது, அவர் அப்போதுதான் ‘நான்’ படத்தில் நடித்திருந்தார். அப்போதே நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று பேசினோம். ஆனால், பண்ண முடியலை.

ஒரு நாள், “ஏன் எனக்கு படம் பண்ண மாட்டீங்களா..?” என்று விஜய் ஆண்டனியிடம் நான் கேட்டபோது, அவர், “கதைகூட சொல்ல வேண்டாம்.. வாங்க படம் பண்ணுவோம்..” என்று அழைத்தார். அப்படித்தான் இந்தப் படம் தொடங்கியது.

நான் அவரிடம் இந்தப் படத்தின் கதையைச் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் உடனேயே அடுத்த 15  நாட்களில் படப்பிடிப்பை தொடங்கினோம்.

படம் பற்றி சொல்ல வேண்டுமானால், இப்படிப்பட்ட கதையில் நடிக்க வேண்டும் என்றால் அந்த ஹீரோவுக்கு ரொம்பவே தைரியம் வேண்டும். விஜய் ஆண்டனிக்கு அந்தத் தைரியம் இருந்தது. நடித்துவிட்டார்.

கதை முழுவதுமே ஊடகத் துறையை சுற்றித்தான் நடக்கும். ஹீரோவே ஒரு பத்திரிகையில் ஆசிரியராகத்தான் பணியாற்றுகிறார். அவர் என்ன கண்டுபிடிக்கிறார்? என்பதைத்தான் திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம். ஆனால், இதற்கு மேல் படம் பற்றி எதுவுமே சொல்ல முடியாது.

காரணம், அதைத் தெரிந்து கொள்ளாமல் திரையரங்கில் படம் பார்க்கும்போதுதான் உங்களுக்கு புது அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை சிதைக்கக் கூடாது என்பதால்தான் அதைப் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியவில்லை.

பொதுவாக க்ரைம், திரில்லர் படங்களில் கொலையாளி யார் என்பதுதான் முக்கியமான அம்சமாக இருக்கும். ஆனால், நாங்கள் கொலை செய்வது யார்.. என்பதை டிரெயிலரிலேயே காட்டிவிட்டோம். ஆனால், எதனால் இந்தக் கொலைகள் நடக்கிறது என்பதில்தான் ஒரு மர்மக் கதை இருக்கிறது. அது என்ன என்பதுதான் கதையின் முடிச்சு. இந்த முடிச்சு ரசிகர்களை சஸ்பென்ஸுடன் பயணிக்க வைக்கும். அதேபோல், இந்தப் படத்தை, “இது இந்த வகையிலான படம்..”, “அப்படிப்பட்ட படம்..” என்று ஒரு வட்டத்திற்குள் சுருக்கவே முடியாது.

நான் இந்தப் படத்தின் திரைக்கதையை சொன்னபோது விஜய் ஆண்டனி, “என்னிடம் ‘ரத்தம்’ என்ற தலைப்பு இருக்கிறது. உங்கள் கதைக்கு சரியாக இருந்தால் அதையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்..” என்றார். நான் ‘வன்மம்’ என்ற தலைப்பை யோசித்து வைத்திருந்தேன். ஆனால், ரத்தம், வன்மம் இரண்டுக்குமே நெருக்கம் அதிகம் என்பதாலும், வன்ம’த்தைவிடவும் ‘ரத்தம்’ என்ற தலைப்பு இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால், அதையே தலைப்பாக வைத்துவிட்டோம்.

அதே சமயம், ‘வன்ம’த்தை காட்டி ரசிகர்களை திரையரங்கிற்கு வர வழைக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. நாங்கள் சொல்ல வேண்டிய விசயத்திற்கு எந்த அளவுக்கு தேவையோ அதை மட்டுமே காட்சியாக வைத்திருக்கிரோமே தவிர, ரசிகர்களை இழுப்பதற்காக தேவையில்லாத வன்முறை, செக்ஸ் காட்சிகளை வைக்க வேண்டும் என்ற என்ணம் எங்களுக்குத் துளிகூட இல்லை. அதைவிட சஸ்பென்ஸான மற்றும் சுவாரஸ்யமான விசயங்கள் நிறையவே இந்தப் படத்தில் உள்ளன.

அதேபோல் இதற்கு முன் வெளியான க்ரைம், திரில்லர் படங்களின் சாயல் ஒரு சதவீதம்கூட இதில் இருக்காது. க்ரைம், திரில்லர், ஜானர் படங்களில் இப்படி ஒரு படத்தை இதுவரையிலும் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று தைரியமாக என்னால் சொல்ல முடியும்…” என்றார் மிக தைரியமாக.!

படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி இந்தப் படம் குறித்து கூறுகையில், “இயக்குநர் அமுதன் என்னிடம் இந்தக் கதையை சொன்னபோது ரொம்பவே புதியதாக இருந்தது. க்ரைம், திரில்லர், ஜானர் படங்கள் பல வந்திருக்கின்றன. நானும் அது போன்ற சில படங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால், அமுதன் இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் விஷயம் புதிதாக இருந்ததோடு, தற்போது உலகம் முழுவதும் நடக்க கூடிய ஒன்றுதான் என்பதாலும்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

இந்த படத்தில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா என மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். ஆனால், மூன்று பேருமே எனக்கு ஜோடியில்லை. ஏன் என்று இயக்குநரிடம் கேட்டால், கதை அப்படித்தான் என்று சொல்லிவிட்டார்.” என்றார்.

ஊடகத் துறையை மையப்படுத்திய கதை என்பதால், பத்திரிகை அலுவலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட இயக்குநர் சி.எஸ்.அமுதன், அங்கு அவர்களுடைய பணி எப்படி இருக்கிறது, அவர்களுடைய கட்டமைப்பு உள்ளிட்ட விசயங்களை படத்தில் தத்ரூபமாக வைத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி, இரண்டு பத்திரிகையாளர்களும் இந்த ரத்தம்’ படத்தில்  பணியாற்றியிருப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே, ‘ரத்தம்’ படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இயக்குநர் சி.எஸ்.அமுதன் மற்றும் நாயகன் விஜய் ஆண்டனி கூறிய இந்தத் தகவல்களால் அந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வரும் அக்டோபர் 6-ம் தேதி உலகம் முழுவதும் இந்த ‘ரத்தம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score