ஜருகண்டி – சினிமா விமர்சனம்

ஜருகண்டி – சினிமா விமர்சனம்

நடிகர் நிதின் சத்யா, தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரி உடன் இணைந்து, தனது சொந்த நிறுவனமான ஸ்வேத் குரூப் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார் நிதின் சத்யா.

இத்திரைப்படத்தில் நிதின் சத்யாவின் மிக நெருங்கிய நண்பரான ஜெய் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

‘ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம்’ என்கிற மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரெபா மோனிகா ஜான், இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும், ரோபோ சங்கர், டேனியல், இளவரசு, போஸ் வெங்கட், அமித், ஜெயக்குமார், ஜி.எம்.குமார், நந்தா சரவணன், காவ்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – போபோ சசி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ரெமியன், நடன இயக்கம் – அஜய் ராஜ், சதீஷ், பாடல்கள் – கங்கை அமரன், உமா தேவி, சந்துரு, சண்டை இயக்கம் – டான் அசோக், உடை வடிவமைப்பு – ஷில்பா வும்மிட்டி, உடைகள் – வாசு, தயாரிப்பு நிர்வாகம் – என்.சுப்பு, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, டிசைன்ஸ் – Fuze Creative.

இந்த படத்தின் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குநரான பிச்சுமணி, இயக்குநராக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

தந்தையை இழந்து தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் நாயகன் ஜெய் ஒரு மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சுய தொழில் செய்ய விரும்புகிறார். இதற்காக டிராவல்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்கிறார். வங்கிகளில் கடன் கேட்டு நாயாய் அலைகிறார். இவருடைய பெயர் விஜய் மல்லையா என்றோ, நீரவ் மோடி, மெகல் சோக்சி என்றோ இல்லாததால் எந்த வங்கியும் இவருக்குக் கடன் தர முன் வரவில்லை.

இந்த நிலையில் ஜெய்யின் உயிர் நண்பனான டேனியல் “எனக்குத் தெரிந்த புரோக்கர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் போனால் அவரே வங்கிகளிடம் பேசி நமக்கு கடன் வாங்கித் தருவார். நாம அவர் கேக்குற கமிஷனை கொடுத்தால் போதும்..” என்று சொல்லி ஜெய்யை அழைக்கிறார்.

டேனியலின் வார்த்தையை நம்பி ஜெய்யும் அந்த புரோக்கரான நடிகர் இளவரசுவை பார்க்கச் செல்கிறார். தேன் கலந்த வார்த்தைகளை வீசும் இளவரசு தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை வெளிப்படையாகவே சொல்கிறார்.

வெளிநாட்டில் வசிப்பவர்களின் நிலங்களை தன்னுடைய நிலம் என்று சொல்லி போலியாக ஒரு பத்திரத்தை தயார் செய்து அதனை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறலாம் என்கிறார். இதற்கு முதலில் ஜெய்யும், டேனியலும் தயங்குகிறார்கள். இளவரசு தைரியமூட்டுகிறார். “அதான் மாதாமாதம் கரெக்ட்டா டியூ கட்டிருவீங்கள்லே.. அப்புறமென்ன..? பணத்தைக் கட்டி முடிச்சிட்டு பத்திரத்தை வாங்கிக் கிழிச்சுப் போட்டு்ட்டு போய்க்கிட்டேயிருப்போம்…” என்று ஆசை வார்த்தைகளைத் தூண்டிலாக போடுகிறார் இளவரசு.

டிராவல்ஸ் ஆரம்பித்தே ஆக வேண்டிய வெறியில் இருப்பதால் ஜெய் இதற்கு ஒத்துக் கொள்கிறார். கடனும் கிடைக்கிறது. கிடைத்த கடனில் கார்களை வாங்கி ‘ஜில் ஜில் டிராவல்ஸ்’ என்ற பெயரில் கம்பெனியை ஜெகஜோதியாக நடத்துகிறார் ஜெய்.

இந்நிலையில் ஒரு நாள் அவரது வீட்டிற்கு வரும் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டரான போஸ், அவர்கள் செய்த தில்லுமுல்லுகளை பற்றி விசாரிக்க வங்கியிலிருந்து கடிதம் வந்துள்ளதாகவும், அதனால் 2 நாட்களுக்குள்ளாக 10 லட்சம் ரூபாயை அவர்கள் லஞ்சமாக கொடுத்தால் அவர்களை தப்பிக்க விடுவதாகவும் சொல்கிறார்.

2 நாட்களில் 10 லட்சத்தை எப்படி புரட்டுவது என்று பப்பில் அமர்ந்து மப்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஜெய்யும், டேனியலும். அப்போது அதே பப்பில் அமர்ந்து தனக்குத்தானே மப்பில் பேசிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கருடன் அவர்களுக்கு பிரச்சினையாகிறது.

ரோபோ சங்கர் மிகப் பெரிய பணக்காரன் என்பதை அறிந்தவுடன் டேனியல் அவர் மீது ஆர்வமாகிறார். தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண்ணைத் தன்னுடன் சேர்த்து வைத்தால் தான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அவர்களுக்குத் தருவதாகவும் சொல்கிறார் ரோபோ சங்கர். தங்களுடைய இப்போதைய பிரச்சினையே 10 லட்சம் ரூபாய்தான் என்பதால் இதற்கு இருவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

மறுநாள் ரோபோ சங்கர் அடையாளம் காட்டும் நாயகி ரெபா ஜானை கடத்துகிறார்கள். அவளுடைய அப்பாவிடம் பணம் கேட்கிறார்கள். அவரும் பணத்தைக் கொடுக்கிறார். ஆனால் ஒரு சூழ்நிலையில் அந்தப் பணத்துடன் ரெபாவே காணாமல் போய்விடுகிறார். ரெபாவை தேடி ஒரு பக்கம் ஜெய்யும், டேனியலும் அலைகிறார்கள்.

ரெபாவின் அப்பாவாக இருப்பவர் நிஜ அப்பா இல்லை என்பது தெரிகிறது. அவர் கார்டியனாக மட்டுமே இருந்திருக்கிறார். நிஜத்தில் ரெபா ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவர் என்பதும், இப்போது வெளிநாட்டில் நர்ஸ் வேலைக்கு போவதற்காக பாஸ்போர்ட்டுக்காக காத்திருப்பதும் தெரிய வருகிறது.

ஆனால் உண்மையில் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி பாலியல் தொழிலில் ரெபாவையும் சில பெண்களையும் ஈடுபடுத்த வில்லன் கோஷ்டி திட்டமிடுகிறது. இத்திட்டம் தெரியாமல் ரெபா பாஸ்போர்ட்டை வாங்குவதற்காக பாண்டிச்சேரிக்கு வருகிறார்.

இங்கே சென்னையில் டேனியலைக் கடத்தி வைத்துக் கொண்டு ரெபாவை கொண்டு வந்து ஒப்படைத்தால்தான் டேனியலை உயிரோடு பார்க்க முடியும் என்று ஜெய்யை மிரட்டுகிறார்கள் வில்லன் கோஷ்டியினர்.

ரெபாவை தேடி பாண்டிச்சேரிக்கு வந்த ஜெய், அங்கே இளவரசுவை பார்த்துவிடுகிறார். இளவரசுவை தேடிப் பிடித்து அடித்து உதைத்து தாங்கள் கடன் வாங்கிய விவகாரம் அந்த இன்ஸ்பெக்டருக்கு எப்படி தெரியும் என்று கேட்க.. இளவரசு வேறு கதையைச் சொல்கிறார்.

இன்ஸ்பெக்டர் போஸ் தன்னுடைய சொந்தத் தம்பி என்றும், தாங்கள் இருவரும் இப்படி கேம் விளையாடி மாட்டுபவர்களிடத்தில் இருந்து லம்பாக பணத்தைக் கறப்போம் என்றும் சொல்கிறார். அதே நேரம் ரெபா அங்கே வந்து பாஸ்போர்ட்டை கேட்கிறார். இளவரசுவிடம் இருந்த அனைத்துப் பெண்களின் பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துக் கொண்டு ஜெய் கிளம்ப... தன்னைக் கடத்தியவன் ஜெய்தான் என்பது தெரியாமலேயே ஜெய்யின் காரிலேயே ரெபாவும் சென்னைக்குத் திரும்பி வருகிறார்.

முடிவில் என்ன ஆகிறது.. ஜெய், ரெபாவை வில்லன் கோஷ்டியினரிடம் ஒப்படைத்தாரா.. டேனியல் காப்பாற்றப்பட்டாரா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கதை கொஞ்சம் புதுமையானதாக இருந்தாலும் ஏதோவொரு ஹாலிவுட் அல்லது கொரிய படத்தின் காப்பியாக இருக்கும் என்பதாக நமது சந்தேகப் புத்தி டார்ச் லைட் அடிக்கிறது.

சிறந்த திரைக்கதையுடன் சினிமாவுக்கேற்ற டிவிஸ்ட்டுகளுடன் படம் இருந்தாலும் இயக்கம் அழுத்தமாக இல்லாததால் படம் அதிகமாகப் பேசப்படாமலேயே போய்விட்டது.

அதிலும் நடிகர் ஜெய்யை வைத்துக் கொண்டு கவர்ந்திழுக்கும் அளவுக்கெல்லாம் நடிப்பை எதிர்பார்க்க முடியாது என்பதால் படத்தின் மவுத் டாக்கே படம் பார்த்த ரசிகர்களின் தொண்டைக் குழியிலிருந்த வெளியில் வரவில்லை என்பதுதான் உண்மை.

ஜெய் வழக்கம்போல அம்மாவிடம் பேசும்போதும், நண்பனிடம் பேசும்போது, இளவரசுவிடம் பேசும்போதும், ரெபாவிடம் பேசும்போதும் ஒரே மாதிரியான முக பாவனையையே காட்டி போரடிக்க வைக்கிறார். படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் நாயகன் ஜெய்தான்.

ஏதோ டேனியல் இருப்பதால்தான் படமும் முதல் பகுதியில் போரடிக்காமல் செல்கிறது. டேனியல் சின்ன அளவில் சிரிக்க வைத்தாலும், சிறப்பாகவே நடிக்க வைத்திருக்கிறார். இயக்குநர் இவரை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கலாம்.

நாயகி ரெபாவுக்கு இது முதல் தமிழ்ப் படம். அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும், எமோஷனலான காட்சிகளில் கொஞ்சமேனும் நடித்திருக்கிறார். ஆனால் பாராட்டும் அளவுக்கு ஈர்ப்பு இல்லை.

வில்லன்களில் ஒருவரான ஜெயக்குமார், ஜி.எம்.குமார் மற்றும் ஹிந்தி வில்லன் மூவருமே ஏதோ நடித்திருக்கிறார்கள். ரோபோ சங்கர் வழக்கம்போல அதகளம் செய்திருக்கிறார். அவருடைய பாடி லாங்குவேஜூம், டயலாக் டெலிவரியும் எப்பேர்ப்பட்ட கேரக்டரையும் ரசிக்க வைத்துவிடும். ரோபோ சங்கர்தான் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.

போஸ் வெங்கட் இன்ஸ்பெக்டராக ஸ்டைலிஸாக நடித்திருக்கிறார். அவருடைய முதல் அறிமுகக் காட்சியிலேயே அவருடைய நடிப்பும், ஸ்டைலும் கவர்கின்றன. இப்படி சிற்சில காட்சிகளில் மட்டுமே இயக்குநர் ஸ்கோர் செய்திருக்கிறார்.

அதேநேரம் குறிப்பால் உணர்த்தும் காமெடிகளும் படத்தில் இருக்கின்றன. பர்மா பஜார் கடையில் “ஜருகண்டி படம் இருக்கா..?” என்று டேனியல் கேட்க “இருக்கு..” என்ற கடைக்காரன் ஒரு டிவிடியை எடுத்துக் காட்டுவது குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

இதேபோல் இளவரசுவை கட்டி வைத்த நிலையிலேயே ஜெய் கிளம்பிப் போகும்போது டிவியில் தமிழிசை செளந்தர்ராஜன் “தாமரை நிச்சயமாக தமிழ்நாட்டில் மலரும்..!” என்று பேசுவதை காட்டுவதும் தைரியமான ஒரு காட்சியமைப்பு. எப்படி சென்சாரில் இதை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் நிறையும் இல்லை குறையும் இல்லை. கொடுத்த பட்ஜெட்டுக்குள் எடுத்துக் கொடுத்திருக்கிறார். இப்படியொரு திரில்லர் சஸ்பென்ஸ் படத்துக்குண்டான அதே வேகத்தோடு படத் தொகுப்பை செய்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன்.

போபோ சசியின் பாடல்கள் கேட்கும் ரகம்தான். ஆனால் கேட்டுக் கொண்டேயிருக்கம் ரகமல்ல. பாடல் காட்சிகளை ஒளிப்பதிவாளரின் புண்ணியத்தால் பார்த்து ரசிக்க முடிகிறது.

முன்பே சொன்னதுபோல இயக்குநர் பிச்சுமணி, இன்னும் சரியான  கேஸ்டிங்குடன், கேரக்டர் ஸ்கெட்ச்சுடனும், அழுத்தமான இயக்கத்திலும் இதனை படைத்திருந்தால் நிச்சயம் வெற்றிப் படமாகியிருக்கும்..!

எது எப்படியிருந்தாலும் ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்ற லிஸ்ட்டில் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.