full screen background image

ஜமா – சினிமா விமர்சனம்

ஜமா – சினிமா விமர்சனம்

‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்த ‘லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ்’ (Learn & Teach Productions) நிறுவனத்தின் சார்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஜமா’.

கதையின் நாயகனாக பாரி இளவழகன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சேத்தன் நடித்துள்ளார். மேலும் அம்மு அபிராமி, ஸ்ரீகிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

தெருக்கூத்து கலைஞர்களின் பாரம்பரியத்தில் வந்த அறிமுக இயக்குநரான பாரி இளவழகன் இந்தப் படத்தில் தயாரித்து, நடித்து, இயக்கியிருக்கிறார்.

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில், இதுவரை சொல்லப்படாத அவர்களது வாழ்க்கைப் போராட்டம் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையில் ஆண் கலைஞர்கள் பெண் வேடம் போடும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் அதிகம். அவர்களுடைய சொந்த ஊரிலேயே அவர்கள் கேலி கிண்டலுக்கு ஆளாவார்கள். கலை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றாலும் அங்கேயும் அவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள். இதனால், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய இத்தகைய பிரச்சனையைத்தான் இந்த ‘ஜமா’ படத்தில் எதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள்.

தெருக்கூத்து கலைஞர்களின் பிரச்சனைகளைப் பற்றி இந்தப் படம் பேசினாலும், இது வெறும் கலைப் படைப்பாக மட்டுமே இல்லாமல், அந்த விசயங்களை ஒரு ஜனரஞ்சகமான கதையோடு கூடிய படமாகவும் இது உருவாகியுள்ளது.

தெருக் கூத்துக்களில் பெண் வேடம் போடும் ஆண்களுக்கு ஜமாவில் எந்தவித அங்கீகாரமும் இருக்காது. அவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். சொல்லப் போனால் அவர்களால் இறுதிவரை தெருக்கூத்து வாத்தியார் ஆக முடியாது என்ற நிலைதான் இருக்கிறதாம். அதையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கொண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாயகன் ‘கல்யாணம்’ என்ற பாரி இளவழகன். தெருக்கூத்துக் கலைஞர்.

அவருடைய அப்பாவும், ‘தாண்டவம்’ என்னும் சேத்தனும் இணைந்து உருவாக்கிய ‘அங்கயற்கண்ணி நாடகக் குழு’வில்தான் இப்போதும் பெண் வேடமிட்டு நடித்து வருகிறார் கல்யாணம். தெருக்கூத்தில் ‘திரெளபதி’ மற்றும் பெண் வேடங்களில் நடித்து வருகிறார்.

பெண் வேடமிட்டு நடிப்பதாலேயோ என்னவோ கல்யாணத்துக்கு இப்போதும் இயல்பாகவே பெண் தன்மையுடனேயே வலம் வருகிறார். இதனால் ஊராரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் கல்யாணத்துக்கு திருமணத்திற்குப் பெண்ணும் கிடைக்கவில்லை. இது இவருடைய தாய்க்கு பெரும் கவலையாய் இருக்கிறது.

இந்த நிலைமையில் தாண்டவத்தின் ஒரே மகளான அம்மு அபிராமி கல்யாணத்தைத் தீவிரமாகக் காதலித்து வருகிறார். இந்தக் காதலை ஏற்க மறுக்கும் தாண்டவம், கல்யாணத்தைத் தனது குழுவில் இருக்கு நீக்குவதாகச் சொல்கிறார்.

ஆனால் தனது தந்தை ஆரம்பித்த அந்தக் குழுவை தான் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கல்யாணத்துக்கு, இப்போது தனக்குத் தேவை காதலா..? கூத்துக் குழுவா..? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

முடிவில் என்னவாகிறது..? கல்யாணத்தின் காதல் ஜெயித்ததா..? கூத்துக் குழு கல்யாணத்தின் கைக்கு வந்து சேர்ந்ததா..? அவருடைய திருமணம் என்னவானது..? என்பதுதான் இந்த ‘ஜமா’ படத்தின் சுவையான திரைக்கதை.

கதையின் நாயகனாக ‘கல்யாணமாக’ நடித்திருக்கும் பாரி இளவழகன், அந்த வேடத்தில் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்து விடும் அளவுக்கு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தெருக்கூத்து பரம்பரையில் வந்தவர் என்பதாலோ என்னவோ, சாதாரண நடிகருக்குக்கூட இல்லாத திறமையாக தெருக்கூத்துக் கலைஞன் வேடம் இவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

தெருக்கூத்தில் பாரி திரெளபதி வேடமிட்டு ஆடும்போது அவர் வெளிப்படுத்தும் உடல் மொழிகள் அபாரம்.. கிளைமாக்ஸ் காட்சியின்போது குந்தியாக நடித்து தனது மூத்த மகன் கர்ணனின் உடலைப் பார்த்துக் கதறியழும் காட்சியில் நம் கண்களை குளமாக்கிவிட்டார். அப்படியொரு அற்புதமான நடிப்பைத் தெருக்கூத்துக் கலையில் காண்பித்திருக்கிறார் பாரி.

அதேபோல் பாரி சாதாரணமாக கல்யாணமாக இருக்கும்போது பெண்ணாகவே தெரிவதும், பெண்களுக்கே உரித்தான குணாதிசயங்களை அவ்வப்போது காண்பித்துக் கொண்டேயிருப்பதும் சுவையானவை.

தன்னுடைய உடல் மொழியில் பெண்களுக்கான நடிப்பினை, அசைவினை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் பாரி இளவழகன். பாரி ஒரு சிறந்த நடிகர் என்பதைக் காட்ட இந்த ஒரு படமே அவருக்குப் போதும் என்றே சொல்லலாம்.

அந்தக் தெருக்கூத்து ஜமாவின் வாத்தியார் தாண்டவமாக நடித்திருக்கும் சேத்தனும் தன் பங்குக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கடைசியாக ‘விடுதலை’ படத்தில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சேத்தன், இந்தப் படத்தில் மனதில் வஞ்சம் வைத்து பழி தீர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சேடிஸ்ட் கதாப்பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.

எங்கே தனக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என்ற பயத்தில் கல்யாணத்திற்கு பெண் வேடத்தையே கொடுத்து அவனது வாழ்க்கையை நாசமாக்கியதோடு தன்னுடைய கவுரவம்தான் முக்கியம் என்று செய்யும் இவரது அனைத்து வேலைகளும் வில்லத்தனமானவை. அவைகளை செய்ய வைக்க அவர் எடுக்கும் முயற்சிகளும், காட்டும் நடிப்பும் செம வில்லன்டா என்று நம்மை பாராட்ட வைத்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி தன்னுடைய கண்களாலேயே பேசியிருக்கிறார். மிகத் தைரியமான, அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி நியாயத்திற்காக தனது அப்பாவையே எதிர்த்து நிற்கும் காட்சிகளிலும், தன்னை ஒதுக்க நினைக்கும் கல்யாணத்திற்கு கிளாஸ் எடுக்கும் காட்சியிலும் நம்மை பெரிதும் கவர்ந்திழுக்கிறார். பாராட்டுக்கள்..!

மேலும் பாரியின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணதயாளின் பண்பட்ட நடிப்பும், கூத்துக் கலையில் அவர் காட்டும் முனைப்பும், மகன் மீது காட்டும் பாசமும் நெகிழ வைக்கிறது.

மற்றவர்களைப் போல தன் மகனும் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைத்து, நினைத்தே உயிரைவிடும் கல்யாணத்தின் அம்மாவான மணிமேகலையின் உருக்கமான நடிப்பும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்.  

பூனை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்துவும் கல்யாணத்திற்குத் தூண்டுதலாக இருந்து நல்லது நடக்க உதவும் வேடத்தில் கவனிக்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கவனிக்கத்தக்க நடிகையாக தனித்துத் தெரிகிறார் நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சத்யா மருதாணி. அழகான முகம். கவர்ச்சிகரமான சிரிப்பு, வடிவான உடலமைப்புடன், கணீரென்ற உச்சரிப்புடன் “யார் இந்த அம்மா..?” என்று கேட்க வைத்திருக்கிறார். அடுத்தடுத்து வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் இந்தக் கூத்து நாடகத்தில் இணைந்து நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

கிராமமும் அதன் அழகும் ஒருபுறத்தில் வைத்து, இன்னொரு புறம் தெருக்கூத்து நடக்கும் இடம், கூத்தின் காட்சிகள் என்பதையும் அழகுற இணைத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபாலகிருஷ்ணா.

கூத்தில் அத்தனை சுற்றுச் சூழலையும் சிங்கிள் பிரேமில் கொண்டு வந்து உயிர்ப்பித்து நமது கண்களுக்கு ஒரு சினிமாவுக்குள் இன்னொரு சினிமா என்றவொரு உணர்வைக் கொண்டு வந்து கொடுத்துப் படத்தைப் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது ஒளிப்பதிவு. கூத்தில் கலந்து கொண்ட அத்தனை நடிகர், நடிகைகளின் நடிப்பையும் அவர்களுடைய மேக்கப்பையும் தாண்டி நம் கண்களுக்குக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நமது பாராட்டுக்கள்.

கலைக்கூத்து, தெருக்கூத்து நாடகங்களுக்கு இசைஞானியைவிட்டால் வேறு யார் இருக்கிறார்கள் இசையை இசைப்பதற்கு..!? காதல் பாடலும், சோகப் பாடலும், கூத்துப் பாடல்களுமாய் தனது இசையைத் தழுவ விட்டிருக்கிறார் இசைஞானி.

கிளைமாக்ஸ் காட்சியில் கர்ண வதத்தின்போது குந்தியின் புலம்பலை தனது உயிரோட்டமான பின்னணி இசையோடு நம்மை கேட்க வைத்து கண் கலங்க வைத்துவிட்டார் இசைஞானி.

நாடக்க் கதைதானே.. தெருக்கூத்துக் கதைதானே.. இதில் என்ன பரபரப்பு இருந்துவிடப் போகுது என்ற நினைப்பைப் புறந்தள்ளும்விதமாய் படத்தையே அடுப்பு மேட்டில் உட்கார்ந்து பார்ப்பதுபோல படத்தொகுப்பை செய்து நம்மை பரவசமாக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர். அதிலும் சாமிக்கு கெரகம் எடுக்கும் காட்சியில் “யாருக்கு சாமி வருதுன்னு பார்ப்போம்” என்று சவால்விட்டுக் காத்திருக்கும் காட்சியில் ஒரு திரில்லர் படத்தின் எமோஷனை கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

இத்திரைப்படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைக் கதையை, உண்மைக்கு மிக அருகில், பொய்யுரை கலக்காமல் கொடுத்திருப்பதோடு, அனைத்துத் தரப்பு மக்களும் இதை ரசிக்கும்வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநரின் திறமைக்கு நமது சல்யூட்.

இந்தப் படத்தை எழுதி இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாரி இளவழகனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். நடிப்போடு, இயக்கத்தையும் சேர்த்துக் கவனிப்பது அவ்வளவு எளிதல்ல. தன்னுடைய நடிப்பு எப்படியிருக்கும் என்ற அந்த கண நேர எதிர்பார்ப்பையெல்லாம் விட்டுவிட்டு எப்படி இந்த இயக்கத்தை செய்து முடித்தார் என்று தெரியவில்லை.

திரைக்கதையில்கூட இயக்குநர் காட்டியிருக்கும் கிராமத்துக் கதைகள் ருசியானவை. கல்யாணம் பெண் பார்க்கும் படலத்தில் காட்டப்படும் சுவாரசியங்கள். கூத்துக் கலையைப் பார்க்க வரும் பொதுமக்களின் விமர்சனங்கள், ரசிகர்கள் காட்டும் எதிர் முகப்பாவனைகள்.. 13 வருடமாக சாமியாடாததால் இருக்கும் பிரச்சினை.. கெரகத்தை யார் சுமப்பது என்றிருக்கும் பாரம்பரியக் கதை.. எது இல்லையென்றாலும் விவசாயம் சோறு போடும் என்ற நம்பிக்கை.. என்று பல்வேறு கதைகளையும் இந்தப் படம் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறது.

இதே தெருக்கூத்து கலை மற்றும் கலைஞர்களைப் பற்றி இதற்கு முன்பும் சில தமிழ்த் திரைப்படங்களில் சொல்லியிருந்தாலும், அவைகளில் இல்லாத ஒரு விசயத்தைப் பற்றி கையாண்டு, அந்தத் தெருக் கூத்துப் பற்றி முழு விவரணைகளையும், பாடல்களையும், மனனம் செய்யும் சக்திதான் அவர்களுக்கு மிக முக்கியம் என்பதோடு,  தெருக்கூத்து கலை மற்றும் அதன் கலைஞர்களை கெளரவமாக காட்டி, அவர்களின் மேக்கப் கலையையும் சரியாக எடுத்துக் காட்டி கூத்துக் கலையை அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

தமிழ் சினிமாவில் இந்தாண்டு மட்டுமல்ல; இதுவரையிலான சிறந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலிலும் இந்த ஜமா’ படம் இடம் பிடித்துவிட்டது என்பது மறக்க முடியாத உண்மை..!

RATING : 4.5 / 5

Our Score