full screen background image

‘புறம்போக்கு’ படத்துக்காக பிரமாண்டமான சிறைச்சாலை அரங்கம்..!

‘புறம்போக்கு’ படத்துக்காக பிரமாண்டமான சிறைச்சாலை அரங்கம்..!

புறம்போக்கு என்றால் பொதுவானது… யாருக்கும் உரிமையானது அல்ல என்று பொருள். இதுவரை கண்டிராத நடிக நடிகையர் தேர்வு, தூரம் பல சென்று இயற்கையின் இன்னல்கள் இடையே படமாக்கப்படும் கதை… ஆகியவை ‘புறம்போக்கு’ படத்தின் முக்கிய தூண்களாகும். இன்று சென்னையில் ‘புறம்போக்கு’ படத்தின் முக்கிய கட்ட காட்சி அமைப்புக்காக நாற்பத்தி ஐந்து நாட்கள் நடக்க கூடிய படப்பிடிப்பு துவங்கியது.

உண்மையான சிறைச்சாலைகூட இப்படிமிருக்குமா என பிரமிக்க வைக்கும் அளவுக்கு மாபெரும் சிறைச்சாலை அரங்கமொன்று சென்னை பின்னி மில்ஸ் படப்பிடிப்பு தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய’ சந்திரலேகா’ படம் எப்படி அந்த நடன காட்சியில் வரும் அரங்கமைப்புக்காக பெயர் பெற்றதோ அதே வரவேற்பை இந்த ‘புறம்போக்கு’ படத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலை அரங்கமும் பெறும் என ஆருடம் கூறுகின்றனர் திரையுலக பிரமுகர்கள்.

தான் ஈடுபடும் எந்தக் காரியத்திலும் சிரத்தையோடு முயற்சி எடுக்கும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தன்னுடைய கண்களால் வடிவமைத்து கைகளால் மெருகேற்றும் கலை இயக்குனர் செல்வகுமாருடன் இணைந்து இந்த மாபெரும் அரங்கை நிர்மாணித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் அந்த பிரமாண்டமான அரங்கையும், காட்சிகளையும் நேர்த்தியாக படமாக்கி வருகிறார். இந்த பிரமாண்டத்துக்கு மேலும் பெருமை சேர்க்க, அறுநூறுக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.

படத்தின் மிக முக்கியமான இந்த காட்சியில் ஆர்யாவும் ஷ்யாமும் கலந்துக் கொண்டனர். விஜய்சேதுபதி மற்றும் கார்த்திகா ஆகியோர் அடுத்த வாரம் முதல் இந்த அரங்கத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர்.

திரைப்படத்துக்கு தேவையானபட்சத்தில் செலவைப் பற்றி அஞ்சாமல்… திரைப்படத்தின் தரமே முக்கியம் என கருதும் UTV நிறுவனத்தினர் ஏராளமான பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஆகஸ்ட் மாத இறுதியில் UTV நிறுவனத்தினர் ஊடகத் துறையினரை அழைத்து இந்த பிரமாண்டமான அரங்கைச் சுற்றி காட்ட உள்ளனர்.

Our Score